Saturday, March 31, 2012

உன்னைக் கொன்று என்னில் புதைப்பதென்பது..





குளத்தில் இட்டது
ஞாபகக் கூட்டத்தின் கூழாங்கல்லா
அல்லது
நினைவுச் செருகலின் மதம் பிடித்து
குழம்பிச் செத்த
"நானெனும்" சாத்தானையா?

....................




என்னைக் கொன்று குழித்தபோதும்
உன்னையே அசை போட்டுக் கொண்டிருக்கிறது
எனது நினைவு..
அதற்கு பேரன்பு எனப் பெயரிடுவதா
அல்லது
பிசாசென மனம் பிறழ்வதா?!

....................







நிராகரிப்பின் தெவிட்டலில்
பிணம் பற்றி எரியும்
இடுகாட்டமைதி!

மரணத்தின் உதடுகளில்..







ஏந்தப்படாத முத்தங்களின்
அசூயையென
பிளந்து நிற்கிறது
ஒரு வாய்க்கரிசி
மரணம்.

....................








புறக்கணிப்பை புரியும்படியாகச் சொல்லென்றேன்
மௌனத்தை இன்னும் கூர்மையாக
சொருகிவிட்டுப் போகிறாய்

....................








துயரத்தைக் கொண்டாடத் தெரியுமெனக்கு என்றேன்
நம்ப மறுத்து நிராகரிக்கிறாய்
ஒரு நம்பும்படியான பொய்யோடு

....................








கருணையே ஒரு கொலை தான்
பிறகெதற்கு கருணைக் கொலை?

கொலை உத்தமம்
அதனினும் சிறந்தது
தற்கொலைக்குத் தூண்டுதல்

Tuesday, March 27, 2012

அடுத்த கணம்!




கனவில் தொலைவேன் நானும் என்னுடன் கூடி
அந்நாள்
அழ அழ அழாதே
ஒரு குழந்தையைப் போன்றோ
அல்லது
முகமூடி அணிந்திருக்கும்
ஒரு கோமாளியைப் போன்றோ!


உயிர்த்திருப்பு!







மௌனமெனும் மந்திரச் சொல்லைக்
கொத்திக் கொத்தி
தின்று கொண்டிருக்கிறது
அன்பெனும் நீர்ப்பறவை!  



நன்றி உயிரோசை 


அன்பென்பது நோயல்ல







அன்பு என்பது ஒரு தீரப்பெறாத நோயென விழைந்த
எனதந்த ஒரு முழுப் புரியாமையை
மிகச் சுலபமாய் மேலுமொரு
அன்பின் கண்ணி கொண்டு
என்னை வாழப் பணிக்கிறாயெனும்போது
ஒரு தற்கொலை எண்ணம்
எனது தற்கொலையிலிருந்து
எத்தனை தொலைவு மீளச் செய்கிறது
என்பதை நானொரு கவிதை வடிவில்
எப்படி பதிவு செய்வேன்!


நன்றி உயிரோசை


Friday, March 16, 2012

வாழ்வாதாரம் என்றொன்றைத் தேடி..!




எனது நிழல் வரைந்துக் கொண்டிருக்கிறது இன்னும் என்னை..
எவ்வளவு பெரிய அபத்தக் குற்றச்சாடல்??

எழுதிப் புரியாத வாழ்வு
எழுதப் புரிதலென்பதில்  
உன்னைப் போலவே எனக்கும்
உடன்படிதலில் இல்லை பேரன்பே!

நன்றி நவீனவிருட்சம்

Tuesday, March 13, 2012

அரூபம்



உயிர்த்திருத்தலுக்கும் வாழ்விற்கும்
நடுவிலுள்ள வெளி
இத்தனை சிறியது தானென்கிறாய் நீ
எத்தனை பெரியதோவென வியக்கிறேன் நான்
இனி
அவரவர்
அவரவர் இருத்தலுக்குத் திரும்புதல்
சுலபத்தில் சாத்தியமல்ல!  


நன்றி உயிரோசை..  

