Saturday, February 16, 2013

ஆராதனா எனும் பேய் 38



38.

இருண்ட மழையின் சொட்டுகள்
படர்ந்து ஆடும் பைத்திய அகத்தில்
சுடர் பெருகும் இச்சாமம் ஒழிய,
நீ விட்டுப்போன நிலத்தை
தற்சமயம்
பதிமூன்றாவது மாத்திரையோடு
விழுங்கிக் கொண்டிருக்கிறேன் ஆராதனா
 
ஜன்னல் கதவுகளை அடைத்தாயிற்று
கண்கள் உருள்கிறது..

சொல்ல மறந்துவிட்டேன் ஆராதனா
நாளை
"ஸ்போர்ட்ஸ்டேய்"க்கு அழைத்திருக்கிறாள்
ஆறு வயது நம் மகிழ்மொழி
உறங்கும் முன் அவளுக்கு
அம்மா, சாமி கதை சொல்லியிருந்தேன்
இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம்
(உன்னை,உன்னுடைய முத்தமும்..)

***


39.
முன்பொரு
பெருமழைக் காலம் ஒன்றின்
அந்தி சாயும்வேளையின் பட்டர்பிளைக்கு
நான் முழுதும் ஒப்புக்கொடுத்த என்னை
மீட்டெடுக்கும் போலுள்ள உன் அருகிருப்பினை
வரையத் துவங்கியிருக்கும்
இந்த கலர் இரவில்

சலனமற்றிருந்த எனது பெருநதி நீந்திச் செழிப்பது
கண்டும் ஏன்

மௌனக் கானகத்தின் பச்சையத்தில்
நீயொரு
சிறு பிள்ளையாய் குதித்துக் குதித்து
விளாயாட்டுக் காட்டுகிறாய்
ஆராதனா!

***


40.
கூடடையா தாய்ப்பறவையின்
அலகில் விசும்பும்
குஞ்சுப் பறவையின் பெருகும் பசியாய்
வளரும் காத்திருப்பினில்
மரித்து மரித்துப் புசிக்கிறேன் பெண்ணே
என்னை நானே
என்னை நானே

தொலைவில் தெரியும் கடல்நிலவாய்
அருகில்வரும் அது நீயா?
அது நீயா?
ஆராதனா அது நீயா??

***

http://www.vallinam.com.my/issue49/poem1.html








ஆக




சிறு தொட்டிச்செடியில்
ஒழிந்து கொண்டிருந்தது
எனக்கான ஈரம்

ஒரு பெரும் பூந்தோட்டமே
நிறுவ
முயன்று கொண்டிருக்கிறாய்
நீ

நன்றி வல்லினம்


இன்னும் சொல்வோமேயானால்




உடல் அவிழ்த்துக் கொண்டிருந்தேன்
கொடுநாவின் வாள் கொண்டு

மனம் இறுக்கிக்கொண்டிருக்கிறாய்
தேன் உமிழும் வன்மம்
தொட்டு

நன்றி வல்லினம்




மெல்ல வளரும் பேராகாயம்




காற்றின் திசையெங்கும்
மின்னி மின்னிக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்கள்

வியர்வை நுரைத்த நமது உள்ளாடைகளில்
வழிகிறது
நீந்துதலுக்கான ஸ்டார் குறிப்புகள்

வியாபித்தலின்
பசையறிந்து
சலனமற்றதொரு எளிய அன்பு

நன்றி வல்லினம்


மழையெனச் சொட்டும் நிலா மிதக்கும் கடல்




அசைய மறுத்து மிளிரும் முகம்
பைத்தியம் பசிக்கிறது
வாழும் கோடை முன்
என் நீ

பிரிவென்பது பெரும் கோடை
பிரிவென்பது சுனையொத்த அன்பு

பிரிவின் சுவடு அறியுமோ
அறியாதோ
மரண வீட்டில் தீரா மழை

நன்றி வல்லினம்


***




இந்தக் கவிதையில் காதல் நிரம்ப இருக்கின்றது.
நானும் அவளும்
உங்களது தனிமையைப் பாடுகிறோம்

***




உன்னை அமைதியிழக்கச் செய்யும்
என் மௌனத்தின்
வலு
குழந்தைகளிடம் துள்ளும்
பலூனாய்..

