Monday, December 31, 2012

***

நானெனும் நீ நிறைந்து உருளும் இம்மழையிடம்
நீயெனும் என்னைப் பற்றி
கூறிக் கூறியே

அழுகையை
ததும்பும் அழுகையை

ஒரு குட்டிப்பூனையைத் தடவிக் கொடுப்பதென
நிதானித்து

பேரருவியாய்
அன்பின் மொழி சொல்லிக்கொண்டிருக்கிறேன்

Friday, December 28, 2012

***தூறும் மழைத் துளியில்..

உன்னையும் என்னையும் பதற்றி
கடந்து செல்கின்ற வானத்தின்
முதல் குரல்
ஆசிர்வாதம்

நிரந்தர வெயிலொன்றின் புன்னகையை
யதார்த்தமாக உடைத்து விட்டிருந்தோம்

ஆமென்


***
மிதித்து உடைந்த
இருள் பொங்கிய வெளி
மிதந்து அலையும் இப்பகல்..

எல்லாமும் பெருகிய முத்தத்தின்
முதல் மௌனத்தில்

தண்டவாள இரட்டை இணைகிறது

நீ நீயுமல்ல
நான் நானுமல்ல
ஆமென்

***வளரும் நிலவொன்றின்
பால்ய முகம்
உனது

சிதைந்த துயரத்தின் ஸ்பரிசம் படரும்
என் இருப்பில்


***
திசைகளற்றுப் பறத்தல் சாத்தியமா என்கிறாய்

யாதுமாகி யாதுமாகி
கண் சிமிட்டுகிறது
பெருஞ்சுடர்


Saturday, December 22, 2012

ஆராதனா எனும் பேய் 28*
இருப்பின் பிரதி


புகைப்பட காடொன்றின் 
கிழட்டு மரத்தினைப் புணர்ந்து கொண்டிருக்கும்
வயதே கூடாத அவ்இரண்டு எறும்புகளையும் 
கூட்டி வந்து உன்னிடம் அறிமுகப்படுத்தினேன்

எந்தச் சலனமும் இன்றி 
என் கைகள் மெல்ல பற்றி 
அழைத்துப் போகிறாய் 

நிலைக்கண்ணாடியில் 
ஆதாமும் ஏவாளும் 
இறுகித் திமிர்கிறார்கள்


ஆராதனா எனும் பேய் 27*
ஏப்ரல் 29


நான் பெருஞ்சிரிப்போடு 
அறிமுகம் செய்கிறேன் கடலை 

என் மரணத்தின் விசும்பலை 
மௌனித்து வேடிக்கைப் பார்க்கும் 
இந்த இரவிடம் 

அதன் அலை மூர்க்கத்துடன் வரைந்தது 
உன்னை 
ஆராதனா உன்னை


ஆராதனா எனும் பேய் 26


*
தத்தெடுத்தல் 

நீண்ட பேய்மழை ஒன்றின் 
கனத்தக் கால்கள் தலை முட்டித் தொட்டக் கணம் 
நீ ஆடை கலைத்த முத்தங்கள் 
சொல்லிச் சொல்லி ஆர்ப்பரிக்கிறது

நம் இருவருக்குமானதொரு 
தீவு ஒத்த உலகினை
இசைத்திருக்கிறோமென

எந்நாளும்
எந்நாளும் 


ஆராதனா எனும் பேய் 25
கனவு நதியொன்று ன் ஜாமத்தை
பூத்துக்கொண்டிருக்கிறது

அல்லது

ஆள் விழுங்கும் கடலொன்றின் 
மீத நிலா 
நெய்கிறது மரணித்திராத என் இரவை


Wednesday, December 19, 2012

***
கர்த்தருக்கு என்னைப் புரியும்
என் வலி அறியும்

கர்த்தரை நம்புபவர்களுக்கு
ஒரு போதும்
மனம்
இயலவில்லை

ஆமென்

ஆராதனா எனும் பேய் 24
நான்
உன்னிடம் மண்டியிடுகிறேன்
உன்னிடம் மண்டியிடுகிறேன்
(நிழல் அல்ல நிஜம்)

இப்பெரும்பகலில்
கொழுத்தப்பட்டு விட்டது
நீ
விரும்பாத என் பாசாங்கற்ற சுயம்

இனி நீயே
கெஞ்சி இறைந்து
மண்டியிட்டாலும்

எப்பொழுதுக்குமான
என் நீ
என்
ஆதி வனம்
ஆதி மழை

காதலிக்கிறேன்
வா
காதலிப்போம்

ஆராதனா எனும் பேய் 23

தேடி வந்த ஒற்றை நட்சத்திரமும் 
ஓயாமல் 
உன் பெயர் சொல்லிக் கேவுகிறது

ஆராதனா ஆராதனா.. 

