Wednesday, July 13, 2011

பிறகு




தற்கொலை செய்து
இரு தினங்களுக்குப் பிறகு
மிக அழகாக ஒப்பனை செய்துகொண்டு
ஒரு மெல்லிய புன்னகையோடு
வந்தமர்கிறாள் அபர்ணா.

அந்த அபத்த கனவையும்
அந்த வதையுள்ள ஏமாற்றங்களையும்
அந்த முகமூடி மனிதர்களையும்
அந்த துரோக ஊசியின் கூர்முனையையும்
அந்த நம்பிக்கையின் உடைந்த சில்லுகளையும்
அத்தனை நிதானமாகப் பேசத்துவங்குகிறாள்.

பிறகு இருவருக்குமாக
நல்ல சுவையுடைய தேநீரை
தயார் செய்கிறாள்.

நான் என் கனவின் ஓட்டைகளை
சரி செய்வது பற்றி
தீவிரமாக எண்ணத் துவங்குகிறேன்.

சலனமேதுமின்றி அவள்
என் விரல்களை கோர்த்தவாறு
தான் செத்துப் போயிருந்த தன் கனவை
சின்னச் சின்னத் துண்டுகளாக்கி
தேநீரோடு சேர்த்துப் பருகுகிறாள்.

நானும்
நானெனும் பிம்பமும்
கொஞ்சம் கொஞ்சமாக
உடைந்து சரிகிறோம்.

Monday, July 4, 2011

பெருவனம்







பெய்யாத மழையின் நிலமெங்கும்
பிரிவின் வாதை
என்கிறேன் நான்.
அது
அன்பின் வதை, 
பேய்மழையின் நிலமெங்கும் நீ
என்கிறாள் அவள்!


நன்றி உயிரோசை..