***




கடலின் முடிவிலொரு வானம்
வானின் துவக்கத்திலொரு கடல்

எங்கும் துவங்கவில்லை
எதற்கும் முடிவிலில்லை
அது


விடுதலையென்பது இணைந்து நுகர்வதே




சந்தன நிறக் கைக்குட்டையில்
தேன் அருந்தும் பட்டாம்பூச்சியிடம்
சொல்லி ஆக வேண்டுமென
என்ன நிர்பந்தம்?

இந்த மழை
நின்றுவிட்டதா
பெய்துகொண்டிருக்கிறதா
!


ஆராதனா எனும் பேய் 37



வம்படியாக
ரயில் காமித்துத் தருவதாக
கூட்டிப்போன அப்பாவிடம்
ரயில் வாங்கித் தரச்சொல்லிக்  குறுகுறுப்பூட்டிய
நினைவென

புதியதாய் அருவிக்குத்
தலை காமித்த சிறுமியின் மனமென

நண்பன் சுபாஸ்உடன்
விலாங்குமீன் பிடித்துப் பொறித்து ருசித்த நள்ளிரவென

இன்னும் இன்னும் சில அந்தரங்கங்களையும்..

இப்படி இப்படி எது ஏதோ ஞாபகத்தில் துள்ளுகிறது
எனக்கு

ஒரு நீண்ட உரையாடலின் முடிவில்
"என்னை இழந்தால் நாடுஇழந்த மகாராணியாம் அவள்"
என்று சன்னமான குரலில் புன்னகைத்துவிட்டு

மார் நிறைய முத்த காய்ச்சலோடு
செல்கிறாள் ஆராதனா


விடிந்துவிட்டது




நீயும் நானும் தற்கொலைக்குத் தயாரான
அதிசாமக் கனவிலிருந்து
சுளீரென அழைத்து வருகிறது
காதினுள் இடறி விழுந்த எறும்பொன்று

நீரூற்றி தலையசைக்கையில் மெதுவாய்
நாவு சுழற்றுகிறது
வளர்ந்து வளரும் இரவு

சிறுநீர் முடித்துத் திரும்பிப் புரள்கையில்
நதி நீந்தும் இலைதனில்
நல்ல விலாசமாக அமர்ந்திருக்கிறது
அவ்எறும்பு

நன்றி உயிரோசை




ஆராதனா எனும் பேய் 36



அப்-பேரழகிய துபாய் யின்
ஒரு வெயிற்கால நள்ளிரவில்
அதன் இயல்பு மாறாது ஓடிக்கொண்டிருந்தது மெட்ரோ ட்ரெயின்..

அதனுள்
நூற்றாண்டுகள் சென்றாகி விட்டது
நாம் பறந்து கொண்டிருக்கிறோம்
சிறகுகள் விரிய விரிய

மேலும்

இறகுகள் படர்த்தும் மொழி சுடர்
அன்பினது யாசிப்பிற்கு
நானும்
நீயாகிய ஆராதனாவும்
இறுதியிலும் இறுதியான
பலி

அல்லது

நேற்றைய குளிர் அந்தி
கர்நாடகா சிமோகாவில் ஆரத்தழுவிய
நமது உதடுகள்
சிரித்த  
அத்-துயர இசை!  

