Sunday, August 25, 2013

***




மௌனித்துப் புன்னகையிப்பவளின்
உள்ளங்கையில்
சேர வேண்டும்

மூச்சிறைக்க
விம்மி விம்மி நீர் வடிந்த
எனது கண்களை
நெஞ்சணைத்து தேற்றும் அவளை
காண்பீர்களெனில்
இந்த ஞாபகத்தைக் கையில் கொடுங்கள்

வானத்தை அளத்தல்





மெல்லியதொரு உரையாடலுக்குப் பிறகு
ரோஜா வேண்டுமா என்றேன்

சிரித்துவிட்டு
அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்
தற்சமயம் இரண்டு உள்ளங்கைகளையும்
குவிந்தவாக்கில் விரித்துக்காட்டு
என்கிறாள்

உதடு முட்டி
தலையசைத்தேன்

ஏறி அமர்ந்துகொண்டு பற என்கிறாள்

பறந்து கொண்டிருக்கிறோம்
கண்கள் மினுக்க

கடலின் உள்ளங்கையில் நிமிர்ந்து நிற்கும் வானம்





அந்தக் கடலின் மீது நிமிர்ந்து நிற்கிறது எனதுயிர்

நாங்கள்
உங்களைப்போல் மாறவேண்டுமென
வற்புறுத்தாதீர்கள்
உங்களது ஏமாற்றங்களை
ருசிக்க

எனதுயிர்
அந்தக் கடலின் மீது நிமிர்ந்து நிற்கிறது

எண்ணெய் படிந்த கையைத்
துடைப்பதற்கு
அவரவர்க்கு அவரவர் வானம்

பின்முதுகில் எறும்பு கடிக்கிறதா??
நன்று

கடலின் உள்ளங்கையில் நிமிர்ந்து நிற்கிறது என் வானம்

தொலைவில் அசையும் சிறு வெளிச்சம்




அருவியில்
நனைவதற்கும்
அருவியை நனைப்பதற்கும்
உள்ள வித்தியாசம் தான்
இங்கே ப்ரதானமாய்

பிறகு புரியும்




ப்ரத்யேகமான நதி துயிலும் வனத்தில்
அந்தப் பறவை சிறகு உதிர்க்கும்
காலம்..
தேடி அலையும் உதயத்தை
அஸ்தமனம் என்றா
நகைக்கிறீர்கள்?

காதலித்துதான் பாருங்களேன்

ரேகை




மெல்லிய ஸ்பரிசரேகையெனக் கொஞ்சுகிறாய்
கூடவே எனது கண்களையும் மூடிக்கொண்டாய் !

நள்ளிரவின் உள்பக்கம் மிதந்தலையும்
இப்பெருங்காடு
முரட்டுத்தனமாகத் தட்டிக்கொண்டிருந்தது
உனது கனவை

இருப்பு




உணவு மேஜையில் அமர்ந்தவாறு
வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரையே முறைத்துக்கொண்டிருந்தேன்..

“ என்ன என்பதுபோல் சைகையிக்கிறாய் ”

இங்கே வா என
ஆகாயம் பூக்க
பருகுவதற்குப் பதில் விழுங்கிவிடுகிறேன்

அச்சுறுத்தும் தனிமை




சீக்கிரம் அழைத்துப் போ..
அச்சுறுத்தும் என் தனிமையின் உருவத்தை தன் வீட்டு மொட்டைமாடியில் நின்று வனையும் அவளோடு தான் பேசிக்கொண்டிருக்கிறேன்

இங்கே எனது அறைக்கண்ணாடியில் விரியும் உன் பிம்பத்தை தொலைவின் கணங்களில் கொடுத்துவிட்டு..

என்ன இருப்பு இது?
என்ன இருப்பு இது?
சீக்கிரம் அழைத்துப் போ

கிழமை




ரிங் மாஸ்டர் கணேசகுமாரன்
டிக்கெட் பரிசோதகர் ராம்லால்சவுக்கானிடம்
ஒரிஜினல் ஐடி-ப்ரூப் இல்லாமல்
விழி பிதுங்கிய
27/06/2012-ன் இரவினைப்போல
வெயிலில் மிதந்துகொண்டிருக்கிறது
கைகள் உதறி வேகவேகமாய் நீ சென்றுகொண்டிருக்கும்
இக்கிழமை

ஆமென் 

ஆம்




வீணை மழைக்குப் பிறகு
அந்தக் கொலை
நடந்திருந்தது

முலை நிமிர
குறி அதிர காதலிக்கிறோம்
நாங்கள்

ஆம் காதலிக்கிறோம் நாங்கள்.

