Saturday, April 28, 2012

ஆராதனா எனும் பேய் 10








தீர்வதாய் இருப்பதில்லை
அன்பு
ஒரு பொழுதும்
ஆம்
ஒரு பொழுதும்

பிடிப்பிலாத நம்பிக்கைக்கு
பிடிப்பை நுகரத்தரும்
உனது பற்றுதலை

கொண்டாட முடியவில்லை
முயலவும் இல்லை,

எதற்கிந்த விளையாட்டு!

தர்க்கம்








இந்த உலகமே
ஒரு மனநல விடுதி தான்..

அதன் வாயிலில் நிற்பவர்கள்
எல்லோரும் பைத்தியக்காரர்கள் என்று நீ நம்புவது
மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது


எனக்கும்..

Wednesday, April 25, 2012

உன்னை வரைபவன்






பாசிகள் பற்றாத நீர்ப்பாறையென
இருத்தலின் அசௌகரியங்கள்

என்னைவிட நீ நன்றாக
அறிந்து வைத்திருப்பதிலுள்ள
ஆச்சர்யம்தான்

இத்தனை அவமானங்களுக்குப் பிறகும்
இத்தனை நிராகரிப்புகளுக்குப் பிறகும்
இத்தனை கொலைகணங்களுக்குப் பிறகும்
இத்தனை அசைவற்ற மௌனத்திற்குப் பிறகும்..

நான் உன்னை வரைந்து கொண்டிருப்பதின்
சூட்சுமம்! 

நன்றி உயிரோசை

வாழ நீளும் மரணம்!







துயர் சாயல் வழியும்
கர்ப்பம் தரிக்கா வயிற்றின்
யாசிப்பினை யொத்து
கடக்க, கலைய மறுக்கிறது
உனது நிராகரிப்பின் வெயிலிலிருந்து
எனது கடல்நீளக் காதல்!

நன்றி உயிரோசை  


வான் அழகு சுடர்!







விருப்ப நிழல்
ஒரு மழலையின் நிறத்தோடு
அடர்ந்து பொழியும்
இவ்விரவின் வனத்தில்
கைத்தாங்கலாய் அரவணைக்கிறது
பெருநதியின் வேட்கைத் துளி! 



நன்றி உயிரோசை  


ஆராதனா எனும் பேய் 9








அன்பைவிட்டு விலகத்துடிக்கும் இக்கணத்திடம்
மெதுவாக உள் நுழைகிறாய்
முத்தங்களின் ஈர உயிர்க்காற்றோடு..

மேலும்
மேலும் அன்பை பிரசவிக்கிறேன்,
மொழியின் நேர்மையற்று

என்னைக் கொன்றுச் செல்
அல்லது
நீ நிரூபிக்க முயலும் காதலை

உலகு உணர உச்சரிப்பேன்
நீ என் ஆராதனா
நீ என் ஆராதனா

Monday, April 23, 2012

ஆராதனா எனும் பேய் 8








இதற்கு முந்தைய பலநூறு ஆராதனாக்களைப் போலல்ல நீ
எனும்போதே
எனது இல்லாத கவிதை
இருந்து மீட்டுகிறது காதலின் இசையை
நிரந்தரத்தின் எல்லையில்லா வெளியின் மீது

அரேபிய ராசாக்கள் 18








பாலையின் கொடுபனியில் எரிந்து கொண்டிருக்கிறேன்
அழைத்த குரல் அலறியது திரும்புமாறு

நிதானிக்கிறேன்
மேலும் நீளும் அன்பின்
காயங்கள் தீர

இன்னும் எப்படிச் செய்வேன்,
காய்ந்த மண்ணின் ஈர நிழலுடைய
அபத்த கானல் வர்ணத்தை

Sunday, April 22, 2012

ஆராதனா எனும் பேய் 7




நிச்சயமற்ற காதலின் நிச்சயமான உயிரை
எடுத்துச்செல் எங்கு வேண்டுமானாலும்.,

நமதிந்த பெயரற்றப் புன்னகைக்கு
சொந்தம் கொண்டாடஉரிமையற்றது இப்பேரொளி
நம்புவோம்..

