Thursday, August 30, 2012

அசுத்த சமாதானம்






பிள்ளை மொழி பேசுபவளின்
உதடுகளில்
ஒரு பொழுதும் அல்லாத
பனி நடுக்கமாய் 
பிரிவின் உடைந்த உடைந்த சொற்கள்

இறுதியாக
பிறிதொரு பொழுதில் சந்திக்கலாம் என்கிறாள், 
அசுத்த சமாதானம்
ஞாபகப் பிழையாய்
உயிர் உண்ணும் என்கிறேன்

கேவல்கள் 
ஸ்பரிசத்தின் இசையாய்
நேசத்துள் உருள்கிறது!

***

நன்றி கல்கி மற்றும் வெயில்நதி சிற்றிதழ் 

விடுதலை



நான் பெயர்அறியாப் பறவைக்கு இரையானேன்

காதலுறக் களவாடியப் பொழுதுகளை
சிணுங்கலாகப் பரிகாசிதேன்,
எச்சிலைப் பருகத் தந்தாய்

பூந்தோட்டம் செய்தேன் யோனியில்
ஆப்பிள் பழங்களை உண்ணத் தந்தாய்

ஒருநாள் இதுவரை நீ செல்லாத  
ஒரு தீவுக்கு அழைத்துச் சென்றேன்

நீ கடல் குடித்து விடுபட்டாய்

*** 
  
நன்றி வெயில்நதி சிற்றிதழ் 

சபா-அல்-கிர்



கால்களை ஓங்கி ஓங்கி மிதிக்கலாம்
நிலத்தில் கிடக்கும் ஒரு கல்லை சடாரென எடுத்து
எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாய் வீசலாம்
நிர்வாணமாகக் குளிக்கலாம்
ஓவெனக் கத்தி அழலாம்
வெறித்தனமாகக் கரமைதுனம் செய்யலாம்
வேலி தாண்டி வெளிச்செல்ல இயலாத தேசத்தில் சம்பாதிக்க வந்ததெண்ணி
அடுக்குப்படுக்கையில் புரண்டுக் கொண்டிருப்பவனை எழுப்பி எட்டி உதைக்கலாம்
தனக்கு மிகவும் நெருக்கமான யாரொருவருக்காவது தாய்தேசத்தின் இச்சாமத்தில் தொலைபேசி
இருப்பதிலேயே மிகவும் மோசமான வார்த்தைகள் கொண்டுத் திட்டித் தீர்க்கலாம்
தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கலாம்

மேலும்
மூர்க்கத்தனமாகப் பொடிந்து கொண்டிருக்கும் நினைவுகளின் வாதையை
டீ பேக் மற்றும் ஹாட்வாட்டரில் சக்கர்-ஆகக் கலந்துக் குடித்துவிட்டு
மீண்டும் டியுட்டிக்குச் செல்லலாம்
புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டோடு


***

சபா-அல்-கிர் (அரபிக்) -- காலை வணக்கம்

Monday, August 27, 2012

ஆமென்



ஒரு குஞ்சுப்பறவையென
தத்தித் தத்திக் கொத்துகிறது
அன்பின் கூட்டுக்குள்
நம்மையும்
நமதிந்த ஆகாசத்தையும்

நேசத்தின் பெருங்கடல்!

நன்றி உயிரோசை


அப்பொழுது




பெருங்கோபத்தில்
சாத்தான் மௌனத்தை இரைந்துவிட்டு
வெளியேறிக்கொண்டிருந்தான்
கடல் குடிக்க

நான் கடவுளாகிய இரவில்
இரவு 
என்னவாக இருந்திருக்கும்

நன்றி உயிரோசை



Tuesday, August 21, 2012

17-M ரூட்டில் வழக்கத்தைவிட ஜாஸ்தியான டிராபிக் ஜாம்








பெருவிபத்து பற்றிய செய்தியையும்
இன்னும் பருவம் எட்டியிராத அம்மா இல்லாத எனது மகள் 
புணரப்பட்டு உயிரில்லாது கிணற்றுள் கிடைத்த செய்தியையும்
விளம்பர இடைவேளைக்குமுன் சொல்லி முடித்திருந்தாள்
நிறைந்த வேலைப்பாடுகளுடைய நெக்லஸ் அணிந்த வாசிப்பாளினி

குழந்தைகளுக்கு டியுசன் எடுத்து
மிஞ்சிப்போன வாழ்கைக்கு யாசகம் செய்வாள் தன்னை
வேளாங்கண்ணியின் இளம் மனைவி 
அப்பாயில்லாத சங்கரின் அம்மாவோ பித்துப்பிடித்தவள் ஆகியேவிட்டாள்
பயணத்தில் இருந்த அறிமுகமில்லாத இன்னும் சிலதுகள்
கை கால்கள் விடுபட்டு அரசாங்க ஆஸ்பத்திரியில்
வலி கொள்ளாது கத்திக் கொண்டிருக்கின்றன

பாவம் அந்த துறு துறு நான்கு பள்ளிச் சிறுவர்கள்
சொர்க்கத்தில் கடவுளர்களோடு எண்ணெய் வறுபடுகின்றனர்

கவிழ்ந்த பஸ்ஸின் தப்பிய இயக்குனர்கள்
வழக்குகளோடு பிதுங்கிச் சாவார்கள்?