உங்கள் தேநீரில்
ஆவி புரளட்டும்
எப்பொழுதும் போல

ஆம் காதலிக்கிறோம் நாங்கள் 

ஆமென்




மெது மெதுவாகத் தேடும்
வானவில்
மூங்கில் வளைய
மூங்கில் வளைய

பெய்த
மழையை
பரிசளிக்கிறோம்
இப்பகலுக்கு

ஆமென்

என்னோடு வா




இந்த நதியிலிருந்து
எந்த ஒளியும்
விலகிவிடவில்லை

தேவாலயத்திலிருந்து
இயேசு கிறிஸ்து
முத்தங்களை
தானே இறைந்துக் கொண்டிருக்கிறார்

நான் உன்னை காதலிக்கிறேன்
நான் உன்னை காதலிக்கிறேன்

எந்தப் பூக்களிலும் இல்லாத
நான்
காதலிக்கிறேன்

சுவாசித்தாயா?
அதுதான் நல்லது

மேலும்.

மாயமான்




கனவிலிருந்து விழுந்து
குருதி தெறிக்க கை உடைந்திருக்கிறதா?

பதிமூன்றாவது பெக்கில் மதுபோத்தலின் மூடியை
காதலியின் நெற்றிப்பொட்டென வெறித்ததுண்டா?

எறும்போடு பேசிய பேரனுபவம்
இருந்திருக்கிறதா?

தனிமை பற்றிய பயம்
வந்திருக்கிறதா?

மனப்பிறழ்வு எனும் மாயமானின்
பரிச்சயம் இருக்கிறதா?

மற்றும்
பேசிக்கொண்டிருப்பது நான்தானா என்ற
வலிமீறிய சந்தேகம் தேவையில்லை

பெருந்தீபம்




மார் கசியவேண்டும் என்பதற்காகவே
என்னை அடிக்கடி அழச் செய்பவள்
அவள்;
கேட்டால்
விளையாட்டுக்கு என்பாள்

இக்கணம்
அவளுக்கு மிகவும் பிடித்த
என் முத்தத்தை வழங்குகிறேன்
அவள்
சிரிக்கவேண்டும் என்பதற்காக
வழக்கத்தை மீறி

மேலும்
ஜீவநதியிலிருந்து
எங்கேயும் போகவில்லை
நாங்கள் 

அமைதியுறுக




கஞ்சாஇலையின் மணம்ஒத்த
இரவின் இருத்தல் அறியாமல் இருப்பவர்கள்
அந்த மலையிலிருந்துக் குதிக்கத்
துவங்கும்பொழுது

வெளிச்சம் பரவும்
குகை செல்லும் வழியில்
உக்கிர நடனம்ஆடிப் பாடுகிறோம்

அமைதியுறுக

அவ்வளவே



பேருவுவகையுடன்
காற்றில் தனித்த இலையாக
மிதந்தலைந்துகொண்டிருந்தேன்

இளைப்பாறுஎன
கரம்பற்றி அழைத்துச் செல்கிறது
குளிர்நதி

மறுப்பேதும் அறிவிக்காமல்
ப்ரியத்தின் தீவிரம் பொருட்டு
இசைக்கத்துவங்கினேன்
பிரித்யேகப்பாடலொன்றை

