Tuesday, January 29, 2013

ஆராதனா எனும் பேய் 32
உனது தலைமயிரைப் போன்றதென
வேறொன்றுமில்லை
என்னைப் பரவசமடையச் செய்ய
என்றொரு முறை
மன்னிக்க
பல நூறு முறை உன்னிடம் சொல்லியதாய்ச் சொல்கிறாய்..
தெரியுமா ஆராதனா உனக்கு
நீ என்னைக் கட்டி வைத்திருக்கும் இப்பெருங்காட்டில்
மழைக்காலமென்று தனியாக ஏதுமில்லை

வெயிலின் மரணத்தைப் பற்றி
நீ யாரிடம் சொல்லத் துவங்கினாலும்
வியர்க்கவே செய்யும்
கூர்ந்து யோசி ஆராதனா

சரி சரி
விடு
அதோ உன் குழந்தைக்கு
இந்தப் பைத்தியக்காரனை அறிமுகப்படுத்தி வை!


அப்பொழுது நாடு நிலமாக இருக்கவில்லை
ஆறாம் வகுப்பு "பி" பிரிவு சலீமா
விடாய் உதிரத்தை மூன்று மாதங்களுக்கு
முன்பே நிறுத்தி விட்டிருந்தாள்
குழந்தை சலீமா அம்மா சலீமா

படுகொலைகளுக்குப் பிறகான
ஆயிஷாவின் நாட்டில் சுகப்பிரசவம்

அம்மா சலீமா அம்மா ஆயிஷா
விரல்கள்அழுந்த பற்றி உலர்கிறாள்
பர்தா முகத்துள் விழிகள் அகல

மழை பூக்கும் கானலில்,
திரும்பி வருதலுக்கான சாத்தியங்களற்ற
நாற்பத்திமூன்று வயது பட்டாளத்தான்
போர் முடிவுற்றுத் திரும்பிக்
கொண்டிருக்கிறான்

அடர் மணற்காற்றில் உதிரும்
ஈச்சம் பழங்கள்
பொருக்கும் சலீமாவின் நீள்வர்ணக்
கனவுகளோடு

சிதைவுடைய இடமுலையில்
தாய்ப்பால் அருந்திக்கொண்டிருக்கிறாள்
விடுதலை அறிவிக்கப்பட்ட நாட்டில்
சலீமாவின் மகள்


***

நன்றி வலசை (பயணம் -3)

நன்றி நேசமித்ரன் & கார்த்திகைப்பாண்டியன்

***

என் மனதை முழுவதும்
குழந்தையை இடுப்பில் தூக்கி
நிலா காட்டிச் சோறூட்டும்
தாயென
ஆக்கிரமித்துவிட்டு,
கைவிடப்பட்ட குழந்தைகளைப் பற்றியும்
வகுப்பு எடுக்கிறாய்
 
தாயின் வாசம் குழந்தைதான் மறக்குமா
கடவுளே

ஆராதனா எனும் பேய் 31
எந்தக் கண்ணாடியில் எந்தப் பிம்பமோ
நான் ஏன் என்னை எரிக்ககூடாது
இந்தக் கண்ணாடியில் உன் முகம்
ஆராதனா
நான் என்னை அணையாது வைக்க வேண்டும்

***

சித்திரத்தின்
வற்றாத நதியின்
தூரிகையென
உனது பேரன்பு,
அதுஎனக்கு என்பதுதான்
இம்மழலை ஜனித்த ரகசியத்தின்
கொண்டாட்டப் பாடல்


ஆராதனா எனும் பேய் 30
ஆராதனா
மேற்கொண்டு
நான்ஆர்ப்பாட்டமிடும்
உன்னில் இருப்பது
நீயெனும் நான்..

உன்னில் இருக்கும் என்னைத்தான்
பல நூறுமுறை சாகச் சொல்கிறாயே

செத்தேனா நான்?


உதிர் இலை ஓசை
நீங்கள் என்னைப் பற்றி
உரையாடிக்கொண்டிருக்கும் இப்பொழுதில்
ஒரு லாரியின் முன் சக்கரம்
எனது பின்னந்தலையில்
ஏறி இறங்கிக்கொண்டிருக்கலாம்

நண்பர்களே உங்களது பேச்சின்
வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யாமல்
அப்படியே தொடருங்கள்
அது போதும்

உங்கள் துரோகத்திற்கு
உங்கள் குரூரப் பரிகாசத்திற்கு
உங்கள் அவிழ்க்கப்பட்ட பசித்த மிருகத்திற்கு

இன்னொருமுறை சொல்கிறேன்
சுய மரணத்தை விட
ஒரு கேடுகெட்டச் செயல்
வேறொன்றும் இருப்பதாய் இல்லை
உங்களது பெரு உலகத்தில்


Friday, January 25, 2013

அதிர்வுபெயரிடாப் பறவைகள் இரண்டின்
வீட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது
மழை நனைந்த நமது காலம்

சலசலத்து ஓடும் இம்மணல்நதியில்
கொஞ்சம் உயிர் அள்ளிப்பருக
வந்தேன் என்கிறாய்

என்னிடமிருந்த எல்லா ஆயுதங்களையும்
தூக்கி வீசிவிட்டு
அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டேன் உன்னை

