Friday, April 30, 2010

இம்முறை கண்டிப்பாய் சொல்லப்பட்டிருக்கும் காதல்!



சொல்லியே ஆக வேண்டும்!
எப்படி என்பதுதான்
இன்னும் பழகிவிட முடிவதில்லை..

இப்படித்தான்
என்றால்..
அப்படியில்லையே
அப்படி வேண்டாமே
அடிக்கடிச் சொல்லிக்கொள்கிறேன்
எனக்கு நானே!

எத்தனை முறை
ப்ராக்டீஸ் எடுத்துச் சென்றாலும்
ஒரு முறையும் சொல்லிவிடுவதாயில்லை!

அதே மாதிரியானதொரு
சொல்லாதச் சொல்லோடுதான்
நடை கொண்டிருக்கிறேன்
இம்முறையும்!


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=7420:2010-04-30-03-56-19&catid=2:poems&Itemid=265

நன்றி கீற்று.. 

Tuesday, April 27, 2010

நேசங்களின் கூவல்..



பயணங்களில்,
பின்னிருக்கைகளின்..
தடம்பதிந்த வெற்றிலைச்சிவப்பில்
அடையாளப்படுத்தப்படும்
அவர்கள் முதியவர்களென..

வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகள் வளர்க்கும்
மழலைகளின் வயது கண்டு
தேடல்கள் தற்காலிகப்படநேரும்.

ஓரர்த்த ராத்திரியில்,
யர யரப் பறக்கும்..
எல்லோரையும் போல
எனக்கும் கனவுகள்..

நட்சத்திரங்களை வாசிப்பவர்கள்
இப்-போதைக்குக் குறைவென்றே
இருத்தல் கூடும்.

அவள் வராத வருகையை
சில பொழுதுகளில்
மழையுரைத்து நகர தீரும்!

நேசங்கள்..
நெய்திருந்த கவிதைகள்
நிரம்பி இசையும் காற்று வீசியதும்
முடிவுற்றிருக்கும் ஒரு மரணம்.!


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2833


நன்றி யிர்மை.

Sunday, April 25, 2010

குறிப்பின் தொடர்ச்சி..


கடைசி உரையாடலென கரைக்கப்பட்டிருந்தது ,
தேநீர் தீர்ந்தபின்னான கைக்குட்டையின் நுனியில்
ஒரு காதலும்
ஒரு நட்பும்
இரு மௌனமும்..!
அம்மேஜையின் விளிம்பில் இன்னும்
கேவிக்கொண்டிருக்கிறது கண்ணீர்துளியொன்று
கைகோர்க்க ஆளின்றி..


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=6895:2010-04-25-05-32-16&catid=2:poems&Itemid=265

நன்றி கீற்று..

Thursday, April 22, 2010

...................



அன்பின் ஆதாரங்களைத் திரட்டுதலில்,
கவனக் குறைவின் முரட்டுத்தனத்தில்..
பிய்ந்த எறும்பொன்றின் தலை, 
மிகத்தெளிவாய்..

...................



ஜன்னல்கள் திறக்கப்படுகிறது..
முன்னமே மழை தூறுகிறது..
அவள் வருவாளா !!

ஜன்னல்கள் அடைத்துக்கொள்ளப்படுகிறது..
மழை நின்றுவிட்டது..
வந்தவள் அவள் இல்லை !!

...................



துண்டு வானமும் ..
சிமிட்டும் மீன்களும்..
இளைப்பாறும் கடலும்..
தனிமையின் இசையும்..

Monday, April 19, 2010

அரேபிய ராசாக்கள்..10



பெருமழைக்குப் பிறகான கருத்த வானத்தைப்போலவோ..
பிரளயத்தில் இடம்பெயர்ந்த சிறுதவளையினை யொத்தோ..
ஒற்றைச்சலிப்பில் ,
உயிர் மறுத்தது.. மூச்சின் வெம்மையினை..!

பின்..
தனிமையின் ஜன்னலில்..
இரவை நெரித்து நெருங்குவதாய்
வரையப்படுகிறது இத்தாகம்..!