நாம் வாழ்வோம்,
சாதலின் அழுகை
மரித்து தீரும் வரை

ஆராதனா எனும் பேய் 6




வா..
உணர்ந்து சாவோம் இந்த பிற்பகலில்

உரையாடலின்
ஒழுங்கற்ற உரையாடலின்..

கழுத்தை நெறித்துவிட்டு
வா..

உண்ண நேரம் பார்க்கிறது
அபத்த அபத்த அபத்த..

முன் முடிவுகளிலிருந்தும்
முன் தீர்மானங்களிலிருந்தும்
தப்பித்த

அபத்த அபத்த அபத்த....

உயிர் விழுங்கும் காதல்

Saturday, April 21, 2012

ஆராதனா எனும் பேய் 5








நிறைந்த பௌர்னமி இரவில்
எனது உரையாடலிலிருந்து
சிந்திக் கொண்டிருக்கும் உனது குருதியில்
பாதி இரவிற்கு மேல்
வழிய மொழியின்றி திறக்கிறாய்
ஆகச்சிறந்த அன்பின் கதவினை

இறத்தலின் வாசம் படர
தொடர்கிறது நாளைக்கான பகல்

Friday, April 20, 2012

கோமாளி







இந்த ஒற்றைத் தீக்குச்சி
இன்னும் எவ்வளவு நேரம்
எரியும்

காற்றடைத்த பலூன்
குத்தூசியின் கண்படாத வரை
என்றுணர்ந்தால்

அதை ஒரு கவிதைக்கிணையாய்
உங்கள் முன்
என்
முனை உடைந்த எழுதுகோல்
தன்னை சாய்த்தழும்


நன்றி இலக்கியச் சுற்றம்

Thursday, April 19, 2012

ஆராதனா எனும் பேய் 4



கலாப்பிரியாவின் சசியினை மொழிபெயர்த்ததில்
நானெனும் சாத்தான்
சாத்தானை விட்டு விட்டு
ஆகப் பெரிய நானாகி
நிறைகிறது
ஆராதனா எனும் அன்பின்
அல்குலின் இருள் மச்சத்தில்!

Wednesday, April 18, 2012

ஆராதனா எனும் பேய் 3




சாத்தான் வரைந்த இன்னுமொரு சாத்தான் நீ
என்கையில் சிறிது புன்னகையில் நிமிரத்தான் செய்கிறது
முகம் உதர உனது நெற்றிப்பொட்டு

நினைவு



நடந்து வரும் அன்பிடம்
துயில் உடைத்தோடி
பின்னிப் பிணைகிறது
நான் தான் நீயோவென
நினைவு!

ஆராதனா எனும் பேய் 2







காற்று உண்ட சடலப் பெருக்காய் நான் ஆனாலும்
முலை பருக மொழி அறியாத பிள்ளையாய்
அழ அழ அழுகிறது
உன்னின் நேசமுகம்!

ஆராதனா எனும் பேய் 1



ஆராதனா என உயிர்க்கும் பொழுதெல்லாம்
மரணம் வழிகிறது நினைவு ஓடையெங்கும்,

வாழ்ந்து கொண்டுதானிருக்கிறேன்
வார்த்தைகளோடும்
வாதையோடும்

அம்மாவுக்கு








வெளிச்சம் கலவும் இந்நிசியில்
நீயற்றிருந்த கல் உலகம்
ஒரு புதிர் விளையாட்டை
அத்தனைப் பிரயாசையோடு
எழுதப் படர்கிறது
என்னுள் நீந்தும் உனக்கென

இடரா அன்பு!








நீ அற்ற நொடி,

இறுக்கும் நூல் மனதென
இருந்து தொலைக்கும்
இவ்வுயிரை எப்படி வாழ்வேன்

மூச்சுவிடவென?

