Wednesday, June 30, 2010

முன்பறியாதிருந்தது...



ஒரு உண்மை தேவைப்பட்டது
காதல் பரிச்சயப்பட்டது .

ஒரு காதல் தேவைப்பட்டது
மூன்று முறை
நட்பு தோல்வியில் கனிந்தது .

ஒரு நட்பு தேவைப்பட்டது
நான்காவது முறையாக
காதல் சொல்லப்படுகிறது .

எல்லாவற்றையும்
லெகுவாய் கடந்துவிட
ஒரு பொய் தேவைப்பட்டது, 
ஒரு நரகம்
சிரத்தை ஏதுமின்றி
கவனிக்க மறுதலித்தது .

வளர்ப்பு நாய் இறந்துவிட்டது
தெருநாயைப் பற்றி கவலைப்பட
யென்ன அவசியம்.. 


உங்களைப்போல நானென்பதில்
எந்தவிதமான இடையூருமில்லை எனக்கு
என்னைப்போல் நீங்கள் எனலாமெனில்
யோசிக்க வேண்டிவரும்.

Friday, June 25, 2010

தீரவாய்க்காத இருப்பு.!


கிடைத்துவிடாத வண்ணத்துப் பூச்சியின்
ஸ்பரிசத்தை அழுதலில் மீட்டுகிறது
அக்குழந்தையின் தனிமை ,
என்பதாய் இன்னும் நிறம்வாய்க்காத
ஒரு கவிதையைப் போல்
கழிந்து கசிகிறது
பிரிவதாய் முடிவெடுத்தப்
பிரிவின் வாசனை.!

Wednesday, June 23, 2010

காதல் ஆதலால்..


உனது வருகைக்குரிய
அன்பின் தடங்கள்..
ஒரு காத்திருப்பின்
பரிச்சயத்தை ஆயாசமாய்
அள்ளி முகர்கிறது,
ஒரு தாயின் மாரில்
குழந்தைகள் மருகுவதென .

ஒரு காத்திருப்புக்குப்
பின்னுள்ள மௌனங்களை
எப்படி மௌனமாக்குவதென்ற
கேவல்களில்தான்
அமிழ்ந்துவிடுகிறது
இன்னும் காதல்
காதலாகவே .

ஒரு காதல்கவிதை
எத்தனை எளிதோ
அத்தனை எளிதே அல்ல
ஒரு காதல் சொல்லப்படுவதென்பது .

Monday, June 21, 2010

மழைதூவும் நெடுஞ்சாலை வண்ணத்துப்பூச்சிகள்...



கரும்பூச்சையின்
பச்சைக் கண்களிலிருந்து
தீட்டப்பட்டிருந்தது
ஒரு மரண வெம்மை..

இசைந்து கொடுக்க வல்லாது
மேஜையை
வெறித்த வண்ணம்
கரைந்தபடியாக இருந்தது
ஒரு தேநீரின் ஒப்புமை..

முன்னும் பின்னும்
அலைந்துக் கொண்டிருந்தவள்
தடக்கென எதையோ சொல்லியவாறே
நகர்ந்து விட்டிருந்தாள்..

நிலா விழு கடலென
பூப்பறிக்கத் துவங்கி
நெடுஞ்சாலை வண்ணத்துப் பூச்சிகளாய்
வர்ணம் ஒட்டிக்கொள்கிறதொரு மனசு !!


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=3043 

நன்றி யிர்மை.

Thursday, June 17, 2010

மழலைகள்வான் ஒதுங்கிய மீன்கடல்...



பலூன் விற்பவன்
காட்டில்
மழை பெய்வதில்லை
முன் போல். !

அவர்களின்
ஆறுமணி வீடு திரும்பலுக்குள்
ஏழுமுறை மண்டை உடைந்து
செத்துப்போகிறான்
துப்பாக்கிச் சுடுபவன்.
அம்மா அப்பா சண்டை
வீடியோ கேம்ஸ் 
கொலைகளைக் காட்டிலும் எரிச்சல்.!