இப்பிரிவின் வலியென்பது..
மழலை புன்னகை பிரசவிக்க வாய்ப்புமறுதலித்த
விலையுயர்ந்ததொரு பொம்மையைப் போன்றதென
அறிந்திருக்காமல் விட்டிருந்தேன்
விமானத்தில் பறத்தலின்போதோ !!

கடந்த முழுஆண்டு தாகத்திற்குக் கிடைத்த
கொழுத்த இரையாக ..
சொல்லொலி முத்தங்கள்!
இவ்வரேபிய அறைமுழுதும் அலைந்தாடுகிறது
மூச்சுவிட நேரமற்று ...!!

வாங்கித்தரா புதுகொலுசைக் காரணங்காட்டி
இன்றிரவும் அவளுடன் பிறந்தநாள் கொண்டாடலாமென..
வெளிச்சத்தின் மிகக்குறைந்த ஒளி ,
தொலைபேசியிலொரு பூங்கொத்தையோ
கிறுக்கல்கள்மொழியுடன் கூடிய கடிதத்தையோ
நிரப்பிவிட்டு நிசப்தமாகிறது..!

 http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2808

நன்றி  உயிர்மை.

கவன குறிப்பெடுத்தல்..!



நீலம், மஞ்சள், கரும்பச்சை...
நிற உடையணிந்த குழந்தைகளில்சில
பால்-ஸ் விளையாட போகுமுன் ,
அதிலொரு குழந்தை உன்னை சேர்க்கவும்..
மற்றொன்று வேண்டாமெனவும் கையசைக்க..
எப்பக்கம் உன் நகர்தலிருக்கும்.?
நீ இப்போ சொல்வாயானால்..
உன் வயதொத்த பலர்
பால்யவாசத்தில் மூச்சு முட்டக்கூடும்..!

 http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004186&format=html

நன்றி திண்ணை..

Thursday, April 15, 2010

பொம்மைக்கவிதைகள்!!


மழலைகளின் புன்னகை கண்டு
பாலையெங்கும் பொம்மை சொட்டும்
அதீத அற்புதமுண்டு !

மழலைகளின் அழுகை
பல்லாயிரம் தோல்வி பொம்மைகளை
நிர்மாணிப்பதும் உண்டு !

ஒரு வீட்டில் கண்டது!
அண்ணன் ஒழிக்கிறான்
தங்கை அழுகிறாள்
மூக்குச்சப்பிய பொம்மை ரசிக்கிறது !!

முத்தமிடும் குழந்தை
முத்தம் கேட்கும் குழந்தை
பரிசு பொம்மை
எவை அழகு !

பல்முளைக்கா மழலை
பாடும் பொம்மை
இரண்டும் அழகு !

குறிப்பாக இதைச்சொல்லியாக வேண்டும்
குழந்தைகளும் பொம்மைகளும் ஒன்றென
நிச்சயிக்கும் வண்ணம்
உடைமாற்றி ரசிக்கின்றனர் பலர் !

வயிறு தள்ளாது
குழந்தை பெற்கும்
பொம்மைக்கவிதை அழகோ அழகென
யாரோச்சொல்வது
ஷ் ஷ் ஷ்.. ரகசியம்.. !!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5743:2010-04-15-03-51-04&catid=2:poems&Itemid=265

நன்றி கீற்று.. 

Monday, April 12, 2010

ஓர் யுகத்திற்கான கனவு..

சற்றும் எதிர்நோக்கவில்லை
சடாரென கடந்திருந்தது
துளியென அவ்வொலி..

சுதாகரிப்பின்முன்
காலியாகியிருந்தது அந்நிமிடம் !

மிகநீண்ட மௌனம்..
ஒருவித மென்மயக்க இசையை
நெகிழ்ச்சியுடன் மீட்டுவதாய், அவள்
புன்னகைக்க தயார்படுத்துகிறாள் தன்னை..!

தேநீரின் சிணுங்கலில்
வெட்கம் தாங்காது மாலை
இனிப்புறுகிறது !!

சற்றும் எதிர்நோக்காத
அவ்வருகைக்கான காத்திருப்பு,
மூச்சுக்காற்றில் உவகை
உமிழ்ந்த வண்ணம்...........
ஓர் யுகத்திற்கான கனவை,
காதலென அரிதாரம் பூசி..
ஆர்ப்பாட்டத்திருவிழா துவக்குவதாய்
பெருத்த மழைக்கு தயாராகிறது வானம்.. !

 http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2759

நன்றி உயிர்மை.

