Sunday, August 25, 2013

ரதியும் உடைந்த நிலவும்
கொஞ்சம் குண்டுதானென்று சொல்லும் அளவுக்கு மாநிறமாக இருப்பாள் ரதி. செவ்வாய்க்கிழமை மாலைகளில் கருகருவென அடர்ந்த தனது நீளக் கூந்தலுக்கு சீயக்காய் பூசி குளித்து நெற்றியில் குங்குமம் இட்டு வஞ்சிநாயகி அம்மனை உருகி உருகிப் பாடுவாள். அவளுடைய குரலில் ஒரு ஆன்மா இருக்கும், அந்த நேரங்களில் அவள் வீட்டைக் கடக்க நேரிட்டால் நமக்கும் ஒருவகையான சோகம் பீடித்துக்கொள்ளும். வருகிற மூன்றாம் தியதியோடு முப்பத்தைந்து வயது பூர்த்தி ஆகிறது ரதிக்கு. முதல் புணர்தலை இன்னும் புசிக்காத கன்னி அவள்.  

பெரிய குடையென விரிந்திருக்கும் ஆலவிருட்சத்தின் அடியில் பழுப்பேறிய அழுக்குத்துண்டினை முழுவதும் நரைத்த தன் தலைக்கு கொடுத்து நீள்வாக்கில் ஒருக்களித்தபடி படுத்துக்கிடக்கிறான் ரதியின் ஏழைத் தகப்பன் செல்லப்பன். நாட்டுச்சாராய நெடி அவனது மூக்கிலிருந்து துடித்துக்கொண்டிருக்கும் காற்றோடு மிதந்து மிதந்து கலந்துக் கொண்டிருந்தது. ஓரளவுக்கு வசதியானக் குடும்பம்தான் செல்லப்பன் பிறந்தது. வளையல் வியாபாரம் செய்துகொண்டிருந்த காலத்தில் பரிமளத்தை நேசித்துக் கல்யாணம் செய்துகொண்டவன், பரிமளம் வேறு சாதிப் பெண் என்பதனாலேயே வீட்டிலிருந்து சொத்து எதுவும் கிடைக்கவில்லை அவனுக்கு. அரைவயித்துக் கஞ்சி குடித்தாலும் செல்லப்பனும், பரிமளமும் சந்தோசமாக வாழப்பழகியிருந்தனர். ரதியை பிரசவித்துவிட்டு பரிமளம் செத்துப்போனதில் உடைந்து போனவன் தான் அதிலிருந்து மீண்டுவரவே இல்லை. அல்பாயிசில் பரிமளத்தைக் கொன்றுபோட்டாள் ரதியென முட்டாள்தனமாக சதா புலம்பிக்கொண்டிருப்பான்.

வசதியெதுவும் இல்லாவிட்டாலும் ரதியைத் தனக்குப் பிடித்திருக்கிறது, அவளை தனக்கு மணம் முடிக்கப் பேசுமாறு அப்பன் ராமசாமியிடம் கேட்டுக்கொண்டிருந்தான் சுரேந்திரன். ராமசாமி ஒரு சிடுமூஞ்சி, தையல்கடை வைத்திருக்கிறான், எப்பொழுதும் சம்சாரம் சரசுவை எதையாவதுச் சொல்லித் திட்டிக்கொண்டே இருப்பவன். வேறு வசதியானக் குடும்பத்திலிருந்து சுரேந்திரனுக்கு பெண் அமைத்து தருவதையே விரும்பிக்கொண்டும் பிடிவாதமாகவும் இருந்தான். சரசுக்கு சுரேந்திரனை நினைத்தால் பாவமாக இருந்தது. சுரேந்திரனாலும் அப்பனை எதிர்க்கவே முடியவில்லை கடைசிவரை.

செல்லப்பனின் இருப்பைச் சமன்படுத்த காலம் அனுமதிக்கவில்லை, அதன்பிறகு ரதி தனித்துப்போனாள். பக்கத்தில் செங்கச்சூளையில் அன்றாடக் கூலிக்குப் போய் வயித்தை நிரப்பிக்கொள்கிறாள். நகரத்தில் ஒரு கம்பெனியில் அக்கவுன்டன்ட் வேலை கிடைத்து அங்கேயே தங்கிக்கொண்டான் சுரேந்திரன். சொந்தக்கிராமத்திற்கு வருவதே இல்லை. சரசு செத்தப்ப மட்டும் ஈமக்காரியம் செய்வதற்காக ஒரேயொரு தடவை ஊருக்கு வந்துட்டுப் போனவன்தான். ராமசாமி பாதிநேரம் தையல்கடையைப் பூட்டிவிட்டு வீட்டிலேயே படுத்துக்கொண்டான். சரசுவைப் பற்றிய நினைவுகளை எவ்வளவோக் கிளறிப்பார்த்தும் அவனுக்கு எதுவுமே ஞாபகத்திற்கு வரவேயில்லை. திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாய் ரதியைப் பற்றி யோசிக்கத் துவங்கினான்.

