Saturday, January 30, 2010

.. :-)

கருப்பு வெள்ளை பூனையோடு சண்டையிடும் இரவுகள் எனக்கு ..

வழக்கம்போல தொலைபேசியில் காதல் சொல்லும் இரவுகள் உனக்கு .. ..!!

காதல்..


கொடுக்கல்..
வாங்கல் தான்.. காதல் ,
நீ முத்தம் கொடு
நான் வெட்கம் தருகிறேன்..!

Thursday, January 28, 2010

கலவியும் மழலைக்கான நாழிகையும்..!


கலவி முடித்து
திரும்பி புரளுகையில்
படுக்கை விரிப்பில்
ஆடவனும் பெண்டிரும்
சிந்தவிட்ட காதல்
மல்லாந்து கிடக்க
மலைத்தெழுகிறது இரவு..!

குஞ்சொன்று..
நடுவில் கொஞ்ச
கூர்தீட்டப்படும் நாட்கள்
ஒவ்வொன்றும் வெட்கத்தின்
விரல்கள் தாங்கி நகர..!

பின்னோக்கி நகர்ந்த
பிரசவஅறை
அவனின் அடிநாதத்தோடு
அவள் யோனியை பதம்பார்த்து
தொப்புள்கொடி தேடி
தீர்க்கிறது யதார்த்தத்தை..!

அப்பா உள்ளங்கையில்
பொத்தி வைத்திருந்த விழிகளை
அம்மா கன்னங்களில் கொட்ட
ஆழ்ந்த நித்திரை முறிபட்டு
யிர்பெறுகிறது தொட்டில்..!


http://keetru.com/index.php?option=com_content&view=article&id=2558:2010-01-28-04-56-38&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று ..

Sunday, January 24, 2010

காகித கப்பல்..


கேட்டழாமலேயே
விட்டுகொடுத்தபடி
தொப்பலென வழிந்திருந்த மழை
தன் தோல்வியை
தனதென அறிவித்து
சிறுதூறல் உதிர்த்த கணம்
என்மகளின் கன்னத்தில்
சிறுகுழியொன்று நிரம்பியது
நான் புன்னகை யென்றேன்
கவிஞர்கள் கவனிக்காமல்
பேய்மழையொன்றின்
தோல்வி கவிதையென்றனர்..!

http://youthful.vikatan.com/youth/Nyouth/arumugammurugesanpoem220110.asp

நன்றி விகடன். காம்

Friday, January 22, 2010

சிறுமிகளின் சிறகுகள் பற்றி..!


வேகம் கூடும்ல மாமா என்றவாறே
சப்பல்களிரண்டையும்
கையடக்கப்படுத்துகிறாள்..
வழிநெடுகும் பட்டாம்பூச்சிகளுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பிருக்குமோ
இருக்காதோ யென்பதே என்சந்தேகம்..!

ஆச்சர்யகுறிகளின் மிரளல்

சஞ்சலப்பட்டதொரு தருணம்
மெதுவாய் புன்னகைத்து நகர்கிறாள்
அழகெனப்படுவது அவளெனவும்
பூதூவுவது நானெனவும்..


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2417:2010-01-22-04-52-14&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று ..

Thursday, January 21, 2010

ஒருவித வாழ்தல் முறை ..


பின்ணணியில்
அவனோ அவளோ ..
தோள்தட்டி விளையாடுகின்றனர் ,
தெரிந்தே தலைகோதுகிறது
காதல் மற்றும் காமம் ..!

Tuesday, January 19, 2010

மழலை மழை ..


கொட்டும் மழைக்கு
குடைபொத்தான் அழுத்தியநொடி
குழைந்தது கவிதை ..
இளம் அம்மா ஒருவள்
தாளெடுத்து முனை மடக்கி
கப்பல் உருவகித்து
மழலையின் கைகளில் திணித்தபொழுது
குமைந்தது மழை .!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2161:2010-01-19-01-53-28&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று..

Monday, January 18, 2010

காதல் உடைத்தெறிந்த மழைநாள் ..


மௌனங்கள் நிரம்பி வழியும்
நிமிடங்கள் உதடுகளடக்கி
மீண்டும் சந்திக்கலாம் என்பதாய்
மழலை பிள்ளை புன்னகையோடு
மாலை வீடு திரும்புகிறது
எனது காதல் ..

நொடிகளும் உடையாமல்
மெல்லிசை இசைக்கின்றாள் ,
மலர்தூவும் கனவுகள்
படுக்கையின் முழுஇரவும் ..

கால்கள் சக்கரமாகி..
அவள் வீடிலிருந்து சதுரஅடிகள் முன்..
அது , அடுத்த அதிகாலை ..

அதொரு மழைசொட்டும் காலம் ,
தேவதை குடிலின்
ஜன்னல் கம்பிகள்
என்னை வரவேற்பதற்கிணங்க
துளிகளோடு தாளமிட்டபடியிருந்தன ..

மழை தன் பேரழகியை
முத்தமிட்டே தீருவேனென்பதுபோல் ,
கோவில் நடை திறக்கப்பட்டு
அவள் பொற்பாதங்கள்
என்னை நெருங்க நெருங்க
ஓய்ந்திருந்தது..!

இந்தொரு நாள்..
இத்தனை நாள் மௌனங்களை
அடையாளம் கண்டுகொண்டாள் ,
மழை சொல்லி அனுப்பியிருக்குமோ
என் காதலியிடம் காதலை ..!!

Sunday, January 17, 2010

இயல்பாயொரு இயல்பு உடைத்தல்..


கையறுத்து சென்ற கத்தி ,

உள்சொட்டும் இரத்தம்

பீறிட்டு வெளிச்சாட

வலியெனும் வலி

எனக்கோ இல்லை உனக்கோ

என்பது ..

அறிந்திருக்க வாய்ப்பில்லை ..

எனப்படுவது யாவருக்கும் அறியும் ,

இருந்தும் ..

ஓர் முனைமழுங்கிய கவிதைக்கென

கூர்தீட்டப்படுகிறது மற்றுமொரு கத்தி .


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31001155&format=html

நன்றி திண்ணை..

யாவரும் அறிவர்.


மலை முகட்டிலிருந்தோ ..
மேகங்களினிடையிலிருந்தோ ..
வார்த்தைகள் பிரகடனப்பட தயாராகி ,

நொடிப்பொழுதென தொரு
எதிர்நோக்கா கணம்
கிடைக்கப்படாததொன்று
கிடைத்துவிட்டதென்றும்
கிடைக்கவே கிடைக்காதென்றும்
காட்டுகத்தலென எங்கும் உடைக்க
ஓங்கி ஒழிகிறது
ஒரு பெரிய கூட்டம் ..

எழுத்துக்கள் பதிவிடப்பட்ட
வெற்று காகிதமொன்று
கிழிபட துவங்கியிருந்தது
இலக்கியம் அதை
இலக்கியவாதியே திரும்ப பெற்றுகொண்டான் .

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31001089&format=html

நன்றி திண்ணை..

Wednesday, January 6, 2010

இயல்புகளுக்கு பின்..!


காத்திருப்புகளின் ஈரம் - அதை
மழை துவட்டியபடி
தொலைந்திருந்த பின்னிரவின்
முதல் விடியலில்
எந்த காரணமுமின்றி
துளிர்த்திருந்தது
பனி இலையும் ,
இன்னுமொரு மழைகவிதையும் ..!


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1858:2010-01-06-07-19-32&catid=2:poems&Itemid=88

நன்றிகள் கீற்று ..


தயாராகு, தொலைபட காத்திருக்கிறது இன்றிரவும்..!


வெள்ளையிலும் கறுப்பிலும் கோடுகளிடப்பட்ட
மூன்று வயதிருக்கும் அப்பூனைகுட்டியும் ,
இருபத்தைந்து வயது ஆறறிவும்
கதவடைபட்ட அவ்வறையின் ஓரோரத்தில்
தனிமை பிசாசை ஒழித்துகொண்டு
மனிதம் பற்றி விவாதிப்பதாய்
துவங்குகிறது இரவு..!

சதுரமோ செவ்வகமோ
ஏதோவொரு வடிவிலான பெட்டியொன்று
லிங்கத்தையும் புட்டியையும்
மாற்றி மாற்றி நிர்வாணப்படுத்தியவாறு பிரண்டிருந்தது..
கசந்கியதொரு மூலையில் நள்ளிரவு..!

எங்கள் இருவருக்கும்
எங்களுக்கென்ன தோனியில்
மனிதத்தை பிடித்தே ஆட்டிகொண்டிருந்தோம் ,
நள்ளிரவுக்கு பின்னான இரவும்
கொட்ட கொட்ட வழிந்திருந்தது..!

இதனிடையில்..
அரை நிலவோ
பாய் நிறைய நட்சதிரங்களோ
கண்டிப்பாய் இரண்டில் ஒன்றுதான்!
பரிகாசிக்கும் சப்தம்
மெலிதேனும் கூர்காதினுள்..
இந்நேரம் மனிதத்தை கண்டறிந்து
எதிர்வீட்டு குடிகாரனுக்கும்
ஏழாம் வீட்டு விபச்சாரிக்கும்
பாடம் நடத்தவா சாகிறீர்கள்..!

பனி மூழ்கிய அதிகாலையொரு நான்கிருக்கும்..
நொண்டியது மனிதம் ,
எனக்கு தெரிந்த மொழியில் " நானெனவும் "
அதற்கு கொடுத்த அடியில் " மியாவ் என்பதாகவும் "....

ஒரு ஏழை தட்டியிருக்கும் சுவர் கடிகாரம்,
இரவை குடித்திருந்த புகையிலைகளின் நெடி
எழுப்பி தொலைத்தது ..
இன்றும் இரவு வரும்
அதற்கு முன்
கொஞ்சமேனும் ணவு தின் ,
கருப்பு வெள்ளை பூனைக்கும் மறக்காமல் கொடு .!

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2402

நன்றி உயிர்மை ..

Tuesday, January 5, 2010

சிறு தூறல் ..


முகமதும் இக்பாலும்
கப்பல் கேட்டழுதனர் ..
பாத்திமா காகிதம் துளாவினாள் ,
மழைத்துளி பத்திரமாக
புன்னகைத்தபடி மிதந்தது .
இதுவொரு மழைகவிதை ..!நன்றி யிர்மை..
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2382