காகித கப்பல்கள்
அம்மாக்களைத் தேடி
நீர்த்துப்போகிறது,
மழலையின் ஆசைகள்
மழலைகளுக்கான ஆசைகளாக
இல்லை.! 

Tuesday, June 15, 2010

மெல்லமாயொழுகும் பால்யம்...



எறும்பு நகர்ந்திருந்த
வெயில் தரை வழி
மெல்ல ஊர்ந்த
ஏழு வயது பொடியனின்
விரல்களை
அகிம்சை எனவோ
வன்முறையெனவோ
சொல்லி முடிப்பதற்குள்
கனாவொழுகிய இரவொன்றில்
நன்றாக உறங்கி இருந்தது, 
எனது அகாலம்
மற்றும்
முந்தைய எனது விடியல்..! 


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3032 

நன்றி யிர்மை.

Sunday, June 13, 2010

உயிரெழுத்து



ஒரு முத்தம் மருக
மருக உருண்டோடுகிறது வெட்கநட்சத்திரங்கள்..
ஒரு புணர்வின் இறுதி இரவை
உருகி வழியும் மெழுகின் கதகதப்பில்
வர்ணம் பூசிக் கொள்கிறது குளிர்நிலவு..
ஒரு நான்
ஒரு நீ
ஒரு நாம்
ஒரு அரவணைப்பு.

Monday, June 7, 2010

அரேபிய ராசாக்கள் 11..

தொடர்ந்த பத்தாவது வாரமாக எனது கவிதை உயிரோசை இணைய இதழில்..
ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..







பாலைகளின் வர்ணமாய்
ரீங்கரிக்கும் ஒட்டகங்களில்
நிரம்பித் துள்ளும் தண்ணீராய்
மெல்ல மெல்ல
அண்ணாந்து கசிகின்றன
எழுத முயன்றதின் ரகசியம்.

என்னொரு சாமவனத்தில்
காட்டெருமையின் மூர்க்கத்தோடு
புணர்ந்தவர்களின் முகவரியைக்
கூச்சம்கடாசிக்
குறித்துக் கொள்ளுங்கள் நீங்கள்
எதற்கும் அவசியம் வரலாம்.

எனதிந்த விடியற்காலை வானில்
குழுமியிருந்த
சிறுவர்கள் என்னையும் சிறுவனாக்கிச்
செல்கிறார்கள் ,
ஆர்வமிருப்பின் நீங்கள்
ஒரு கவிதை புனையுங்கள்
எதற்கேனும் அவசியமாகலாம்.

நட்சத்திரங்கள்உதிர் கடலில்
நிலவைத்தூக்கி வரும் தனிமை
முகர்ந்து பருகுங்கள் நீங்கள்
இக்கணம் தொடர்ந்தே...

ஒட்டகங்களுக்கு விடுமுறை செய்தி
ஆனந்தக்கூத்து !


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=3005


நன்றி உயிர்மை.

Tuesday, June 1, 2010

மன்னிக்க!



கண்ணீர்த்துளிகளின் மிச்சத்தில்
எரிவது என்னவோ
ஒரு நட்பின் ஈரமும்
ஒரு காதலின் எச்சமும்..

காது கேட்பவர்களில்,
சில காதுகள்
துப்பும் எச்சிலும்
திமிரும் புன்னகையும்
அசாதரண ஆறுதலும்,
நொடியின் பின்நொடியிலும்...
இமைகள் ஊமைப் பொழுதென
உயிர் தேடித் திரிவதாய்
தொடர்ந்து விக்குகிறது
கையூண்டு இதயம்..!

கவிதை யெழுதுவது என்னவோ
சிலருக்கு மட்டுமே
வாய்த்து விடுகிறதெனினும்
தலைப்பில் சிரமமேதுமில்லை
நடைபயில்பவர்களுக்கு!

அவள் எப்பொழுதுமே அவள் ,
எனக்குப் பந்து விளையாடுதல் பிடிக்கும்
நிறைவு!


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2979

நன்றி யிர்மை.