Wednesday, March 7, 2012

சாத்தான் கடவுளாதல்!



தனிமையோடு விவாதித்துக் கொண்டிருக்கும்
இந்நேரத்தில் உள்வரும் நீ
என்னையொரு மனநலம் குன்றியவனென
எண்ணிவிட சாத்தியமுள்ளது

தவறில்லை,
நானும் இவனிடத்தில்
அப்படித்தான் சொல்லிவைத்திருக்கிறேன்
உன்னை  

அந்தப் பீடிக்கட்டில் சிலவற்றை
தந்துவிட்டு நீ கிளம்பலாம் ( உன் வசந்தி தேடுவாள் )

ஒரேயொரு நிபந்தனை
போகிற வழியில்
மாலனுக்குப் பைத்தியமென
தங்கப்பனிடம் மட்டும் சொல்லிவிட்டுப் போ

அவன் பார்த்துக் கொள்வான் மற்றனைத்தும்
( தங்கப்பன் செல்வியின் கள்ளப் புருஷன் ) 
செல்வி??
வேண்டாம், நானென் தனிமைக்குத் திரும்புகிறேன்

ஒரு சாத்தானின் உருவம் வரைந்து
உலவ விடுகிறேன் அதனை,

இப்பைத்தியக்கார வெளியில்
கைவிடப்பட்டவர்கள் உள்ள வரை
தன்னை யாரும் விழுங்கிவிட முடியாதென
கூக்குரலிடுகிறதது..
அதன் கண்களில் ஒரு குரூரம் வழிகிறது..
ஒரு பெருங்கோபம் கொப்பளிக்கிறது..

ஒரு எதிர்நோக்கா நொடியிலது
பக்கத்துக்கு குடிசையை வட்டமடிக்கிறது

காமத்தின் வெம்மையில் அவள் பற்றி எறிகிறாள்!!

கரமைதுனத்தின் கடைசி முனகலில்
சாத்தான் கடவுளாகிறான் 
அதனறியாது.

நாளை வயக்கரையில் நடக்கையில்
ஒரு அவசியமற்றப் புன்னகையோடு
எல்லோரும் என்னைக் கவனிக்க
அதிக வாய்ப்பு உள்ளது. 



நன்றி உயிரோசை.. 



Tuesday, March 6, 2012

நீங்கள் உங்களை நகர்த்துங்கள் வேகமாக




சொற்கள் மிதக்கும் அறையில்
மௌனமாக நிரம்பி இருந்தாள் அவள்

பசிப்பொழுதினில் பசலைக் கால
பிசுபிசுப்புகளை உண்டு வியாபித்தாள்

தனித்த இரவின் வெம்மைச் சுவரில்
அவள் எதை எதையோ வரையத் துடிக்கிறாள் 

பேரன்பின் உதட்டு முத்தம்
கண்ணாடிச் சில்லுகளாய் சிதறிக் கிடக்கும்
அப்படுக்கை அறையினுள்,

யாருடைய இசையையோ நிரம்பப் பருகி
பேதலில் உரக்கக் கத்துகிறாள்

இதென் காதல்..
இதென் காதல்..

நீங்கள் நகர்த்துங்கள் உங்களை வேகமாக! 



நன்றி உயிரோசை..



Sunday, March 4, 2012

அன்பெனும் ஆதிச் சொல்



தற்சமயம்
சுயமாய் மரணித்தலில்
உன்னைப்போல எனக்கும் உடன்பாடில்லை.

அந்த ஒற்றை ரோஜா
இவ்வளவு அழகா!

குருவி கீரீச்சிடும் சுவர்களற்ற மாடியில்
வெட்கம் இதழுக்கா
முத்தத்திற்கா..?!


நான் நீ நான் நீ இப்படியேப் போகும் அது!



பெருந்துயரமென
வாழ்த்துகிறாயோ
உடைந்தொழுகும் உந்தன் மௌனத்தின்
கானல் சொல்லில் மிச்சமிருக்கும் என்னை!


வண்ணத்துப்பூச்சியை இன்னும் கொஞ்சம் அழுத்துங்கள்



அன்பைப் பெறுதலில்
அவ்வளவு நேர்த்தியாக
ஒழுகும் குடிசையின் ஏழை மனமென
உட்புகும் புரிதல்,

அப்-பெரியமுள் பழுதடைந்த தருணம்..

வன்மமாகப் பீய்ச்சியடிக்கப்பட்ட வெய்யிலால்
சில்லு சில்லுகளாக நொறுங்க
எத்தனிக்கும் கண்ணாடியாக மாறுதல்,

சுலபமென்று
இவனொரு பொழுதும் நம்பவில்லை

அன்பு
காதல்
நட்பு
நேசம்
இன்ன பிற
வாழ்க வாழ்கவே..


மறுதலித்தல் நிரம்ப மௌனம்..!



நட்பெனும் மாயக்காட்டில்
ஓநாயின் சப்தமெழுப்பும்
இச்சருகை
காற்றின் ஒவ்வாமைத் தொடுதலிலிருந்து
பிரித்துச் செல்லுதலில்
ஏனுனக்கு இத்தனைத் துயரம்?

யாருமற்று இருத்தலின் தலைகீழ் விதி!



அடர்ந்த காதலில்
அர்த்தமற்ற சந்தேகங்கள்
பிய்த்து தின்றுக் கொண்டிருக்கிறது
ஞாபகார்த்தங்களின்
பச்சை வர்ணத்தை!

நன்றி நல்லதொரு சொல்!



அன்பெனும் பெருங்காட்டில்
எரிந்து முடிந்த
கடைசித் தீக்குச்சியென
நான் என்னை அவிழ்க்கிறேன்
உந்தன் கொடுந்த்தீர்மானத்திலிருந்து.


மரணத்தின் முதல் வாய்ப்பாடு



வாழ்வெனும் தீரா நதியில்
ஒரு சிற்றிலையென
அலைந்துக் கொண்டிருக்கிறது
பேரன்பு.

ஒரு குற்ற உணர்விலிலிருந்து விடுபடுதல்







யாருமற்ற கடற்கரையில்
எனக்கு நானேப் பேசிக்கொண்டு

வாழ்வு திரும்பும்
என் வீட்டு வீதியில்
அநாதரவாய் நின்று கொண்டிருக்கும்
தெரு நாயின் காதில்
வலியப் போய் தடவிக் கடக்கையில்

ஆடை மறைத்த மன நிர்வாணம்
என்னை உன்னுள் கூட்டிச்செல்கிறது
இன்னும் நெருக்கமாக.