Wednesday, January 12, 2011

துயர்பறவையின் உடைந்த சிறகு..!






பல்லி விழுந்த பாலெனப்
பருகத் தரப்படுகிறது
கோப்பை மௌனம்.

குறியீடுகள் விழுங்கிய
பாம்பென பாறையென
விம்மித் தும்முகிறது இதயம்.

உச்சபட்ச நிராகரிப்பின் கசப்பில்..

வரைபடத்தின் முனைகள் மடக்கி
கப்பலென செய்து
பால்யத்தில் மிதக்கலாம்
எனப் புலம்புகிறாள்
மென்று துப்பிய நாவும்
சிவந்த கண்களும்
வீங்கிய கன்னங்களுமாய்
தோல்விப் பெண்..!

நன்றி உயிரோசை..

Monday, January 3, 2011

உருகி வழியும் பகல் !






எதிர்வீட்டு கோமதிஅக்கா குழந்தையிடம்
இனி உங்கஅப்பா வரவேமாட்டாரென்றேன்
கண் மீறிய நீருடன்,
அதற்கது தெரிவித்த முகபாவம்
போனவாரம் சாமிட்டபோன
அதோட நாய்குட்டிக்கு
லாவகமாய் பொருந்திப்போனது
பால்யத்தின் பிழையன்று ! 

அதே குழந்தை
அதே டெடிபியர்
ஓரிரு நாட்களுக்கு
விளையாடுவதற்கு மட்டும் தடை
புரியாது
அழுது அடம்பிடிக்கும் பிள்ளைக்கு
தாத்தா மடி
தாய்மடியாகிப் போகிறது !

நன்றி உயிரோசை..