நிம்மதிக்காற்றுடன்
ஆசுவாசமாக என் தோளயர்கிறது
நதியின் கண்கள்

அன்பின் ருசி



தவம் மாதிரி
செய்து காட்டிக்கொண்டிருந்தார்கள்
விருப்பத்தின்
நிதானத்தை

கொடுந்தீப் பரவும் ஓநாய்களின் கண்கள்
குறித்த சலனம் துளியுமின்றி

நதி அழுத
மலை அறியும்
அன்பின் ருசி

ஆமென்

குரல் கொடு




ஞாபகப்போர்வையின் வெள்ளை அமைதி
கரங்களில் தளர்கிறது

கண் அமர்கிறேன்

ஆமா... தொலைவு ஏன் இவ்வளவு வலிக்கிறது
என் பெண்ணே

நீ அருகிலில்லாத
இந்த மழையை
எதிர்கொள்ள அச்சமாகயிருக்கிறது

ரதியும் உடைந்த நிலவும்




கொஞ்சம் குண்டுதானென்று சொல்லும் அளவுக்கு மாநிறமாக இருப்பாள் ரதி. செவ்வாய்க்கிழமை மாலைகளில் கருகருவென அடர்ந்த தனது நீளக் கூந்தலுக்கு சீயக்காய் பூசி குளித்து நெற்றியில் குங்குமம் இட்டு வஞ்சிநாயகி அம்மனை உருகி உருகிப் பாடுவாள். அவளுடைய குரலில் ஒரு ஆன்மா இருக்கும், அந்த நேரங்களில் அவள் வீட்டைக் கடக்க நேரிட்டால் நமக்கும் ஒருவகையான சோகம் பீடித்துக்கொள்ளும். வருகிற மூன்றாம் தியதியோடு முப்பத்தைந்து வயது பூர்த்தி ஆகிறது ரதிக்கு. முதல் புணர்தலை இன்னும் புசிக்காத கன்னி அவள்.  

பெரிய குடையென விரிந்திருக்கும் ஆலவிருட்சத்தின் அடியில் பழுப்பேறிய அழுக்குத்துண்டினை முழுவதும் நரைத்த தன் தலைக்கு கொடுத்து நீள்வாக்கில் ஒருக்களித்தபடி படுத்துக்கிடக்கிறான் ரதியின் ஏழைத் தகப்பன் செல்லப்பன். நாட்டுச்சாராய நெடி அவனது மூக்கிலிருந்து துடித்துக்கொண்டிருக்கும் காற்றோடு மிதந்து மிதந்து கலந்துக் கொண்டிருந்தது. ஓரளவுக்கு வசதியானக் குடும்பம்தான் செல்லப்பன் பிறந்தது. வளையல் வியாபாரம் செய்துகொண்டிருந்த காலத்தில் பரிமளத்தை நேசித்துக் கல்யாணம் செய்துகொண்டவன், பரிமளம் வேறு சாதிப் பெண் என்பதனாலேயே வீட்டிலிருந்து சொத்து எதுவும் கிடைக்கவில்லை அவனுக்கு. அரைவயித்துக் கஞ்சி குடித்தாலும் செல்லப்பனும், பரிமளமும் சந்தோசமாக வாழப்பழகியிருந்தனர். ரதியை பிரசவித்துவிட்டு பரிமளம் செத்துப்போனதில் உடைந்து போனவன் தான் அதிலிருந்து மீண்டுவரவே இல்லை. அல்பாயிசில் பரிமளத்தைக் கொன்றுபோட்டாள் ரதியென முட்டாள்தனமாக சதா புலம்பிக்கொண்டிருப்பான்.

வசதியெதுவும் இல்லாவிட்டாலும் ரதியைத் தனக்குப் பிடித்திருக்கிறது, அவளை தனக்கு மணம் முடிக்கப் பேசுமாறு அப்பன் ராமசாமியிடம் கேட்டுக்கொண்டிருந்தான் சுரேந்திரன். ராமசாமி ஒரு சிடுமூஞ்சி, தையல்கடை வைத்திருக்கிறான், எப்பொழுதும் சம்சாரம் சரசுவை எதையாவதுச் சொல்லித் திட்டிக்கொண்டே இருப்பவன். வேறு வசதியானக் குடும்பத்திலிருந்து சுரேந்திரனுக்கு பெண் அமைத்து தருவதையே விரும்பிக்கொண்டும் பிடிவாதமாகவும் இருந்தான். சரசுக்கு சுரேந்திரனை நினைத்தால் பாவமாக இருந்தது. சுரேந்திரனாலும் அப்பனை எதிர்க்கவே முடியவில்லை கடைசிவரை.

