Saturday, March 23, 2013

ச் என்றால் நீ, சீ என்றால் நீங்கள், ச்சீ என்றால் நான்
இந்த மன நிலையை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள
நின்று கொண்டிருப்பது
திருட்டுப் பூனையின் அடுப்பங்கரை வெயில்

மேலும்  

அவளது சீலையின் வியர்வைக் குளிரின்
ஒற்றையடிப் பாதையில்
குருட்டுக் கண்களோடு துயில் எழுவது
நண்பனின் நம்பிக்கை

அவ்வளவே.


Friday, March 22, 2013

***
தாமதமாக வந்திறங்கிய ப்ரேதம்
மனுஷ உடல்

யாரும் பதற்றம் அடையாதீர்கள்
மனம் பிறழ்ந்தவன்
கையில் அடைந்த ரோஜாவாகிச்
சாகும் அவள்
முன்

நானே ஆனேன்
அவன்.

பிறகு
முடிச்சிடப்பட்ட ரகசியங்களின் மேல்
மூத்திரம் பெய்யும் நாய்களாகிய
உங்களுக்கு
ஞாபகம் இல்லையா
பிசாஸின் குரல்

ஏதோ ஞாபகத்தில் எழுந்து நடக்கிறேன்
நானும்


***
ஒவ்வொரு துளி நதியிலும்
ஒவ்வொரு துளிக்
கடல்


ஆராதனா எனும் பேய் 41
நன்றாக ஞாபகம் இருக்கிறது
திருச்சிராப்பள்ளி ரெயில்வே ஸ்டேசனும்
கலசல கலசலக் கூட்டமும்
உனக்கு நினைவில் வழிகிறதா ஆராதனா
அந்த முத்தமும்
பெருங்காதலெனப் படர்ந்தக் கண்ணீரும்

தொடர்ந்த முத்தம் ஒரு வதை
கேவல்கள் கூடிச் சிதறும் கண்கள்
கொத்தி உமிழும் கணம்
பிரிந்து செல்தல் வாதை

தொடர்ந்த முத்தம் ஒரு வதை

இந்தக் குளிர் காற்று
ஏன் இவ்வளவு வெயிலில் மிதக்கிறது

சுண்டல்காரப் பையன்
கல கலவெனச் சிரிப்புருளும் தர்ப்பூசணி யுவதி
என்ன வித்தியாசம்?

தெரிக்குது
நாயி..
நாய்யி..
ஓரமா போயித்தொலைடா

( 7.15 PM )
ஷங்கர் கொஞ்சம் நேரத்த வரேன்னார்

இப்பலாம் வர வர ஜாஸ்தி சிக்கடிக்க ஆரம்பிச்சுடுச்சு
ஆபாயில்னா அதுக்கு உயிர்

ம்,
ஒரேயொரு முத்தம்..

ம்
.......
.......

தொடர்ந்த முத்தம் ஒரு வதை

***

***
எத்தனை பட்டாம்பூச்சிகள் பறக்கிறது
இம்மனதுள்
ஒற்றை அந்தியில்
ஒரு நீ

போதும் இவ்வுலகு.


***

பார்க்கவே கூடாத சமயத்தில்
திரும்பியிருந்த தொலைவில்
நீ இல்லை


அவ்வளவே
மழுங்கடிக்கப்பட்ட இந்த மண்டைக்குள்
சுற்றிக்கொண்டிருப்பது
கூர் தீட்டப்பட்ட கத்தி.

அப்புறம் ,

சுகமாகக் காற்று வீசும்
இந்த அறையில்
ஊர்ந்து கொண்டிருந்தது
அந்தத் தடித்த சர்ப்பம்***உலகத்திலிருக்கிற எல்லா ரோஜாவையும்
அதன் காம்புகளையும் சேர்த்தே
நட ஆசை உனது யோனியில்.

எது நிஜம்
எது பொய்
?!

நிலை
பற்றிக்கொண்டிருக்கும்
ராகுலின் கைககள்
இன்னும் இன்னும் இறுக்கட்டும்
கோகிலா அக்காவின் கரங்களை

உனக்குத் தர இயன்ற
அபத்த
மூர்க்கம்

சுடர் பட்டு
உதிரும்
இந்த நல் இருப்பில்
ஏன் நெளிகிறது ?


