Sunday, February 19, 2012

நீ அறிவாயோ?



துளி விசமென நனைக்கிறது
உன் மௌனம் உடைத்த சொற்கள்
என் காதலின் கண்ணாடியை 


பிராயத்தின் நகலென வெறுமென நகர்ந்து
அதனை மறப்பதில்
மிகுந்த தயக்கம்


எனக்கும்
பெருங்கடல் தகர்ந்த இச்சிறு கணத்திற்கும்.  


நன்றி உயிரோசை..  

முத்தத்திற்குப் பின்பும் முத்தம்







ஆகாசம் உடைந்து வீழும்
இவ் அகாலத்தில்
நீ உடை மாற்றுகிறாய்

அன்யோன்யத்தின் அசதியில்
எனக்கிந்த அம்மணமே போதும்
இப்பேரிரவைப் பருக

விரல்களுக்குள் மூழ்கும் விரல்களிடமிருந்து
காமத்திற்கு கற்றுத் தருவோம்
காதலின் வெயிலை
காதலின் ஈரத்தை
காதலின் ஸ்பரிசத்தை
காதலின் பேரன்பை. 


நன்றி உயிரோசை..  




Tuesday, February 14, 2012

முதல் கலவியின் மீத இரவு








நேற்றையப் பின்னிரவின்
புணர் உச்சத்தில் நீ மொழிந்த
பிள்ளை மொழியினைப்
பிரதிப்படுத்த எத்தனை முயன்றும்
............
............
பதின் வயதின் சுயமைதுன
இரவுகளே சொற்களில் மிளிர்கிறது.


அவகாசம்







மகோன்னதத்தின் ஓர் அற்றத்தில்
மரங்கொத்திப் பறவையாக
வியாபித்திருக்கிறாய்
ஞாபகச் செதில்களை கொத்திக்
கொத்திச் சுவைக்க

ஓர் கோடை மரத்தின்
உதிர்ந்த இலையாய்,
தப்பிச் செல்லும் சூட்சமத்தை
துளாவிக் கொண்டிருக்கிறேன்

சிறிது அவகாசம் கொடு. 



நிற்க





கனவின் மீள்வருகையென
உன்னை சித்தரிப்பதென்பது
அதனை எளிதொன்றும் அல்ல.

நினைவின் பழுப்பேறிய மரத்தில் அடைபடாது
இலவம் பஞ்சென பிரிந்து செல்வதிலொன்றும்
அதனை துயர் உயிர்ப்பதில்லை.

காத்திருத்தல்
பிழைத்திருத்தமென!

நெருடல்







ஆதி துயரென வழியும்
உனது சொற்களிடமிருந்து
இடறி விழுகிறேன்

பற்றி விழுங்குகிறது
ஆதி பொய்!

வயதேறியவர்கள் தவிர்த்தல் நலம்







பதின் வயதின் தனித்தீவில்
பறந்து வருகிறேன்
ஒரு வௌவாலைப் போல.

எனது நட்சத்திரங்கள் மட்டுமே
உலர விடப்பட்டிருக்கும்
அப்பெருவெளியில்
யாரையும் எதற்கெனினும் பரிச்சயமற்றதாய்
பாவித்து நெளிகிறேன்
நதியில் எதற்காகவோ தனித்தலையும்
ஒரு சிறு மீன்குஞ்சினைப் போல.

புதிர் காட்டில்
கொடுமழையும்
அடர் தீயும்
சர்ப்ப வாயும்
எழும்பித் தொலைக்காத வரை. 



அடையாளம் தொலைத்தல்








தற்கொலை நிகழ்ந்த அறையைக்காட்டிலும்
தற்கொலை நிகழ்ந்த தெரு
பேரமைதியாகப் பருகுகிறது
இரவின் வெய்யிலை.

Sunday, February 5, 2012

அரேபிய ராசாக்கள் 17




மனவெளியெங்கும் 
வெயில் பிசுபிசுக்கிறது
இப்பனிக்காலத்திலும்.

காற்றின் தடமெங்கிலும் 
பாலையின் நிறம்
நிறைந்து வழிகிறது.

இருப்பின் வழியெங்கிலும் 
இல்லாமையின் ஸ்பரிசம் 
கண்ணீர் பருகுகிறது.  

நாளை
மற்றுமொரு நாளே 
என்பதில் தர்க்கப்பட்டு உதறுகிறேன்
கனவின் வெள்ளை விரல்களை. 


நன்றி உயிரோசை