செல்லப்பனின் இருப்பைச் சமன்படுத்த காலம் அனுமதிக்கவில்லை, அதன்பிறகு ரதி தனித்துப்போனாள். பக்கத்தில் செங்கச்சூளையில் அன்றாடக் கூலிக்குப் போய் வயித்தை நிரப்பிக்கொள்கிறாள். நகரத்தில் ஒரு கம்பெனியில் அக்கவுன்டன்ட் வேலை கிடைத்து அங்கேயே தங்கிக்கொண்டான் சுரேந்திரன். சொந்தக்கிராமத்திற்கு வருவதே இல்லை. சரசு செத்தப்ப மட்டும் ஈமக்காரியம் செய்வதற்காக ஒரேயொரு தடவை ஊருக்கு வந்துட்டுப் போனவன்தான். ராமசாமி பாதிநேரம் தையல்கடையைப் பூட்டிவிட்டு வீட்டிலேயே படுத்துக்கொண்டான். சரசுவைப் பற்றிய நினைவுகளை எவ்வளவோக் கிளறிப்பார்த்தும் அவனுக்கு எதுவுமே ஞாபகத்திற்கு வரவேயில்லை. திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாய் ரதியைப் பற்றி யோசிக்கத் துவங்கினான்.

“கருங்குறி தீண்டாத யோனியின் தனித்த இரவு வக்கிரமாக எம்பிக் குடிக்கிறது” ராமசாமியை.

ரதி உறக்கம் வராது புரண்டு புரண்டுப் படுத்துக் கொண்டிருந்தாள். அவள் செவ்வாய்க்கிழமை மாலைகளில் பாடுவதை நிறுத்தி வெகு காலமாயிற்று. உத்திரத்தில் அடர்கருப்பில் தலைகீழாய்த் தொங்கும் வௌவால் ராமசாமியின் முகத்தையே ரொம்ப நேரம் கண்கொட்டாமல் பார்த்துவிட்டு எதற்கோ ஆமா என்பதுபோல சிமிட்டுகிறது.

ஈர உடம்பை திவசத்திற்கு கொஞ்சமும் மீன்களுக்கு கொஞ்சமும் தின்னக் கொடுத்துவிட்டு குளத்திலிருந்து தனங்கள் இறைஞ்ச, தடித்தப் பிருஷ்டம் அசைய அசைய வீட்டிற்குச் சென்றுக்கொண்டிருந்தாள் ரதி. அவள் ருதுவானது முதல் அவளை எண்ணி சுயமைதுனம் செய்யும் ஊமைக்குசும்பி சிவனாண்டி அன்றும் அதேபோல் குளக்கரைப் புதரில் சோர்ந்து சரிகிறான், நாகசர்ப்பமொன்று தன் அழகான நாக்கால் அவனிடம் பேசிவிட்டு வெயில் மீது ஏறி நெளிந்து நெளிந்துச் சென்றது.

ரதியை சூளைக்கு வேலைக்குப் போகவேண்டாம், தன்னோடு ஒத்தாசையாக இரு என்று ராமசாமி அழைத்துவந்துவிட்டான், அவளும் சரியென்று நிரந்தரமாக அவன்கூடவே இருந்துகொண்டாள். ரதியின் அம்மணத்தை தொட்டுப்பார்த்து தொட்டுப்பார்த்து  எல்லா நேரமும் தூங்கிப்போவான் ராமசாமி. ஆரம்பத்தில் கிழவனை நினைத்து எரிச்சல் பட்டவள் போகப்போக அரைப்புணர்ச்சியைப் பழகிகொண்டாள். அது அவளுக்கு மிகுந்த துயரத்தைக் கொடுத்தது. ஒரு சாமத்தில் மரக்கதவைத் திறந்து வாசலில் அமர்ந்தவாறு இருள் அப்பிய வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். செல்லப்பனும், சிவனாண்டியும் போதைவெறியில் ஒருத்தரையொருத்தர் மூர்க்கமாகத் தாக்கிக்கொண்டிருந்தனர். வாய்விட்டுச் சிரித்தப்படி வீட்டிற்குள் நுழைந்து பெட்டியிலுள்ள சரசுவின் பழைய புடவையொன்றை எடுக்கிறாள், வௌவால் சப்திக்காது பறந்து சென்று உத்திரத்தைக் காலியாக்கியது.

“ஊர் மயானத்திற்கு மேற்கு பக்கமுள்ள குளத்தில் மெல்ல மெல்லக் குதிக்கிறது சூரியன்”

ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் சுரேந்திரன், லட்சுமி, சமீபத்தில் வயதுக்குவந்த மகள் ரதி அனைவரும் முகத்தில் சந்தோசம் கொப்புளிக்க தாங்கள் வசிக்கும் பெருநகரத்தின் மாடிவீட்டிலிருந்து சினிமாவுக்காக கிளம்பிச் செல்கின்றனர். பழுப்பேறிய அழுக்குத்துண்டினால் தன் வியர்த்த முகத்தை துடைத்தபடி வாசற்கேட்டில் ஒரு காவலாளியைப்போல நின்றுக்கொண்டிருந்தான் ராமசாமி. தெருமுக்குத் திரும்பும் வளைவில் ரதி மட்டும் திரும்பிப் பார்த்து சைகையிக்கிறாள் நேரத்திற்குச் சாப்பிடுமாறு.

***

உயிர்த்திருப்பின் இசை




ஒரு முதல்முத்தம் பிரசுரித்தக் கிளர்வென
அசைகிறது இலை
அந்தி கோபுரத்தின் ஒற்றைதீபம் ஒத்து
விரல் நீட்டியது அது
மெல்லத் திரும்பி
“என்ன?” என்பதுபோல்
பார்வை தருகிறது இலை
பாலருந்தும் மார்குழந்தையென
சயனிக்கத் துவங்கியது அது

அதற்குப்பிறகு
கொட்டித் தீர்ந்தது ஆலாபனை மழை


நன்றி உயிரோசை


மெழுகு




யசோதராவின் புகாரில் புத்தனைத்தவிர வேறுயாருமேயில்லை
என்பது
தனி கதை

உறக்கத்தை கலைப்பதற்கு என்ன தண்டனை?

பூனைரோமக் கால்கள்
எட்டி உதைக்க
என்னை

ஆமா
அந்த அகலில் நெருப்பேற்ற
நான் யாரை அழைக்க வேண்டும்?

எப்படி குடியை நிறுத்துவான் ஈஸ்வர்




அதுஒரு நல்ல அடர்மழை அந்தி..
நீல நிற “U” வடிவ குழாயில் டக்கீலாவும்
புறங்கையில் உப்புக்கலந்த எலுமிச்சையும்
ருசித்துக்கொண்டிருந்தேன்

" மிஸ்டர் ஈஸ்வர் மிஸ்டர் ஈஸ்வர் " என
உலுப்பிக் கொண்டேயிருந்தான்
நள்ளிரவிற்குப் பிறகும்
டக் இன் கோட் சூட் சகிதம் ஸ்டீபன்

ஒவ்வொரு முறையும்
ஒன்மோர்
ஒன்மோர்
சொல்லி
சார்த்திக்கொண்டிருந்தேன்
வெறுமையை

நன்றாக ஞாபகமிருக்கிறது என்பது
பொய்

ஜமால் எவ்வளவோ சொல்லி சொல்லிப் பார்த்தும்
“ நிஷான் பாத்பைன்டரில் ” பறக்கத்
துவங்கினேன்

மதுப்பழக்கமேயில்லாதவன்
என் பெர்ஸ்னல் செகரெட்ரி ஜமால்
அவன் மகள்
சிறுமி ரிபாயா
இன்று மாலையும் என்னை அங்கிள் என்றுதான் கையசைத்தாள்

மங்கலாக உடன்வந்துகொண்டிருக்கிறான்
ஜமால் 

விருப்பத்தின் பாடல்



இந்த சிவனடிமை
உன்னையும் அழைத்துக்கொண்டு
வெகுதூரம் போகிறேன்
ஒரு தகவலுக்காக
என்னிடமே சொல்லிக்கொள்கிறேன்

திரும்புதலின் பாரம்
முழுக்கமூடிய அந்தக் கூட்டிற்குள்
எப்படிப் புகுந்தோம்

கைகள் அள்ளிய நீர்
மறுப்பேதுமின்றி வானம் பார்க்கிறது

உயிர்மேல் உயிர் பூட்டிக்கொண்டு
மிதக்கின்ற வலி
பெருந்துயர்க்காதல்

மகா காதல்



ஒரு ஜுவாலை வெயில்
பின்தொடர்ந்து வருகிறது

வேர்களின் ஊடாக
சிவந்து நிற்கும் ஜோடிகண்கள்
ஆசிர்வதிக்கப்பட்ட மாம்சத்தை
அள்ள அள்ள அள்ளி
பணிகிறது
மின்னுகிறது
துயருறுகிறது

சாந்தமடைகிறது

பறப்பது போலிருக்கும் திரையில்
நாங்கள் நீந்திக்கொண்டிருக்கிறோம்

பாருங்கள்;
சபிக்கப்பட்ட மகா காதலை
கொத்திக் கொத்தி தின்றுக்கொண்டிருக்கிறது
இப்பெரும் பிறப்பு

மூச்சுத்திணற
தொடர்ந்தபடியிருக்கிறது
ஒரு ஜுவாலை வெயில்

காத்திருப்பு



உப்பிய வயிறு
மெல்ல மெல்லக் கோதும்
விரல்நுனி அள்ளி
பிரார்த்திக்கும் ஒலியிடம்
கண் அமர்கிறான் சற்றைக்கு

வனைந்த மச்சத்தில்
அவ்வளவு விசும்பல்களுக்குப் பிறகு
எழும்பி பறக்கிறது
தலைமுறை

எல்லாம் இனியவை ஆகுக  

கருணையும் அதன் வசீகரமும்



“ஓவென” தேம்பித் தேம்பி
அழுதுகொண்டிருக்கும் அவளுக்கு
யாராவது கொஞ்சம் உணவளியுங்கள் ப்ளீஸ்

தனிமையின்
பரிபூரண நிர்வாணத்தின் மீதேறி
ஒய்யாரமாகச் சிரிக்கும் கண்ணாடியை
அறை முழுவதும் சிதறவிட்டிருக்கிறேன்

தனக்குத்தானே
மணிக்கட்டு நரம்பு அறுத்து
தளர்ந்துக் கிடப்பவனின் இதயம்
அவள் வந்து சேர்வதற்குள்
நின்று போயிருக்ககூடும்

பரிசீலனையேயின்றி
புத்தம்புதிய வெள்ளைநிற கைத்துண்டில்
எனது எல்லா அடையாளங்களையும் கொட்டி
திமிர திமிர எரித்துவிட்டிருந்தேன்

சாம்பலை நுகர்ந்து
வியாபிக்கும் ப்ரியத்தின் நறுமணத்திற்கு
“உச்” கொட்டியபடி நீங்கள் கடந்துபோகும்
சொற்ப நேரத்திற்கு முன்

அறையிலிருந்து காலிசெய்தாக வேண்டும்
கிரேன் உயரத்திற்கு நீண்டுகொண்டிருக்கும்
என்னுருவத்தை

புனித நதி



ஒரேயொரு நிமிஷம்
தலையைத் தூக்குமா
நாலு விஸில் அடிச்சிடுச்சு
ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு வந்துடுறேன்

சொற்ப நிராகரிப்பின்றி
மிகுந்த பிரக்ஞையோடு
வலி களைய முத்தமிடுபவன் முன்

“அம்மா அம்மா” என அனத்தியபடி
சுருண்டுக்கிடப்பவள்
தாழப் பறக்கிறது
திட்டுத் திட்டாய் செந்நிற நதி

நான் மௌனிக்கிறேன்



நான் மௌனிக்கிறேன்
திமிரும் உனது நிரந்தரம்
பதட்டப்படுத்தும்
என்னை
கொண்டு போ
எங்கேயாவது கொண்டுப் போ

நான் மௌனிக்கிறேன்
மடிஅள்ளித் திமிரும் உனது நிரந்தரம்
ஜென்ம சாபல்யம்

நான் மௌனிக்கிறேன்

இந்த முத்தம்
இந்த முத்தம்
இந்த முத்தம்

நான் மௌனிக்கிறேன்
புருவம் உயர்த்தும்
உனது இந்த முத்தம்
எங்கிருந்து கற்றாய்?
நான் மௌனிக்கிறேன்

எவ்வளவு ஆசுவாசம்
எவ்வளவு ஆசுவாசம்
எவ்வளவு ஆசுவாசம்
நதி கடல் மிரளும் எவ்வளவு ஆசுவாசம்

போ செத்தொழி

Monday, August 5, 2013

இளஞ்சிவப்புச் சூரியனின் அலாதி ப்ரியம்



"அடப்பைத்தியமே" யென
கால்களை
முத்தமிட்டிருந்தது நுரை

கழுத்தில்
சங்கிலிப் பூட்டப்பட்ட
படிமநாயைப் பிடித்தவாறு
என்னைக் கடக்கிறார்
ஹேண்ட்ஸம் பீச் தாத்தா

நான் முறைத்து அமர்ந்திருந்த
கடல்
திரும்பி என்னை முறைத்துக்கொண்டிருக்கிறது

நீ
வருகிறாய்!

நன்றி நவீன விருட்சம்


நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்




நீ அழவேண்டாம்
குருதிபுற்றுநோய் சாதாரணம்..

மழலையைப்பற்றி பேசிக்கொண்டிரு
ரத்தம் வருகிறது
உறக்கம் வேண்டும்

முதலும் இறுதியுமாக
உனக்கு எழுதிய கடிதம்
இன்னும் வந்து சேரவில்லை..

மேலும்
அன்பு செய்

என்னை
பின்தொடரும்
நிழலின் மீதேறி
ஒரு துண்டு சொர்க்கத்தை
அள்ளிவருகிறேன்

கண்ணிமை தோழி 

சில்வியா கொண்டாடும் ஆனந்தனைக் காணவில்லை



ஏதாவதொரு மலைப் பிரதேசத்தில்தான்
ஆனந்தன் இன்னும் உயிரோடு இருந்துகொண்டிருப்பதாக
தீர்க்கமாக நம்புகிறாள் சில்வியா

மழை பிசிரடித்த ஒரு அதிகாலையில்
அவனது செருப்புச்சப்தம் கேட்டதாக
கனவிலிருந்து உடனடியாக ஜன்னலைத்
திறந்துப் பார்க்கிறாள்
சில்வியா

தொட்டிச்செடியில் நீர்த்தடமே இல்லாமலிருந்தது.

ஆனந்தனுக்கு மிகப்பிடித்த எலுமிச்சைத்தேநீரை
நாக்குகள் கலவும் தேர்ந்த முத்தமென
ஜன்னலருகே நின்று பருகத்துவங்குகிறாள்
மெல்ல எழும்பும் சூரியனைச் சபித்தபடி...

நடந்தவைகளெல்லாம்
புற்றுநோய்காரனின் ரத்தமென
காணக்கிடைக்கிறது
ஆனந்தன் விட்டுப்போன
நீலநிற அரைக்கைச் சட்டையில்


நிரந்தரத்தின் தரிசனம்



அடைக்கப்பட்டக் குழாயிலிருந்து
ஒவ்வொருச் சொட்டாய்
நீர் தரைமோதி மேலெழும்பும்
சப்தமென
நம் இரவை கலைத்து அடுக்குகிறேன்

செவிலித்தாய் ஒத்த
ப்ரிய ரேகைகளின் வழி
எதிர்ப்பெதுவுமின்றி மிடறு மிடறாய்
தரிசிக்கிறாய் நீ !

தடதடத்த பின்னங்கழுத்து படபடப்பில்
தப்பிக்க முயன்ற எறும்பினை
வலிவலிக்காத வண்ணம் கைப்பற்றுகிறோம்
பின் மெதுவாக அசைவுறுகிறோம்

மிதந்து
நிமிரும்பொழுது
தற்காலிகமாக வெளியேறியிருந்தது எறும்பு


நன்றி நவீன விருட்சம்


கோமாளித்தனமாக உனது கத்தி..



