Monday, June 27, 2011

அரேபிய ராசாக்கள்.. 16









மீளத் திமிரும் கானலென
பாலையெங்கும் தவித்தலைகிறது
நீ இட்டனுப்பிய உப்பு முத்தம் !

சொற்களின் வனம் புகுந்த
ஆகாய நேசம்
கடலின் நட்சத்திர எதிரொளிக்கான
காத்திருத்தலில் !

வாழ்வின் பெருவெளியில் சிக்கிச்
சாயும் கறுநிற நிழல்களனைத்தும்
ஜனிக்கும் மரண பிம்பங்களாகவே
மொழி பெயர்க்கப்படுகிறது..!




நன்றி உயிரோசை..




















Monday, June 20, 2011

இயல்பின் நிழல்







ஒரு அபரிமிதமான நம்பிக்கை
உடைபடும்போது எழும் மன அழுத்தத்தின்
நம்பகத்தன்மையை தீர்க்கமாய் அகப்படுத்தியவாறு
தொடரும் இருப்பினில், 
சட்டென நுழைகிறாய்
ஆட்காட்டி விரலளவு அன்போடு !

சற்றும் எதிர்நோக்காதிருக்கையில்
இயல்பின் நிறத்தை தெளிக்கிறாய்
இருப்பின் நிழல் எங்கும்.

சாயுங்காலத்தில் நழுவிச் செல்லும்
சூரியனின் வலங்கை பிடித்து 
இரவை உதிர்க்கும் நிலவின் பெருமுகத்தில்
உன் பெயர் பதிக்க
நானோ அலைகிறேன்
இவ்வறண்ட வெளியெங்கும்.

புரிதலின் பெரிய குழப்பத்தினில்
கால் நனைத்துவிட்டு வா 
விரல்களை இறுகப் பற்றிக்கொள்வோம் ! 


நன்றி உயிரோசை..


Monday, June 6, 2011

காதலின் வேட்கையோடு







உடலிலிருந்து உதிர்ந்து விழுந்த

நிழலை இறுகப் பற்றி
மௌனம் கலைக்கிறது
முகில்களடர்ந்த இரவு..

உயர  உயரப் பறக்கவிடப்பட்ட
வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களை
தன்னிடத்து வைத்திருக்கும்
மெல்லிய சிறு சிறு விரல்களைப்போல,

மகிழ்வின் ஒப்பற்ற கடலில்
மெல்ல இறங்கும் இந்தப் பௌர்ணமி நிலா
ரகசியத்து இட்டுச்செல்கிறது
அன்பின் ஒப்பத்தை.!

கூட்டத்திலிருந்து
கைகள் அள்ளிய ஒற்றை நட்சத்திரம் ,
அவளுக்கென தருகிறேன்.

நிழலென உதிர்ந்தவள்
வெட்கத்தின் புதிர் புன்னகையோடு
கட்டிக்கொள்கிறாள்
இரவு நிறைய நிறைய.!


நன்றி உயிரோசை..