தற்சமயம்



பின்கழுத்திலிருந்து முதுகிற்கு வந்தபின்
எறும்பு
வெறுமனே எறும்பாக இல்லாமல் நிற்கிறது

விழித்துப்பார்க்கிறது மெல்ல
அசையும் நிலவும்
உடையும் நிழல்களும்

மழையடித்துக் கொண்டிருந்த
ஜன்னலை மூடியாயிற்று


ஆராதனா எனும் பேய் 35




எனது ஞாபகங்கள் அனைத்தும்
மரித்துப் போகுமொரு
இல்லாத உன் நாளில்
என்னை அணைத்துப் பிடித்து அழுகிறாய்
எல்லாம் எல்லாம் எல்லாமும் அதிர

ஒரு சிறிய புன்னகையில் வாழும்
நம் பெருங்காடு
மீட்டும் நிற்காத அசைவில்

எந்தச் சலனமுமின்றி
பேசுகிறது
அடையாத மௌனம்

ஒளி படர்ந்தக் கணம்
நீ
சடலங்களாகிறாய்


பிம்பங்கள்




நீ
கத்தி கத்தி விரட்டும்
உனது புலிவேஷத்தில் செத்த மீனின் வாடை

நான் இட மறுதலிக்கும்
உனது முகமூடியின்
கால்களிலுள்ள
முட்களை வலிக்காமல் எடுக்க வேண்டும்

சொற்ப ஞாய யதார்த்தத்திற்கு..

உனக்காகவே
எனதிந்த அறையினை இருள்
பரப்பி வைத்திருக்கிறேன்

ஆமென்.


ஆராதனா எனும் பேய் 34





பிளந்திருக்கும் மார்புகள் அவ்வளவு வெளிச்சத்துடன்
மூர்ச்சையாகித் தொட்டுணரும்
நான்

விண்-பற்றி எரிகிறது முத்தங்கள்
முத்தங்கள்...

எம்பினாலும்;
யோனியும் குறியும்
எத்தனை எத்தனை எம்பினாலும்..
எத்தனை எத்தனை எம்பினாலும்..
சுற்றும்..
சூழும்..
வியாபிக்கும்..
நம் உலகத்தில்
அவர்கள் வியர்க்கும் கெட்டசொப்பனத்தில்
நாம் உரக்க உரக்க காதலையே
ஒலித்து (அ ) ஒளித்து,

விடுகதையென விடாமல் துரத்திக்கொண்டிருக்கிறது
கவிதையைப் போலல்லாததொரு
நாம்..
ஆம்; நாம்.

Sunday, February 3, 2013

ஆராதனா எனும் பேய் 33




யாருமற்ற எனக்கு எங்கிருந்தப்பா வந்தாய் மக்கா?

கேள்விகள் எப்பொழுதுமே..
சுலபம்.

நன்றி

பிறகு; ம்..

முத்தங்களை முத்தங்கள் என்று சொல்வதைவிட
வாழ்வின்
விரல்களென்று...

பொருந்தாதோ??

நம்பிக்கையின் கால்களென்று
ஆமா தானே?

எல்லோருக்கும் அன்பு
உனக்குக் காதல்


ராஜா ராணியால் நிரம்பி வழியும் அரண்மனை




அன்பைக் கொடுத்து
வலியைப் பழக்குகின்றார்களாம்
காலங்காலமாக
அந்த மிகப்புராதனமான அரண்மனையில்

எல்லோரும் தப்பித்தோடிய
ஒரு வரலாற்று நாளில்தான்
அங்கு சென்று சேர்ந்தோம்
அளவில்லாப் பிரயாசத்துடன்
நாம் நமக்கான வாழ்வினை சிருஷ்டிக்க
எல்லாம் அறிந்திருந்தும்

நம் நாட்களில் அன்பு நதியெனப் பாய்கிறது

திகட்டவே திகட்டாதது எனும் கர்வத்துடன்
பருகிக்கொண்டிருக்கிறாய்
ஒற்றை ராணியாகிய நீ

போர்க்களத்தின் செந்நிற நிலமென
வலியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்
உனக்கு ராஜாவாகிய நான்

ஆனந்தம் பேரானந்தம்...