அதே விபத்தில் இறந்துபோன நான்
சொர்க்கத்தில் சாத்தானோடு ஒயின் அருந்திக் கொண்டே
நாளை உங்களோடு பேசுகிறேன்

அதுவரை நீங்கள் "உச்" கொட்டுங்கள்
செத்தவர்களுக்கெனவும் 
பிழைத்தவர்களுக்கு ஆகவும்
நிகழ்ந்த விபத்தின் காரணத்திற்கான
அனுமானங்களைக் கொறித்துக் கொண்டு

நன்றி உயிரோசை


அவரவர் சித்திரம் அவரவர்க்கு







உறக்கத்திலிருந்த கனவிலிருந்து
மெல்ல வெளியேறுகிறது
குரங்கு

உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன்
நான்

முன்பே
என்னிடத்து வந்து போயிருக்கலாம் நீங்கள்
நீங்களாகவோ
நீங்களல்லாமல் ஆகவோ

நன்றி உயிரோசை


Monday, August 20, 2012

பிரபஞ்சம் நனையும் தீர்த்தக் கரையினிலே







ஞாபகக் காட்டில் பைத்திய மழை வலுக்கும் நேரம்
உனது மௌனக் குடையில்
எனது முத்த விரல்கள்
ரீங்கரிக்கும்
உச்ச ஸ்வாகதத்தில்
பெரும் ஸ்பரிசப் பாடலொன்றை

(தோழி ஆராதனாவுக்கு)

நன்றி உயிரோசை


Saturday, August 18, 2012

ஆம்






அதே ஆற்றில்
அதே நீந்துதலின் ஒரு தருணம்
பிடிபடும் மீன்

நன்றி மலைகள்.காம்


ஆமென்






பெய்நிழல் பேய்நிலம் உண்டேன்
ஜென்ம பந்தம் உனக்கு
தெய்வ திருப்தி எனக்கு

நன்றி மலைகள்.காம்


இருப்பது ஒரு வாழ்வு






கடல் மேல் துள்ளும் கடலை
அலையெனச் சொல்லிச் செல்வதில்
எச்சலனுமும் இல்லையெனக்கு

நமது புணர்வை ஒத்துக் கேட்கும்
நீண்ட மூக்குடைய இரவினிடத்து

நன்றி மலைகள்.காம்


தீராப்பிரியம்






சுனையூறி சுனையாற
அவிழ்க்கிறேன் தனிமையை
கனவுக்குள் விழுந்த புரவியின் நிழல்
பிரிவுக்கு முந்தைய அவனது விரல்களாய்

நன்றி மலைகள்.காம்


நம்பிக்கையின் வரைபடம்






தனிமையின் இறகுகளை
ஒவ்வொன்றாய்
ஒவ்வொன்றாய்
பிய்த்துக்கொண்டிருந்தேன்

புறக்கணிப்பின்
அவமானத்தின்
துரோகத்தின்
நம்பிக்கையின்மையின்
சிறகுகள் நீள நீளமாய் 
வளர்ந்துக்கொண்டேயிருந்தது அதன் போக்கில்

பரிச்சயமற்ற ஓர் உருவத்தை
ஒரு குழந்தையைப்போல
வரையத் துவங்கினேன்
ஒரு நிராதரவானச் சந்தர்ப்பத்தில்

நிலம் முட்டிய மழையாக
நிறைந்து வரும் காடு அணைய
என்றதொரு நம்பிக்கையில்

நன்றி மலைகள்.காம்


அசாதாரணத் தருணங்கள்



அழுக்குச் சட்டையோடும்
மழிக்கப்படாத தாடியோடும்
வந்து கொண்டிருந்தான் அவன்
எங்கிருந்தப்பா வருகிறாயென்றேன்
கவிதைக்குள்ளிருந்து என்றான்
எங்கப்பா போகிறாயென்கிறேன்
கவிதைக்குள் என்கிறான்
ஒரு சாதாரணனை
ஒரு சாதாரணனென எப்படிச் சொல்வது?


நன்றி மலைகள்.காம்









Thursday, August 16, 2012

***







வெயில் புரண்டோடும் மணல் நதியில்
மீனாக இருந்தால் என்ன
வலையாக இருந்தாலென்ன 

***






இத்தனை சுதந்திரமாக இதுவரை பறந்ததில்லை இப்பறவைகள் 
கம்பிவேலி இடப்பட்ட கூடுதான்
எத்தனை பெரிது

***



இந்த உலகம்
எவ்வளவோ தந்திருக்கிறது

எவ்வளவு காதல்
எவ்வளவு அன்பு
எவ்வளவு நட்பு
எவ்வளவு நம்பிக்கை
எவ்வளவு ஏமாற்றம்

இந்த உலகம்
எவ்வளவோ தருகிறது..