Tuesday, April 17, 2012

ஒரு பெருவன நிழல்




அன்பெனும் பெருமழையில்
குழந்தைகளாய் நனைகிறோம்

ஆதி உடையின் அரூப வர்ணம்
இரவெனும் வன நதியில்
நட்சத்திரங்களுக்கு ஒப்பாய்
ஜொலி ஜொலிக்கும் இத்தருணம்
மரணத்தை முதன்முறை ருசித்து உண்கிறேன் நான்!
நீயோ அகாலத்தைப் பசியுறச் செய்கிறாய்!


நன்றி உயிரோசை

புணர்தல் மொழி







சிறுமி
பென்சில் சீவுவதை
ஒத்தப் பொழுதுகளாய்
அள்ளிப் பருகுகிறாய் உயிரை

யாதுமாகி
யாதுமாகி
முனகுகிறேன்
உனது பெயரை
எழுத்து எழுத்தாய்
எழுத்து எழுத்தாய்..!


நன்றி உயிரோசை

வேட்கை




நிழல் மேல் ஊற்றிய நீராய்
உனது மறுதலிப்புகள் அனைத்தும்,   

வேட்கையின் குரலிலிருந்து
துள்ளிக் கொண்டிருக்கிறது
ஒரு குழந்தையின் முகத்தோடு
எனது பேரன்பு!

நன்றி உயிரோசை

வாழப் பிடித்திருக்கிறது








தற்கொலை யாதொன்றிற்கும் தீர்வாகாதென அறிந்திருந்தும்
அதற்கெனவே படு எதார்த்தமாக ஆயத்தமாகும் இம்மனதை

உனது நிலம் கொள்ளா மௌனம் கொண்டறுத்து
எடுத்து நீ எவ்வளுவு தொலைவேனும்
காணாது போயேன்

உனக்காக பேயாட்டமிடுகிறது இக்கணம் 

Monday, April 16, 2012

புதிர் விளையாட்டு!




கடவுள் சாத்தானாகப் பெயர்ந்த
ஒரு வெயில் மதியப்பெருவெளியின் கானகத்தில்
வரிப்புலியொன்றும்
புள்ளிமான் இனத்தினது இரண்டும் 
மிகுந்த வேட்கையிலிருந்தன

முதலாவது வாழ்வு பசிக்காகவும்
இரண்டாவது மரண பசிக்காகவும்

சாத்தான் முகம் மலர்த்தி தாடை வருடி
அசை உண்ட தருணம்
தாகம் உப்பிய பேராற்றங்கரை
காளிச்சிலைக்குள்
மெல்லப் புகுந்து ஒளிந்து கொண்டான்
கடவுள்!

நன்றி நவீன விருட்சம்

அற்புதத்தின் அழகு!





அன்பின் வெளிப்பாடாக
அன்பை முயல்கிறேன்,

மனம் எனும் சிறு காட்டின்
பெருங்காற்றென முத்தமிட்டு
பொம்மையைக் கிள்ளி
உறங்கச் செல்லும்
அக்கா குழந்தை தான்யாவின்
மாபெரும் கவிதையோடு..! 

சமர்ப்பணம்









அல்குலின் மயிர் பார்த்த இரவில் உயிர்த்தெழுகிறது மரணம்
என எழுதிய விரல்கள்
இக்கணம் எனக்கு சொந்தமானதாயில்லை
எனும்போதே
வண்ணத்துப்பூச்சியாய் நிறம் பூசுகிறாய்
இவ்-இரவின் நீள்கடல் சுவரெங்கும்!

Saturday, April 14, 2012

என்று உணர்வாய்








யாருமற்றதாய் உணரும் இரவில்
இனியொரு இரவிற்கு ஆயத்தமாக,

பகலெனும் பன்னீர் நிமிடங்கள்
வேண்டாமென தின்று கொண்டிருப்பது
சத்தியமாக நான் இல்லை
நீ எனும் பேய் தான்..