அன்பெனும் தீரா நோய்








ஒரு தற்கொலை முயற்சியில்
ஆழப் பதிந்த பெருவலி
சமணக்காலிட்டு தரையிலமர்ந்து
மிக எதார்த்தமாய் விழுங்கிய முதல்துளி மதுவினை
அநாயாசமாய் ஞாபகத்தில் அரைகிறது

குடித்தப்பொழுது கிடைக்கும் குடிகாரப் பட்டம்
குடி நிறுத்திய பின்பும் பின்தொடர்வது
ஒருவித மனக்கலக்கத்தையும்
அதிலிருந்து பிறழ்வையும்
எளிதில் உருவாக்கிவிடக்கூடிய
அபாயம் உண்டென்பதால்..

பட்டத்தையும் பட்டம் சூட்டுபவர்களையும்
மிக கவனமாகக் கையாள வேண்டும்
இல்லையெனில்
குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு
முந்தையதைக் காட்டிலும்
பேராபத்தான குற்றங்கள் புரியும்
ஆயுதத்தை உங்களுக்குத் தருவிப்பார்கள்
ஓர் எளிய புன்னகையோடு

அப்பொழுதும் அவர்களை அமைதியாகவே
எதிர்கொள்ள வேண்டும்
தவறினால்
காய்ந்த முந்திரி,சாக்லேட் போன்றவைகளாலான
ஒரு அருமையான சுவையுடைய ஐஸ்கிரீமென
அவமானத்தின் தலைகுனிவை
ருசித்து உண்ணப் பணிப்பார்கள்..

அத்தருணம்
ஒரு கொலையாலோ
ஒரு தற்கொலையாலோ
புனையப்பட்டிருக்கும் அவ்-இடம்

மேலும்
அன்பெனும் தீரா நோய்
அங்கும் இங்கும் வேகமாகப் பரவும்
அவ்வளவுதான் வேறொன்றுமில்லை.


நன்றி உயிரோசை..  

Wednesday, March 7, 2012

சாத்தான் கடவுளாதல்!



தனிமையோடு விவாதித்துக் கொண்டிருக்கும்
இந்நேரத்தில் உள்வரும் நீ
என்னையொரு மனநலம் குன்றியவனென
எண்ணிவிட சாத்தியமுள்ளது

தவறில்லை,
நானும் இவனிடத்தில்
அப்படித்தான் சொல்லிவைத்திருக்கிறேன்
உன்னை  

அந்தப் பீடிக்கட்டில் சிலவற்றை
தந்துவிட்டு நீ கிளம்பலாம் ( உன் வசந்தி தேடுவாள் )

ஒரேயொரு நிபந்தனை
போகிற வழியில்
மாலனுக்குப் பைத்தியமென
தங்கப்பனிடம் மட்டும் சொல்லிவிட்டுப் போ

அவன் பார்த்துக் கொள்வான் மற்றனைத்தும்
( தங்கப்பன் செல்வியின் கள்ளப் புருஷன் ) 
செல்வி??
வேண்டாம், நானென் தனிமைக்குத் திரும்புகிறேன்

ஒரு சாத்தானின் உருவம் வரைந்து
உலவ விடுகிறேன் அதனை,

இப்பைத்தியக்கார வெளியில்
கைவிடப்பட்டவர்கள் உள்ள வரை
தன்னை யாரும் விழுங்கிவிட முடியாதென
கூக்குரலிடுகிறதது..
அதன் கண்களில் ஒரு குரூரம் வழிகிறது..
ஒரு பெருங்கோபம் கொப்பளிக்கிறது..

ஒரு எதிர்நோக்கா நொடியிலது
பக்கத்துக்கு குடிசையை வட்டமடிக்கிறது

காமத்தின் வெம்மையில் அவள் பற்றி எறிகிறாள்!!

கரமைதுனத்தின் கடைசி முனகலில்
சாத்தான் கடவுளாகிறான் 
அதனறியாது.

நாளை வயக்கரையில் நடக்கையில்
ஒரு அவசியமற்றப் புன்னகையோடு
எல்லோரும் என்னைக் கவனிக்க
அதிக வாய்ப்பு உள்ளது. 



நன்றி உயிரோசை.. 