துயர் அறியாத வானவில்லிற்கு 
மூன்று கோடி முத்தங்கள் 

ஆராதனா எனும் பேய் 22


என் மனுஷியின் கனவில் 
உறங்கிக் கொண்டிருக்கும் 
நான்

கொலை செய்து கொண்டிருக்கிறேன் 

என்னை நானே 
என்னை நானே 

யாரும் யாரோடும் இல்லை
(எப்பொழுதோ படித்ததாய் ஞாபகம்)

ஆராதனாவோடு நான் இருக்கிறேன்
ஆராதனா என்னோடு இருக்கிறாள்

ஆமென்

ஆராதனா எனும் பேய் 21
சொட்டிக்கொண்டிருந்த பனியில்
அழுந்த முத்தமிட்டோம்

காற்றசைக்கும் திரைச்சீலையின்
நிழல்கண்கள்
நம் தோள்கள் மீது விரிய

இளம் தட்டாம்பூச்சியாய் படபடக்கிறது
ஞாபக மீன்குளம்

ஆராதனா எனும் பேய் 20தொடர் மௌனம் தின்று சஞ்சலித்துக் கொண்டிருக்கிறாய் 
இடறிய வெயில் மரிக்கும் தருணம் 
உனக்கான பரிசாய் 
கொண்டுவருவேன் என்னை
காத்திருத்தல் பிடித்திருக்கிறது 
வாழவும்


ஆராதனா எனும் பேய் 19நிறமேறிக்கொள்ளுதலில் 
பரிமாறிக்கொண்டேன் 
உன்னையும் என்னையும் 
இச்செவ்வந்திப் பூவிடம்

ஒற்றை நீ 
பிம்பங்களாய் மலரும் 
தடாகத்தில் நீந்தி


வீடு
அவள்
குளியலறையில் தூக்கு மாட்டிக்கொண்ட வீட்டினுள்
ஒரு மிகிழ்வான இசை சலிக்காமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது
நான் கடக்கும் சமயங்களிலெல்லாம்

அனாரின் குழந்தைகள் இடம்பெயர்ந்து விட்டன

கைகளைப்பற்றி அழுந்த முத்தமிட்டபடி
அந்த இரவில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தாள்
தோழி
முன் எப்பொழுதும் போலல்லாததாக இருந்தது அது
மனம் அத்தனை லேசாக இருப்பதாக
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்

விடியற்காலையில் நான் திரும்பியிருந்தேன்
எனது வீட்டில் பர்வீனா காத்துக்கொண்டிருப்பாள்

அன்று நான் அனாரை சந்திக்காமல்
இருந்திருக்கலாம்

நன்றி பண்புடன் குழுமம்


பனிக்காலத்துக் குறிப்புகள் 3
ஆகாயத்தில் பறப்பதற்கென
திறப்பித்தேன் என்னை

நீ வந்தாய்
புன்னகையெனும் களவு நளினத்தோடு

இப்பொழுது
இருவரும் நடந்து கொண்டிருக்கிறோம்

பிறந்த குழந்தையை முத்தமிடுவதென
தீபத்திலான திரி நுனுயினை
வருடிக் கொடுத்தபடி

வாய் விட்டுச் சிரித்தபடி

காலத்தை நெஞ்சிலேற்றிப் பாடியபடி

Thursday, December 13, 2012

***இரவென்றும் ஒன்றும் இல்லை 
பகலென்றும் ஒன்றும் இல்லை 

என்று துவங்கும் முன்பே அதுஉனதல்ல
என்று முடிக்கும் பெண்ணை
(பெண் என்று சொன்னாயே)

திரும்பிப் புரளும்
கடந்த நூற்றாண்டு முன்
கொஞ்சம் வசை பாடுவோம்
வா..


துயரக் கோப்பையிலிருந்து உடைந்து ஒழுகும் பெருநதி
பட்டாம்பூச்சியின் பெயரால் 
ஒரு தற்கொலை நிகழ்ந்திருக்கிறதென்றால்
எவ்வளவு பெரிய துயர்த் துரோகம் அது

அனார் அதைத்தான் செய்தாள்.