நன்றி கல்கி இதழ் (06/01/2013)Wednesday, January 23, 2013

ஆராதனா எனும் பேய் 29
எங்கெங்குக் காணினும் நின் முகம்
ஆக்கிரமிப்பின் உச்சம்
அந்த அலறல்..?
இருப்பு
இருத்தல்
நன்று
சொல்
ஆம்
நல்லது
உனக்கு நேர் முன்பாக முகத்தை நீட்டியிருக்கிறேன்
அவசரமொன்றுமில்லை சற்றுப் பொறுமையாக
கன்னம் சிவக்க ஐந்து விரல்களும் பதியும்படி
ஓங்கி ஒருஅறை கொடு
ஆராதனா


பனிக்காலத்துக் குறிப்புகள் 6
இரண்டு ஃபுல்காவும்
ஒன்றரைத் தட்டு தயிர்சாதமும்
சந்தேகமில்லை
சர்வ நிச்சயமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்

உங்கள் யூகங்களையும் விமர்சனங்களையும்
ஈவுஇரக்கமின்றிக் கொலை செய்துவிட்டு
வாழக்கற்றுக்கொள்ளுங்கள்
கேள்விகள் ஏதுமற்றுச் சந்தோசமாக

என்னைப்போல
அல்லது
என்னொருவனைப்போல


Thursday, January 10, 2013

***
உயிர்ப்பு
மரணம்

காக்கா கத்துது
காக்கா கத்துது

கத்துது காக்கா; தாமதம் விஷம்

வேறென்ன?

எதற்காகவோ சட்டென நின்று போனது
இந்த வானொலி
இந்த இதயம்


பனிக்காலத்துக் குறிப்புகள் 5
ஸ்பரிசம் மின்னும் அந்தரங்க இசை
வழி தவறிய மருபூமியின்
அற்புத நிலம்

பறக்கும் வண்ணத்துப்பூச்சியின் வர்ணம் ததும்பும்
அழகுக் குமிழ்
ஏங்கி ஏங்கிப் பிறந்த முத்தம்..

வேட்கையின் ஒழுகும் வெயில்
அத்தனை கதகதப்பு
எனக்குக் கிடைத்த சொற்ப நிழலில் மிகத் தெளிவாய் நீ


அவ்வளவேசடலம் ஒன்றைத்தேடி
வலியுணர
எத்தனிக்கும்
உனக்கு முன் தான்
மிக நெருக்கமாக நின்றுக்கொண்டிருக்கிறேன்

நிற்காத மழைக்குப் பின்னாடி
ஞாபகத்தை வன்புணர்கிறாய்
நீ

நல்லது
நாளை நமது நாளே

எந்த ஓரத்திலாவது ஒதுங்கிக்கிடக்கலாம்
நானற்ற எனது வெற்று உடல்


பனிக்காலத்துக் குறிப்புகள் 4அதி அற்புத மலரொன்று
பனிக்காலத்தை இப்பனிக்காலத்தை
ஜென்ம சாபல்யக் கனவின் நிஜ மொழியில்
வசீகரிக்கிறது

முடிவிலி சிறகுகள்
சூழல் பிரிவெனும் நோய்மை உடலை
ரீங்கரிக்கிறது

தட தட  தடவென அடிக்கும் ஆதி மழையின்
இறகுகளடியில் நிர்வாணம்
தரித்திருக்கிறோம்
யாதுமாகி யாதுமாகி
இப்பெருங்கணம்
சும்மானாச்சும்
 எனக்குக் கிடைத்த ஆகப்பெரிய வரமோ பரிசோ அல்ல நீ

எனக்குக் கிடைத்த நீ

எனக்காகக் கிடைத்த நீ

நோட்: இதைப்பற்றிப் பேச யுகங்கள் கூட..

மேலும்

நான் நலம் உன்னோடு

நீ? ( முட்டாள் தனமான கேள்வி )


எனது பூவுடனான உரையாடலில் இருந்து
நான் வாழும் பறவை சில பொழுதுகளில்
என் கண்களைக் குளமாக உடைக்கும்

அதாவது வேறொன்றுமில்லை

பறவை அதிகமாக விரும்புவதும்
என்னில் உயிர்த்திருக்கும்
கண்களைத் தான்


கதறல்

ஏலியனொன்று உன் வீட்டுக்கதவைத் தட்டுகிறது
அகாலம் என்றும் பாராது

மழை பிசாசு நீயென்பது
அதுஅறிந்திருக்க வாய்ப்பில்லைதான்,
உன் பின்னங்கால்வரை பூத்திருக்கும்
கூந்தல் விரித்து ஆடு

அன்பின் ஆலாபனைக் கண்டு பைத்தியம் பிடித்து
மரித்துப் போகட்டும் அது

*

நன்றி கல்கி இதழ் (06/01/2013)
***
எல்லாமும் கொண்ட மெழுகின் நன்மை
தீபத்திற்கெனச் சொல்லும் முன்னே
ஆதி நீ தானென்று சொல்வதற்கே
துவங்குகிறேன்
இப்பிரளயத்தை
ஆமென்