“கருங்குறி தீண்டாத யோனியின் தனித்த இரவு வக்கிரமாக எம்பிக் குடிக்கிறது” ராமசாமியை.

ரதி உறக்கம் வராது புரண்டு புரண்டுப் படுத்துக் கொண்டிருந்தாள். அவள் செவ்வாய்க்கிழமை மாலைகளில் பாடுவதை நிறுத்தி வெகு காலமாயிற்று. உத்திரத்தில் அடர்கருப்பில் தலைகீழாய்த் தொங்கும் வௌவால் ராமசாமியின் முகத்தையே ரொம்ப நேரம் கண்கொட்டாமல் பார்த்துவிட்டு எதற்கோ ஆமா என்பதுபோல சிமிட்டுகிறது.

ஈர உடம்பை திவசத்திற்கு கொஞ்சமும் மீன்களுக்கு கொஞ்சமும் தின்னக் கொடுத்துவிட்டு குளத்திலிருந்து தனங்கள் இறைஞ்ச, தடித்தப் பிருஷ்டம் அசைய அசைய வீட்டிற்குச் சென்றுக்கொண்டிருந்தாள் ரதி. அவள் ருதுவானது முதல் அவளை எண்ணி சுயமைதுனம் செய்யும் ஊமைக்குசும்பி சிவனாண்டி அன்றும் அதேபோல் குளக்கரைப் புதரில் சோர்ந்து சரிகிறான், நாகசர்ப்பமொன்று தன் அழகான நாக்கால் அவனிடம் பேசிவிட்டு வெயில் மீது ஏறி நெளிந்து நெளிந்துச் சென்றது.

ரதியை சூளைக்கு வேலைக்குப் போகவேண்டாம், தன்னோடு ஒத்தாசையாக இரு என்று ராமசாமி அழைத்துவந்துவிட்டான், அவளும் சரியென்று நிரந்தரமாக அவன்கூடவே இருந்துகொண்டாள். ரதியின் அம்மணத்தை தொட்டுப்பார்த்து தொட்டுப்பார்த்து  எல்லா நேரமும் தூங்கிப்போவான் ராமசாமி. ஆரம்பத்தில் கிழவனை நினைத்து எரிச்சல் பட்டவள் போகப்போக அரைப்புணர்ச்சியைப் பழகிகொண்டாள். அது அவளுக்கு மிகுந்த துயரத்தைக் கொடுத்தது. ஒரு சாமத்தில் மரக்கதவைத் திறந்து வாசலில் அமர்ந்தவாறு இருள் அப்பிய வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். செல்லப்பனும், சிவனாண்டியும் போதைவெறியில் ஒருத்தரையொருத்தர் மூர்க்கமாகத் தாக்கிக்கொண்டிருந்தனர். வாய்விட்டுச் சிரித்தப்படி வீட்டிற்குள் நுழைந்து பெட்டியிலுள்ள சரசுவின் பழைய புடவையொன்றை எடுக்கிறாள், வௌவால் சப்திக்காது பறந்து சென்று உத்திரத்தைக் காலியாக்கியது.

“ஊர் மயானத்திற்கு மேற்கு பக்கமுள்ள குளத்தில் மெல்ல மெல்லக் குதிக்கிறது சூரியன்”

ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் சுரேந்திரன், லட்சுமி, சமீபத்தில் வயதுக்குவந்த மகள் ரதி அனைவரும் முகத்தில் சந்தோசம் கொப்புளிக்க தாங்கள் வசிக்கும் பெருநகரத்தின் மாடிவீட்டிலிருந்து சினிமாவுக்காக கிளம்பிச் செல்கின்றனர். பழுப்பேறிய அழுக்குத்துண்டினால் தன் வியர்த்த முகத்தை துடைத்தபடி வாசற்கேட்டில் ஒரு காவலாளியைப்போல நின்றுக்கொண்டிருந்தான் ராமசாமி. தெருமுக்குத் திரும்பும் வளைவில் ரதி மட்டும் திரும்பிப் பார்த்து சைகையிக்கிறாள் நேரத்திற்குச் சாப்பிடுமாறு.

***

No comments: