Thursday, June 20, 2013

ராணிக்கு ரோஜாமுகம் எப்பொழுதும் என் விருப்பம்



கறுப்பில் கோடிடப்பட்டச் சட்டையின்
பாக்கெட் நிரம்பித் துள்ளுகிறது

தனிமைப் பொத்தான்கள் பதறும்
உன் கிழமையில்
இல்லை
நான் இல்லவே இல்லை.

ராணியின் ரோஜாமுகம்
பயமுற அவசியமில்லை

சடாரென அதிர்ச்சியைத் தரும்
நிழலில்
படி ஏறி இறங்குவது
பூனைக்கண்கள் தான்.

உடையாத புல்லாங்குழல்



அன்பின் கரங்களில்
வளர்ந்து மலரும்
வேட்கையின் நாவில்
சிறுஇலையென
புன்னகை
பனித்துளி வெளிச்சம் பரப்புகிறது

மூங்கில் காட்டில்
புல்லாங்குழலுக்கென
வளர்ந்துடைந்தத் தனித்துண்டு
கர்ப்பம் தரிக்கிறது

பெரும்பாலைக்கு
குடைசாய்க்கிறாள்
சொல்லில் தீயிடப்பட்டப் பெண் 
அலுங்காது
துளிர்க்கிறது
மாதவிடாய் மறுத்தக் கிழமை

மழையே பேய்மழையே
உன்னைக் காதலிக்கிறேன் என்கிறது
அமைதியாய் நிற்கும் வெயில்

பகடி



சொல்லி வைத்தார்போல்
ஓர் புன்னகை  

ஏற்கவுமில்லை
மறுதலிக்கவுமில்லை

எதிர்கொள்ளப்படுகிறது    

ஒரு அதிர்ச்சியை
ஒரு அவமானத்தை
ஒரு துரோகத்தை
ஒரு சந்தோசத்தை
ஒரு நிரந்தரமின்மையை

பிறகு

கமா
மற்றும்
பிறகு பிறகு பிறகு...   

எனும்போது
நக்கலும் வெடிச்சிரிப்பும் கூடவே

அவரவர்க்கு
ஆயிரம் பேராயிரம் கஸ்ட நஸ்டங்கள்

இது கவிதையா
இல்லை
கேள்வி பதிலா?

தத்துவ விசாரணைகள் உறங்கிக் கொண்டிருக்கும்
தருணம்
எதற்கு இன்னும் உயிரோடு இருக்கிறது
இரண்டு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி 


துயரத்திற்கு மாத்திரம் கதவுகள் இல்லை




மின்னல் போல் வெட்டி
மறையும்
அவள் கன்னத்தில்
இடப்பட்ட முத்தம்

உங்களது கழுத்தைப் பதம் பார்க்கிறது 

பின் ஏன் அருகமர்ந்து
வற்புறுத்துகிறீர்கள்? அழகான கோடையில்
மழை பாடச்சொல்லி

ஆமென்என்கிற சமாதானம்
தூக்கில் தொங்குகிறது.

புன்னகைக்கு விலையேது
புண்ணியமாய் போகட்டும்
உயிர் நிரந்தரிக்கும்

வெட்கச் சிரிப்பு
பாக்கி இருக்கிறது.   


Sunday, June 16, 2013

பியூட்டி ஃபார்லருக்குச் செல்லும் ஸ்கூட்டி




ஒரு திரையென
நீ வீசிய
நீல விண்ணின்
அந்திமப் புழுதியின் பாரம் தாங்காது
திரும்பி வருகிறேன்

புனே மாநகரத்தின்
பதினெட்டு அடுக்கு அப்பார்ட்மென்டின்
மேல்தளத்திலிருந்து
குதிக்கிறாய் நீ
(அது ஓர் கள்ளஆட்டம்)

CARING என்ற முகம் பழுத்த அபத்தம் தொட்டு
அழுகிறாய்
கூச்சலிடுகிறாய்
கோபிக்கிறாய்
கண்ணைத் துடைத்துக் கொள்கிறாய்
சண்டையிடுகிறாய் புன்னகைக்கிறாய்
அழுகிறாய்...
எதுவும் பேசாது
எழுந்து டீக்கடைக்குச் செல்கிறேன்
தேநீர் குடிக்கிறேன், சிகரெட் பற்ற வைக்கிறேன்     

திரும்பி வருகிறேன்
திரையின்
பாரம் தாங்காது

வாசற்படியில் 
கால் தடுக்கி
பின்னந்தலையில் அடிபட்டுச் செத்துப்போகிறேன்.

பின்வருகிற ஒரு அந்தியில்
திரையை விலக்கிவிட்டு
ஸ்கூட்டியை உதைக்கிறாய்..

அது

பியூட்டி ஃபார்லருக்குச் செல்கிறது   

தகப்பனாகிறான் கதைசொல்லி ஆனந்த்



ஆனால்
முக்கியமான பாத்திரம்
தவறவிடப்பட்ட ஒற்றைக்கால் செருப்பு.

( கவிதைக்கு அனார் எனப் பெயரிடப்படுகிறது )

மழையைத் துரத்தும் பெட்டிகள்
அல்லது
பெட்டிகளைத் துரத்தும் மழைஎன

எக்ஸ்ப்ரஸ் செய்துக்கொண்டிருக்கிறான்
அனாருக்கும் தனக்குமானக் காதலை
கமால்!

தன் உள்ளங்கை கொண்டு
மறுகால் தாங்கி
தவறவிட்டதின் ஜோடி காலணியை
அனாரின் புன்னகைக்கு நடுவே
ரெயில் ட்ராக்கில் கமால் வீசியெறிந்தப்
பொழுது


எங்களது
மேன்ஷன் அறைக்குள்
இரண்டு நிமிடம் தொடர்ச்சியாக
மின்னல் வெட்டியது.
நாங்கள் அனைவரும் குழந்தைகள் ஆனோம் 

ப்ளீஸ் பொண்டாட்டி இன்னும் ஒரேயொரு நெய்தோசை



அம்மாவின் மார்களில்
பால்அருந்திய
நினைவில் இல்லாத
காலத்தினை
அவ்வளவு எளிமையாக நினைவுறுத்துகிறாய்
ஏன்?

நான் சொல்லவுமில்லை
நீ கேட்கவும் வேண்டாம்

உலகம் சிறியது என்பதை
இவ்வளவுப் பெரிய கூட்டிற்குள்
அடைக்கிறாய்

***



என் உலகம் முழுவதும் பறந்துக் கொண்டிருக்கும்
பறவை
உன் அலகில்
என் மச்சங்கள்

தெரியுமா?

நீல சாயந்திரத்தின் ஒரு துளி



தாய்ப்பறவையின் நெஞ்சை அறுத்துத் தான்
உணவு உண்ண வேண்டுமா
அவள் கருப்பை வலிக்காதா?
எவ்வளவு தான் தாங்க வேண்டும் அவள்??
புரியாதா உனக்கு

இனி
ஒரு வார்த்தை
ஒரு வாதம்
.....

பெருஒலி எழும்ப
வீங்கிக் கொண்டிருக்கும்
கண்கள் செயலற்றுப் போகும்

இது
கவிதையுமில்லை
ஒப்பனையுமில்லை

ஒரு அழுந்த முத்தம்
போதும்.

சுரக்காத முலை
மூச்செறியும் காதல் கொண்டு
உயிர்க் காதல் கொண்டு

(ஆராதனாவுக்கு) 


இருப்பதிற்குத் தானே வருகிறோம் இல்லாமல் போகிறோம்



ஏன் இன்னும் துவங்க யோசிக்கிறாய்
ஆத்மார்த்தமாகச் சொல்லப்படாத
உன் கதைகூறலை?

என்று முடிவுறும் கவிதைக்காக..

அதுவரை நீலப்படத்தில் மட்டுமே
பார்த்துப் பழகிய நிர்வாணப் பெண்ணுடலை
ஒருவன்
நிஜத் தன்மையுடையக் காதலோடு
முதல்முறைத் தொட்டு ஸ்பரிசிக்கும் பொழுது
ஒளிரும் வெளிச்சம்

எதுவும் துவங்கவுமில்லை

எதுவும் முடியவுமில்லை 

ஆராதனா எனும் பேய் 49



அலைதலின் முற்றுகையில்
பல நூறு நட்சத்திரங்களை அள்ளிக் கொட்டுகிறாள்
ஆராதனா..