திருப்பித் தரவேண்டும்
ஒன்றே ஒன்றுதான் உள்ளது என்னிடம்
தற்கொலையில் நிற்க வேண்டும்

அத்தனை வலி ஏற்புடையது அல்ல இவ்வுடல்
தயவுசெய்து யாராவது கொலை செய்யுங்களேன் என்னை.
 

Tuesday, August 14, 2012

செய்திகள் எல்லா நேரங்களிலும் செய்திகளா என்ன?






கண்கள் இறுகக் கட்டிக்கொண்டிருந்தது
மாய போதையின் விரல்கள்

இரண்டு சின்னச் சின்னக்குழந்தைகளையும்
கொன்று விட்டாயிற்று
நாங்கள் இரண்டு, மேலும் மீந்தவை..! 
அதிக நேரம் ஒன்றும் இல்லை.  

ரகசிய அழைப்பின் தொடர்பு எண்ணில்
எலக்ட்ரானிக் பைத்தியக்காரியின்
வாடை வீசக்கூடும்
இனி  

நேசக் காளான்கள் முளைக்கும்
பிறிதொரு மழை இரவில்
துரோகத்தின் கண்களை அர்த்தப்படுத்த கூடும்
உங்களில் யாராவது


நன்றி உயிரோசை




இருள் வெளி ஒளி






மனம் புரட்டும் பக்கங்களில்
நதி குளித்துக்கொண்டிருந்தது
கடலில்

செய்வன திருந்த செய்யென்பதில்
எல்லாமும் மிளிற

நன்றி உயிரோசை




***






நிவர்த்தியற்ற நிராகரிப்புகளுடனான
சொற்ப சந்தர்ப்பங்களில்
இருத்தலுக்கும் இருத்திக்கொள்வதற்கும்
அவசியமாகிறது அன்பு

குறிப்பாக,
இல்லாமல் போவதற்காக அல்ல
மேலும் மேலுமான அன்பு..


Saturday, August 11, 2012

மேலும்






அன்பு செய்வதை விடுத்து
கொலை செய்தலை கையாள்தல்,

பூதாகரமான அன்பிற்கு
நீ என்னையும்
நான் உன்னையும்
அறிமுகப்படுத்தியதின்
முன்னமே
தன் தற்கொலை டைரியில்
பதிந்து வைத்திருந்ததின்
குறிப்பொன்றை
சற்று முன் வழியில் கண்ட
அதிகம் பரிச்சயமுள்ள
நிமிர்த்த முடியாத வாலுடைய
ஜீவன் ஒன்று சொல்லிப் போகிறது
தன் பாஷையில்

மேலும்
உன்னிலிருந்து
திரும்பிக்கொண்டிருக்கிறேன்
உன்னிற்கு


நன்றி நவீன விருட்சம் 


Tuesday, August 7, 2012

இல்லாத வாழ்கை இருப்பதாக ஆமென்!







மன மிருகம் உயிர்ப்பிக்கும் 
வேட்கை நெருப்பின் சூழல் நின்று 
வளர்க்கிறேன் உன்னை
மௌனத்தின் எல்லா திசைகளையும் 
பொற்கரம் கொண்டு ஆள்கிறாய்
சாம்பல்நிற வான் பூமி குதித்து 
பெரும் நகங்களால் ஆர்ப்பரிக்கிறது 
இல்லாத வாழ்கை இருப்பதாக ஆமென்!
பூனையொன்று ஓடிக்கொண்டிருக்கிறது 
மியாவ் மியாவ் இல்லாமல்
உப்பிடப்பட்ட மீன்கள் காய்ந்து தேம்பி
  
இன்னும் சற்றைக்குள் நீயும் போவாய் 
நானும் போவேன்

யாதுமற்றது தான் எல்லாவுமே
யாதும் கொண்டதுதான் எல்லாவுமே

சற்று தள்ளியே நில்








மழை உடைந்து வெயில் உண்ணும் நிழல்
எங்கோ பறக்கும் பறவை 
சருகு மொய்க்கும் சப்தம்
வேர்கள் விரிசல்கள்
இறகு சிறகு நிராகரிப்பு அரவணைப்பு
அன்பு அவமானம் ஏக்கம் தாகம்
காமம் காதல் ஆசை மயக்கம் 
துரோகம் நம்பிக்கை 
இன்ன பிற
வரைபவன் கிழித்தெறிபவன்

நன்றி உயிரோசை

Wednesday, August 1, 2012

ஆக..



முழுமையாகக் கைவிடப்பட்டவன்
என்று உணரும் கணம்
நீங்கள் தூக்கிச் செல்லும் படியான கனத்தில்
இருக்கப் போவதில்லை

ஒரு சாதாரணக் கவிதையின்
எல்லா அம்சங்களையும் உடைத்து
ஒரு கவிதை வேண்டும் என்கிறார்கள்

நான்
புறக்கணிப்புகளையும்
நிராகரிப்புகளையும்
அவமானங்களையும்
பற்றியே சதா புலம்பிக் கொண்டிருக்கிறேன்

நன்றி வல்லினம்.காம்



***






நமது நாம் கைகோர்த்தபடி நடந்துகொண்டிருக்கிறது
நினைவுகளைக் கொறித்தபடி
நீ இங்கும் நான் அங்குமாய்