எனும்போது  பலமாக சிரிப்பு எழுவது
ஒரு கவிதை ஆகுமா
அல்லது
ஒரு கவிதையில் ஆகுமா?!

பணம்








வழியே அல்லாது
வாய்க்கரிசி போடப்போன இரவில்
நண்பனுக்குப் பதிலாய்
நட்பிற்கு மாலையிட்டுச்
சாகிறேன்

வாழ்க வளமுடன்
நானெனும் நான்
கோடி ஆண்டு அல்லது
மில்லி மைக்ரோ செகண்ட்


சிறு பல குற்ற போதலிப்புடன்..

Wednesday, April 11, 2012

மன்னிப்பாயா?!








தவறுகளின் நிறம் படிந்த மன்னிப்பை
அசையிட்டுத் துடிக்கப்
பற்றாது,

உனது இதயத்தை யாசிக்க
காத்திருக்கும் எனது கணத்தில்

மெல்ல எழும் மறுதலிப்பு,

கொலையாகும்
தவறிப்பட்ட எறும்பை
அதிர்ஸ்டவசமாய் ஞாபகப்படுத்துகிறது
காரணங்களின் காரணத்தை

Tuesday, April 10, 2012

என்றென்றைக்குமான அனார்




குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழையுள்
துயில் மறந்திருக்கும்
அச்சிறுபிள்ளையின் புறம்
ததும்பி உடைந்து நிற்கும்
பர்தா தாயின் வெள்ளை மழை
வறண்டு நனைக்கிறது
பெரும் பாலைவெளியின்
அத்தனை அத்தனை விழிகளையும்

நன்றி உயிரோசை

மரணித்த அதே மைக்ரோசெகண்டில் உயிர்த்தல்!





இரவின் ஜன்னலில் நின்று
பகலின் நிழலென என்னை
அவ்வளவு தத்ரூபமாக கையாள்கிறாய்

ஒரு நதி
ஒரு குளிர்
ஒரு ஆசுவாசம்

ஒரு எறும்பு
ஒரு சிறு இலையினில்
தன்னை வாழ முயலும்
ஒரு மழைப்பொழுதின்
ஈரம் கலையாத கணமது

ஒரு நானும்
இன்னொரு நானும்
துயிர்த்த பெருவெளியது

ஒரு சொல்லை
இன்னொரு சொல்
வெற்றிகொள்ளும் பெருவேட்கையது

பகலின் நிழலில் தீர்க்கமுறப்
படர்ந்திருப்பதென்னவோ நீ தான்
என்பதறிவாயோ?!

நன்றி உயிரோசை

*********



மலரென ஒளிரும் நிஜம்
கொடும் பாலை வெயிலென
பின்தொடர்கிறது
ஒரு நிசப்த நிழல் தருணத்திற்கு..

*********



பனித்துண்டை உள்ளங்கையில் பொத்தி அழுத்தியதில்

எழும் கிளர்ச்சியுடன்

இயல்பாய் அழைத்துச் செல்கிறாய்

நமது பால்யத்தின் சொல்லத்தவித்த

அன்பிற்குள்!

Monday, April 9, 2012

மறுதலித்தலின் வெளரிய நிறம்








உண்மையின் மகோன்னதத்தை
நேர் பின்முதுகில்
பேரன்போடு ஒப்படைத்தவாறே,

ஒரு குழந்தையைக் கொஞ்சுவதென
வெளியறிய புன்னகைத்துக் கொண்டு
வேக வேகமாய் முன் நகர்கிறாய்

*********







அதீதத்தின்
ஆட்கொல்லி ஸ்பரிசத்தில்
ஆதி வனம்
பெரு நதியோடு
தொலைகிறது
இன்னும் ஒரு இரவில்
துயில

*********




உனது மாரில் உயிர்த்த
ஒரு துளி நீரின்
உப்படர்ந்த பசி
மௌனமாய் வரைகிறது
அன்பின் தீவிரத்தை