அப்பாவின் கண்கள் நனைந்திருந்தன

மிகைப்படியான யோசித்தல்
ஒருசில சமயங்களில்
ஒன்றும் புரிபடுவதில்லை..

அப்பிஞ்சு பள்ளி சிறுமியையும்
பட்டம் நோக்கி ஓடிகொண்டிருந்த
வால் சிறுவனையும் அழைத்து
"தன் நீலநிற புதிய  பீ-எம்-டபுள்யு" வினில்
ஊர்சுற்றி வருவதாக சொல்லிச்சென்றவன்
இன்னும் வீடு திரும்பவில்லை..

மூவரும் இணைந்து விளையாடும்
புகைப்படமொன்றின் கதவு
அவரை வெறித்து நோக்கியது ..!!

மிகைப்படியான யோசித்தல்
ஒரு சில சமயங்களில்.....

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004113&format=html

நன்றி திண்ணை..

Friday, April 9, 2010

..................

சொல்லொலி  முத்தங்கள்
அறைமுழுதும் அலைந்தாடுகிறது
மூச்சுவிட நேரமற்று..
வாங்கித்தரா புதுகொலுசை காரணங்காட்டி 
இன்றிரவும் பிறந்தநாள் கொண்டாடுவோமா..

Monday, April 5, 2010

மரணத்தில் நனைதல்..


தாடி மழிக்கும் நேரத்தில்,
நேற்றைய அணைப்பில்
கழன்டோடிய பொத்தானை மீட்டெடுத்து
அதனுள் பொதிந்துவைத்திருப்பாள்
ரகசிய முத்தமொன்றை அப்பெண்..!

அலுவல் சென்று திரும்பும்வரை
இருவர்  மண்டைக்குள்ளும்
ருசி கொண்டிருக்கும்
அவ்விடைவெளி முத்தம்..!

டிபன்பாக்ஸின் சப்பிய வலதோரத்தில்
அவளுக்கான பருக்கைகள் ஒட்டிக்கொண்டிருந்ததை
எப்படியும் இரவின் புணர்தலில்
உச்சந்தலையில் நனையும் முத்தத்தில்
முனகி வைப்பாள் !

பின்பொரு அகாலத்தில்
அப்பெண்ணின் முதுகு மச்சத்தில்
மிச்சப்பட்டிருப்பேன் நான்
அவளறியாது !!

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2730

நன்றி உயிர்மை..

Friday, April 2, 2010

தனிமை விழுங்கும் தோல்வி.!

"யாருமில்லா இடமொன்றில்
ஓவென்று அழுவதாய்" 
தொடங்கும் பாடலொன்றிலிருந்து
நைசாக நழுவுவதென
வேகமாக வந்துவிடுகிறார்கள்..

நெடுநேரம் பேசுகிறார்கள்,
நட்பின் கை கொண்டு
காதலின் தோள் பற்றியேறி
காமத்தின் கதவு முன்நின்று
ஏனோ உள்செல்ல தயங்கி
மௌனமாக திரும்பி விடுகிறார்கள்.!

பின்னொரு நாள்
சம்மதமேதுமில்லாத
நம்பிக்கை மனிதர்கள்
நைசாக தட்டிவிடுகின்றனர், 
ஒலிக்கத்துவங்குகிறது..
"யாருமில்லா இடமொன்றிலென துவங்கும் பாடலொன்று.."  


http://www.vaarppu.com/view/2133/ 
நன்றி வார்ப்பு..

Thursday, April 1, 2010

ரகசிய வாசல்

மழை பொழிகிறது
ஜன்னல்கள் திறக்கப்படுகிறது
பின், ஈரக்கூந்தல் வானமாகவும்
அவன் பார்வை நட்சத்திரங்களாகியும்
பறந்திருக்கக்கூடும் இந்நேரம்
யாரும் காணா இடம்,
ரகசிய வாசல்
காதலர்கள் அறிவார்கள்!!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5060&Itemid=139

நன்றி கீற்று..