சலசலத்து ஆர்ப்பரிக்கும் நதி தொட்டுத் தெறிக்கும் மழையாய்
பெருகுகிறது
மகிழ்இசை

வெள்ளைப் பாவாடைச் சிறுமி
துரத்தும்
பட்டாம்பூச்சியென சிறகசைக்கிறேன்.. 


ஆமென்



வராந்தாவில்
வரிசையில் ஊர்ந்துக் கொண்டிருக்கும்
எறும்புக் கூட்டத்திற்கு 
பதட்டம்அடையாது கையசைக்கிறான்
நம்பும்படியான கடவுள்.

ஆப்ரேஷன் அறைக்கு வெளியே நிற்கும்
முதல் பிரசவ தகப்பனின் நிலையென
தாடையில் கைவைத்துப் பிசைந்துக் கொண்டிருக்கிறது
காலம் என்னை..

ஆமென்

***



பனி மலர நடமாடும் அதிகாலையின்
எந்த திசையில்
உன்னை எதிர்கொள்ளப் போகிறேனென்ற

ஈரம் அப்பியச் சூட்டோடு அயர்கிறேன் சற்று..




உபத்திரம்



பேரபத்த அன்பின்
முனை மழுங்கியத் தகவல் தாங்கி
சொல்வதற்காக அல்ல

உபயோகப்படும் இந்தப் பொய்

காய்த்துப்போன அவமானத்தால் எழும்பிய
நமட்டுச் சிரிப்பொன்று
கிள்ளிவிடும்
கூரிய விதண்டாவாதத்திற்கு


விசுவாசம் எனும் மையச் சரடு




தற்கொலைக்குத் துணிபவர்களைக் கடக்க நேரிட்டால்
முதலில் சில அபத்த வசனங்களைப் பகிரவும்
பார்த்துக் கொண்டே இருங்கள்
சற்று நேரத்தில்
துணிபவர்களது மனம் குலையும்

பிறகு
இன்னும் கூடக்கொஞ்சம் நெருங்கலாம்
எப்படியெனில்
ஒன்றுக்கும் உதவாத அன்பின் நெடியினை வீசி.. 
சுயம் ஆசுவாசத்திற்கு வருவார்கள்
பேடி கலைந்து அப்பொழுது அவர்கள்

பிறகு
கரங்களை இறுகப்பற்றி
அழைத்துச் செல்லலாம் சிறுதொலைவு
முக்கியமாக அந்நேரம்
பேச சந்தர்ப்பம் அவர்களுக்குத் துளியும் தரக்கூடாது
வலுவாக

காரணங்களை மறந்தும் கேட்டுவிடவேக் கூடாது
பிறகு
தற்கொலையைவிடக் கொடிய அழுகையை நாம் கேட்க நேரிடும்
ஆகையால்
மறந்தும் கேட்கவேக் கூடாது காரணங்களை

முக்கியமாக மிகுந்தப் பசியுடன் அலைபவர்கள்
தற்கொலைக்குத் தயாராகுபவர்கள்

எவ்வளவு முடியுமோ
அவ்வளவு வாஞ்சையோடு அவர்களுக்குப் பசியாற்றுங்கள்

மறந்துவிடவேண்டாம்
முக்கியமாக
நீங்கள் தரும் உணவில்
விஷம் கலப்பதை

ஆமென் 

இருந்தும் அசையாத இலையின் சன்னமான குரல்



நிமிர்ந்த நன்னடை
ஒழுக
முகம் பொத்தி நீங்கிச் செல்கிறேன்

பசித்த அந்தியை திறந்துப் பார்க்க
ஏதுவாய்
கொஞ்சம் கொஞ்சிக் கொஞ்சம் கெஞ்சி
கண்ணாமூச்சிக் காட்டும்
வழக்கமான பூங்கா மரம்
ஏனோ இம்முறை தலைசாய்க்கவே இல்லை

செருமி உதிர்கிறாய்
உள்தொண்டையிலிருந்து சன்னமான குரலில்
என் கூப்பிடும் தொலைவில்

நீ இருந்தும்   

***



எத்தனை யுகயுகமாய் சுகித்துக் காத்திருந்தாய் 
நூற்றாண்டுத் தனிமையிலிருந்து
வெளியேறிப் பறந்துக் கொண்டிருக்கும்
இச்சிறுபறவையின் வேட்கையை