Monday, March 28, 2011

அதற்குப் பின்னும்






உன்னை அல்லது
உங்களை அறியாத
பெருநகரத்தில்
கொசு ஒன்று செத்து
இரத்தம் புறங்கையில்
வெறுமெனே காய்ந்து கொண்டிருந்தது.

மின்வெட்டின் மிச்ச இரவு
விழித்துத் தீர்ந்தது.

கார்பரேட் கம்பெனி வேலைக்கென
அடுக்குமாடிக் குடியிருப்ப்பு
விரைந்து நகர்ந்தது.

சிக்னலில்
ஒரு அரைக்குருடி
பிள்ளைக்குப் பால் கொடுத்தபடியே
யாசித்திருந்தாள்.

இரு சக்கரனொருவனின்
கெல்மெட்டில்
மற்றொரு ஈ
ஒன்றுக்குப் போனதை
தெருநாயொன்று கண்டு
வள்  வள்ளென்றது.

நான் வழக்கம்போல
டீக்கடையொன்றில்
அத்தியாவசியமான
தற்கொலைச் செய்தியை
தினசரியில் சுவைத்துத் தீர்த்தேன்.


நன்றி உயிரோசை..


Tuesday, March 15, 2011

புறக்கணிப்பு







ஒரு அற்ப தருணமென
விலகுகிறேன்
உனது பெருங்கூச்சலிடமிருந்து.

மௌனத்தின் ஆயிரங்காதுகளை
சாதுர்யமாக்கும் இருப்பிலல்ல
இந்த ஒற்றை இதயம்.


நன்றி உயிரோசை..


Tuesday, March 8, 2011

அறிவிப்பில்லா விடைபெறல்








ஒரு இருள்சூழ்ந்த இரவில்
எஞ்சிப்போன
ஒரு கெட்ட சொப்பனம்தான்
இந்த துர்செய்தி.

அகாலத்தின் படிக்கட்டுகளிலிருந்து
மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும்
அதன் சிவந்த கண்களில்
விடியலற்ற ஒரு பகல்

நகக்கண் அழுக்கைப்போல
துல்லியமாகத்
தன் இருப்பைத் தெரியப்படுத்துகிறது.

ஒரு மரணச்சம்பவத்தின்
அசை
இதனைக் குரூரமானதென்பதை
அவன்
இதற்குமுன் அறிந்திருக்கவில்லை.

ஒரு விடியலற்றப் பகலுக்காகவே
விழித்திருக்கிறான்
அவன்.

நன்றி உயிரோசை..