Tuesday, March 6, 2012

நீங்கள் உங்களை நகர்த்துங்கள் வேகமாக




சொற்கள் மிதக்கும் அறையில்
மௌனமாக நிரம்பி இருந்தாள் அவள்

பசிப்பொழுதினில் பசலைக் கால
பிசுபிசுப்புகளை உண்டு வியாபித்தாள்

தனித்த இரவின் வெம்மைச் சுவரில்
அவள் எதை எதையோ வரையத் துடிக்கிறாள் 

பேரன்பின் உதட்டு முத்தம்
கண்ணாடிச் சில்லுகளாய் சிதறிக் கிடக்கும்
அப்படுக்கை அறையினுள்,

யாருடைய இசையையோ நிரம்பப் பருகி
பேதலில் உரக்கக் கத்துகிறாள்

இதென் காதல்..
இதென் காதல்..

நீங்கள் நகர்த்துங்கள் உங்களை வேகமாக! 



நன்றி உயிரோசை..



Sunday, March 4, 2012

அன்பெனும் ஆதிச் சொல்



தற்சமயம்
சுயமாய் மரணித்தலில்
உன்னைப்போல எனக்கும் உடன்பாடில்லை.

அந்த ஒற்றை ரோஜா
இவ்வளவு அழகா!

குருவி கீரீச்சிடும் சுவர்களற்ற மாடியில்
வெட்கம் இதழுக்கா
முத்தத்திற்கா..?!


நான் நீ நான் நீ இப்படியேப் போகும் அது!



பெருந்துயரமென
வாழ்த்துகிறாயோ
உடைந்தொழுகும் உந்தன் மௌனத்தின்
கானல் சொல்லில் மிச்சமிருக்கும் என்னை!


வண்ணத்துப்பூச்சியை இன்னும் கொஞ்சம் அழுத்துங்கள்



அன்பைப் பெறுதலில்
அவ்வளவு நேர்த்தியாக
ஒழுகும் குடிசையின் ஏழை மனமென
உட்புகும் புரிதல்,

அப்-பெரியமுள் பழுதடைந்த தருணம்..

வன்மமாகப் பீய்ச்சியடிக்கப்பட்ட வெய்யிலால்
சில்லு சில்லுகளாக நொறுங்க
எத்தனிக்கும் கண்ணாடியாக மாறுதல்,

சுலபமென்று
இவனொரு பொழுதும் நம்பவில்லை

அன்பு
காதல்
நட்பு
நேசம்
இன்ன பிற
வாழ்க வாழ்கவே..


மறுதலித்தல் நிரம்ப மௌனம்..!



நட்பெனும் மாயக்காட்டில்
ஓநாயின் சப்தமெழுப்பும்
இச்சருகை
காற்றின் ஒவ்வாமைத் தொடுதலிலிருந்து
பிரித்துச் செல்லுதலில்
ஏனுனக்கு இத்தனைத் துயரம்?

யாருமற்று இருத்தலின் தலைகீழ் விதி!



அடர்ந்த காதலில்
அர்த்தமற்ற சந்தேகங்கள்
பிய்த்து தின்றுக் கொண்டிருக்கிறது
ஞாபகார்த்தங்களின்
பச்சை வர்ணத்தை!

நன்றி நல்லதொரு சொல்!



அன்பெனும் பெருங்காட்டில்
எரிந்து முடிந்த
கடைசித் தீக்குச்சியென
நான் என்னை அவிழ்க்கிறேன்
உந்தன் கொடுந்த்தீர்மானத்திலிருந்து.


மரணத்தின் முதல் வாய்ப்பாடு



வாழ்வெனும் தீரா நதியில்
ஒரு சிற்றிலையென
அலைந்துக் கொண்டிருக்கிறது
பேரன்பு.

ஒரு குற்ற உணர்விலிலிருந்து விடுபடுதல்







யாருமற்ற கடற்கரையில்
எனக்கு நானேப் பேசிக்கொண்டு

வாழ்வு திரும்பும்
என் வீட்டு வீதியில்
அநாதரவாய் நின்று கொண்டிருக்கும்
தெரு நாயின் காதில்
வலியப் போய் தடவிக் கடக்கையில்

ஆடை மறைத்த மன நிர்வாணம்
என்னை உன்னுள் கூட்டிச்செல்கிறது
இன்னும் நெருக்கமாக.

ஓசையில்லா இசை!







மரணத்தின் பயம் மிக எளிமையாக
விடை பெற்றுச் செல்கிறது
உனது குருஞ்சிரிப்பின்
உனது கடைசித் துளி மௌனத்தின்
அர்த்தங்கள் குமிழ்ந்த
இலக்கற்றப் பற்றுதலில்.


பதிமூன்றாவது மாடியிலிருந்து இன்னும் யாரும் குதிக்கவில்லை!








தற்கொலைக்கு முந்தைய இரவில்
இயலாமையின் உச்சத்தில் நின்று
பதில் தெரியாத கேள்விகளுக்கு
ஒரு அழகான இளம் பெண்ணை
மெல்ல மெல்ல நிர்வாணப்படுத்துவதாய்
திசை அறுத்துக் கொண்டேன்.

இனி









அகாலத்தின் நிசப்த தெருவில்
உடலுதிர்ந்த இறகென தனித்தலைகிறேன்  

பிரிவின் துயர்
நிலா விழுங்கும் பௌர்ணமி கடலென
அதி பிரகாசமாய்.

என்னுள் உடைந்து-அழுகும்  
ஞாபகக் கீறல்களை
மாம்ச விருப்புடன் 
அலகு முட்டிச் செல்ல
தாழப் பறந்து கொண்டிருக்கிறது 
பிணந்தின்னிக் கழுகொன்று.

ரயில் பாலம் அருகே
இனி நீ வரத் தேவையில்லை
பயந்து பயந்தவாறே!  




காதலாதல்








மழைநீர்க் கோடுகளெனப் பதிந்திருக்கும்
உனது விரல் ரேகைகள்,


அழகழகான வண்ணங்கள் நிறைந்த
வரைபட வீட்டின் தனிமை போல்

அல்லது


தரப்படாத யாசகக் காசின் கணம் ஒத்த
ஏழ்மைக் குழந்தையின் தத்தளிக்கும் இதயம் போல்


என அறிந்த நிமிடத்தில்
யாதொரு யோசனையுமற்று
உனது கரங்களைப் பற்றிச் செல்கிறேன்
நம் காதல் இதுவரை கண்டிராத
ஓர் மர்மக் குகையின் அற்றத்திற்கு.

நன்றி உயிரோசை


Friday, March 2, 2012

ஒற்றைப் புறந்தள்ளலில் உலகை ஒடித்தல்

தெய்வத்தின்  சன்னமான குரலில்
சீழ் வடிந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில்
நீ எதை நிரூபிக்க இத்தனைப் 
பிரயாசையோடு எத்தனிக்கிறாய் 

மனம் ஒரு பெருங்கிடங்கி 
உனது அனுமானங்களையெல்லாம்
அதனில் இட்டு வை 

மதுவைக் குடித்து 
பெண்ணைத் தின்று 
அடுத்த கணத்திற்கு குரூரமாய் முன்னேறு 

பனிக்குடம் உடைந்து அலறும் மகப்பேறு
 பெண்ணின் அவ்வொலியை
 இசைக் குறிப்பெனக் குறிப்பெடு

அவர்கள் இப்படித் தான் 
 யாரையும் எதற்கெனினும் எப்பொழுதும்
 குற்றம் கூறிக் கொண்டுதானிருப்பார்கள்   

நீ உன் குற்றத்தை 
முலைக்கழும் கைப்பிள்ளையின்
தசை திருகி வெடிச்சிரிப்போடு கடந்து செல்

நீ எத்தனை முறை எப்படிக் கூவினாலும் 
மனம் பிறழ்ந்தவனென உன்னை 
யாரும் அடையாளப்படுத்தமாட்டார்கள்

ஒவ்வொருவரும் தங்கள் முக மூடியை 
தெய்வத்தின் சீழ் வடியும் குரலிலிருந்து 
அவ்வளவு தத்ரூபமாய் செய்து வைத்திருக்கிறார்கள் 

ஒரு நிசப்தமான இரவில் 
 முட்டக் குடித்துவிட்டுநீயே
தற்கொலை செய்துகொள் உன்னை.


நன்றி உயிரோசை