நினைவு தப்பியக் கோமாளி
விமானம் பறக்கும் ஒவ்வொரு முறையும்
மயானத்தில்அணைகிறது
எங்களுக்குள் சடலம்

மாதவிடாய் கால
பெண் இருப்பென அடைகிற
மனசு
கூடியவர்கள்
நலம் வாழ்க

மேலும்
புணர்வெல்லாம்
ஆகுமா
புணர்தல்

தோற்றப் புணர்தல் ஒன்றும்
நிச்சயக்கப்பட்ட அழுகைக்கல்ல
இல்லாமை ஆகுக

எறிப்படக்குத் தேடியலைந்த தீபாவளி
மறுதலிப்பிற்கு ஆகாது
அதுவெனவே
நிகழட்டும்
இயல்பு

அன்பைத் தவிர்த்து
அதாகப்பட்டது எதுவாகினும்
கேளுங்கள்
சொல்லப்படமாட்டாது

நன்றி..
உரைக்கப்படாமலிருத்தல்..

பயிலும் நலம்.

பறந்தது
பரந்தது விமானம்
பறக்கும்
பறக்கிறது விமானம்

நில்லாமல் / இல்லாமல் போகுக
இருப்பு(ம்)
சார்ந்தவைகளும்.


Saturday, March 9, 2013

***

எனக்கு இப்போதிருக்கும் ஒரே பேராவல்
நான் மரணித்தப்பிறகு
உனது உயிர் எங்கேப்போகுமென்பது மட்டுமே

நீ
பேரன்போடும்
பெருங்கருணையோடும்
"ஆகக்கூடிய சிரத்தையோடும்"
நிர்மாணித்த
எனக்கான ஒருவழிப்பாதையில்
மிகுஆசுவாசமாக முன்னேறிக்கொண்டிருக்கிறேன்..
ஆதி தேவியே!


முத்தம்போ
என் வான் நோக்கி
கடற்கரைத் தாழ்வாரத்தில் நிறைந்துப் பரப்பும்
கொஞ்சம் நுரையை அள்ளித் தருகிறேன்

***மழை ரசனை
வெயில் பேய்மழை ரசனை

எனது வெளிச்ச நதியெங்கிலும்
துள்ளிப் பாய்கிறது
உன் அரிதாரக் கண்கள்

அலைதலின் முற்றுகை

கோவில் மதிற்சுவர் நரகல் மணம் கூசுவதொத்த
மனம் எனது

தவறவிட்ட
பிடித்தே ஆகவேண்டிய தொடர்வண்டியை
மழையும் வெயிலும்
துரத்திக் கொண்டிருக்கிறது

மேல்நோக்கி
கீழிறங்கி
அந்தரத்தில் மிதந்து அலையும்
இறகு ஒன்றினைத் தனதாக்க
நெஞ்சு விம்ம விம்ம
கைகளை நீள.. நீள... நீட்டுகிறேன்

ஓணான் அடிக்கும் குழந்தைகளை
யதேச்சையாய்க் கடக்கிறேன்

தொப்பலென
எனக்கான உனதான தாய்மடியில்
தலை வைத்து சாய்ந்து கொண்டேன்

***

நன்றி நவீன விருட்சம் 

இருண்மையின் முதல் துளியிலிருந்துஅதன் சமயம்
கூடு அடையும் பறவை
யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை
நீ தொடர்வதைத் தொடர்

நன்றி எதுவரை.நெட்


நிறம்காமத்தைக் கொண்டாடப் பணிக்கிறாய்
எல்லாவுமாய்ச் சிந்திப் போகிறேன்

கண்ணாடிச் சில்லுகளில்
முகம் முகங்களாவதாய் வளர்கிறது
இரவு

நன்றி எதுவரை.நெட்


ஒரு பெருங்கணம்எடுத்துக்கொள் என நீட்டுகிறாய்
மௌனத்திலிருந்து விடுபட்ட
சிறு புன்னகையை

ரோஜாவின் முட்களிலிருந்து
ஒரு துளி இரத்தம் செய்து
பைத்தியக்காரப் புன்னகையாக்கினேன்
அப்புன்னகையை

பழைய மௌனத்தின் குதிகாலிலிருந்து நடுங்கி
புதிய மௌனத்தின் குறுநெஞ்சின் மேல்
சாய்ந்து விழுகிறது
ஒரு பெருங்கணம்..!

நன்றி எதுவரை.நெட்