ஒரு வஞ்சனையை
ஒரு துரோகத்தை
ஒரு விஷத்தை
விழுங்கிக் கொண்டிருக்கிறேன்

அதற்கேற்றார்போல்
வடியும்
வெப்பக்காற்றை
இதயத்திற்குப் பக்கத்தில் தொட்டுத் தடவுகிறேன்
மூர்க்கமாக வழியும் என் குருதியில்
ஒரு துண்டு ஐஸ்கட்டியை இடுவதற்கு
தயாராகிறாய் அல்லது முயற்ச்சிக்கிறாய்

“தூ” என்றேன்
ஐஸ்கட்டியைப் பிடுங்கி
டாய்லெட்டில் பிளஷ் செய்துவிட்டு

பிறகு
உன் நிஜகத்தியைக் காட்டுகிறாய்

எனக்குப் பயமே வரவில்லை

எங்களைத் தேடாதீர்கள்



அளவுக்கு அதிகமாய் மயிர் அப்பிய தளர்ந்த முகத்தை எங்காவது கண்டால் கடந்து போகாதீர்கள், அது என்னுடையது தான்.
அளவு என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும் ஆகையால் குழப்பம் வேண்டாம், அந்த முகத்தின் கண்களில் நீங்கள் இதுவரை கண்டிறாத சோகம் எப்பொழுதும் வியர்த்துக்கொண்டிருக்கும். கைப்பற்றிக்கொள்ள அந்த அடையாளமும் உங்களுக்கு அவ்வளவு லாவகம் இருப்பதற்கு இல்லை, தளர்ந்த முகத்தின் உதடுகளில் ஒரு பெண்ணின் ஆலாபனை அழுந்தப் பொதிந்திருக்கிறது. குருதி நிறமும் நட்சத்திர வடிவமும் இணைந்தாற்போல ஒரு மச்சம் வலது புருவத்தின் ஓரத்தில் மகோன்னதமாய் அதனை ரசித்துக்கொண்டிருக்கும்..
பாருங்கள்,
அடையாளம் கண்டுகொண்டுவிட்டீர்களா?
கண் விழிக்காத நாய்குட்டியைத் தூக்குவதென இரண்டு உள்ளங்கைகளையும் குவித்திணைத்து அந்த முகத்தை எடுங்கள். நான் எங்கே எனத் தேடுகிறீர்களா?
வேண்டாம். உங்களுக்கு அந்த அளவுக்கானத் திடம் நான்தான் தரவேண்டும்.

அந்த முகத்தை நீங்களே அணிந்து கொள்ளுங்கள். அணிந்துவிட்டீர்களா?

அங்கிருந்து வெளியேறி அடிவானத்தில் பறக்கின்ற அப்பெண்ணின் ஆலாபனை என்னை நெருங்குகின்றது.

இனி
உங்கள் காதலியை
உங்கள் பரிசுத்த அன்பை
உங்கள் பரிசுத்த இருப்பை
தேடிப்புறப்படுங்கள்    


கேலிச்சித்திரம்



கரகரத்தக் குரலொன்று
இருளில் தனியாய் கரைந்துகொண்டிருக்க

இன்னும் இன்னும்
தத்ரூபமாக நடித்துக்காட்டுவதற்கு துரிதப்படுகிறாய்
ஏகப்பட்டக் கைத்தட்டல்களோடு
நீ

ஒரு கேலிச்சித்திரத்தின் கதாநாயகனென
வாதைச்சிறகின்
நெருப்புக்கண்கள்
உன்னை வரைந்துப் பார்க்கிறது 


சுகானுபவம்



மேலும்
நீர் வற்றியக் கூடத்தில்
தலைதூக்கி
செருமிக் கொள்ளும்
முதலைகளுக்கு
குரூரக் கண்கள்

கொலைக்குற்றவாளியின்
கைவிலங்கினையொத்து
மின்தகனமேடையின் பொத்தான் அழுத்துபவன்
தன் இருப்பை சரிபார்த்துக்கொண்டிருக்கிறான்

ஆனாலும்

கொடிமரத்துக்கொண்டையில் அமர்ந்திருக்கும்
காகம்
திருவிழா கருடபார்வைக்கு

இப்பொழுது நீங்களெல்லாம் போகலாம்
துயர்ச்சரீதம் எனக்குரியது  

மார்ச்சுவரி காப்பாளனின்

பீடி புகையிலிருந்து எட்டிப்பார்க்கிறது
தற்கொலையூண்டவளின் இருமல் ஒலி