*********







இன்புற
இன்புற
கொல்லப் பயில்கிறாய்
அன்பின்
அந்தரங்கத்தை

*********







ஒரு சொல்
மற்றும் ஒரு சொல்லை
அமிழ்த்தியும் உயிர்ப்பித்தும்
சுடர்ந்தொளிர்கிறது
பசலைப் புனைவில்

*******



நீயற்ற நானெனும் திடலில்
யாதுமாகி வழிகிறது
ஞாபகத் துயிர்

Thursday, April 5, 2012

ஆராதனா எனும் பேய்



என்றென்றைக்குமாய் நிறைந்திருக்கும் சைகையாய்
என்னுள் ஒளிர்ந்திருக்கிறாய் நீ

கண்ட மழையின்
கண் அடங்கா வானம் நீ

சாத்தான் கனவின் பூந்தோட்டம்
நீ எனும் உயிர் வலி

நதி கொள்ளா சிற்றிலை
நீயென
தடம் புரளலாமெனில்

இருப்பு பாதையெங்கும் வாழ்க்கைக் கூட்டம் !

மறுதலித்தல்






இனிக்க இனிக்கத் தேன் தடவிய
கூரிய கத்தி கொண்டு
எனது இருப்பை அறுக்க முயல்கிறாய்
அப்பொழுதும் சொல்வேன்
கத்தியை லாவகமாகப் பிடியென்று!

உனது இரைச்சலை
உனக்கேத் திருப்பித் தருவேன்
அடிஉயிரை வேரறுக்கும் இசையாக!

விடாது முயல்வாய்
தீர்மானத்தின் கால்களை
மலையுயர மௌனத்திலிருந்து
எதேச்சையாகத் தள்ளிவிட,
அப்பொழுதும் திரும்பி நின்று
பரிசாகத் தருவேன்
ஒரு அழகான ரோஜா மலரை! 

நன்றி உயிரோசை 


Monday, April 2, 2012

மூன்றாம் ஊற்றுக் கண்








சட்டெனக் கடந்துவிட முயல்தல்
பிழையாகிப் போகுமோ
என்றெனத் திருகுதல்
உன்னால் இயலவில்லை என்றென்றைக்கும்
என்பதையேன் "பிழை"க் கவிதையென
உலகறியப் பேதலிக்கிறாய்

நான் உருகும்
நீ மருகும்
ஆருயிரன்பு
இன்றும் இன்னும்
ஓடிக் கொண்டிதானிருக்கிறது...

காத்திருக்கிறது கடல் கடந்த மண்
கரம் இறுகப்பற்றி  நகர்வோம்
வா..!

வாழ்தலறம்!








அம்மா
அம்மாவென உறைந்த நொடிப்பொழுதினில்,
இயலாமையின் பற்றுதலில்
வெறித்து வெறித்துத் துப்புகிறாள் கணத்தை...

முலைக்கு அழும் பிள்ளை
கரைந்து வளர்கிறது
யோனியின் பிச்சைக் கசிவில்..

Sunday, April 1, 2012

புத்தனாவது சுலபமல்ல







முன் முடிவுகளெல்லாம்
குப்பையென மண்டிக் கிடக்கும்
மனக்குடுவையை சுத்தப்படுத்து முதலில்
அப்புறம் சுத்தப்படுத்தலாம்
புத்தன் முகத்தை!

உலகெனும் பெருங்கோப்பையில்
நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது யுக காலம்.

விருப்பத்தேர்வு உன்னிடமே விடப்பட்டுள்ளது,  
அதன் ஒரு சிறு கண நேரம்
அல்லது
ஒரு முழுயுகம் எடுத்துக்கொள்ளலாம் நீ.

கல் புத்தன்  
கடவுள் புத்தனாக
ஒரு ஒருத்தருக்கும் ஒவ்வொரு அவகாசம்
சுயமாய் தீர்மானிக்கப்படட்டும்.


நன்றி நவீனவிருட்சம்