ஆனந்த் ஆகியநான் நரகல் தின்று
சபிக்கிறேன் ஆதிபகவனை


பனிக்காலத்துக் குறிப்புகள் 2அடுத்த வருடம் ஏப்ரலில் நமக்குத் திருமணம் நிகழ இருக்கிறது
கடந்த எட்டேமுக்கால் மாத நம் வாழ்வில் 
உன்னை சந்தோசமாக வைத்திருப்பதாக மட்டுமே
எனது சிறு நம்பிக்கை

இன்றும் என்றும்
எங்காவது எப்பொழுதாவது
நம் வாழ்வில் ஏதுனும் துளி குறையிருப்பதாக நீ அறிந்தால்
ஒற்றை விண்ணப்பம் உண்டு எனக்கு,
உன் உனக்கு உனக்கே பிடித்த ஒரு நாள்
எங்காவது சென்று திரும்பு
உனக்குப் பிடித்ததைச் செய்
யாதொரு அனுமதியும் தேவையுமில்லை
அவசியமுமில்லை
எந்தக் கேள்விகளும் என்னிடம் இல்லை.

மேலும்
அனைவரும் திருமண வைபவத்திற்கு வருக வருக
நல்ல சுவைமிக்கச் சைவச்சாப்பாடு
நீங்கள் மனதாரப்பாராட்டுவீர்கள் 

Sunday, December 9, 2012

பனிக்காலத்துக் குறிப்புகள் 1அலமாரியின் நடு இடுக்கில் 
பளிச்சென 
எப்பொழுதும் நீ பொக்கிஷமாக வைத்திருக்கும்
அப்பச்சைநிறப் பட்டுப்புடவையை
கொஞ்சம் எடு பெண்ணே

உள்ளே நான் பொதிந்து வைத்திருக்கும் கடிதத்துடன்
உனக்குப் பிரியமான ரோஜாவின்
இதழ் ஒன்றும் அலைபாயும் (ராஸ்கல், கள்ளா...)

ம்; கண்ணீரோ புன்னகையோ
உன் விருப்பநிழல் போதுமடி பெண்ணே
.
ஒரு நம்பும்படியான பொய்யை
இவ்வளவு ஆச்சர்யத்துடன்
நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களெனில்

வைத்துக்கொள்ளுங்கள்
இது
3075-ஆம் ஆண்டு என் மனைவியுடன்
எடுத்துக்கொண்ட புன்னகைத் ததும்பும் சித்திரம்


பனிக்காலத்துக் குறிப்புகள்கோடி பட்டாம்பூச்சிகளின் வர்ணம் உமிழும்
பேரன்பின் யதார்த்த முகம் 
உனதென
நல்ல மழை வழிந்ததொரு அந்தியில்
ஒரு சிறுபுல்லின் நுனிஎன்னைத் தேம்பி
தேம்பி இறுக்கியதுடன்
மெல்ல விழித்தேன்

பெரும் அமைதி
பெரும் அமைதி

பின் மௌனமாய் அதன் ஈரம் படர்ந்த
கரங்களைக் குலுக்கி
கிமு 23 ஆம் நூற்றாண்டிலிருந்தே
உன் உடம்ஸ்தி எனக்கு மனைவி என்றேன்.

அந்த இரவில்
மூன்று லட்சம் விண்மீன்கள் ஒளிர்ந்ததாய்
இன்று அதிகாலையில்
என்னை மென்மையாய் எழுப்பித் தலை கோதி
கீச் கீச் குரலில் ரகசிக்கிறாய் பெண்ணே;
பெண்ணே இதுஎந்தவிதத்தில் ஞாயம்?! 


Friday, December 7, 2012

ஆராதனா எனும் பேய் 16
16.
பெருமழைக்காலத்து வண்ணத்துப்பூச்சியாய் 
என்னுள் படபடத்துக் கொண்டிருக்கிறாய் 
ஆராதனா..

நீ நிரம்பிய தனிமையோடு நான் உலவும் 
இம்மணல் வெளியெங்கும் 
வரைந்து வைத்திருக்கிறேன்
நிழல் தாகமாய் உன்னை 
ஆராதனா..

கடல்களுக்குமேலே நூல் பிடித்தாற்போல் 
பறக்கும் நமது வானம்
சொட்டிக் கொண்டிருக்கும்
இப்பெரும்பசியில் நர்த்தனம் செய்வதில்தான் 
எத்தனை ஆத்மார்த்தமாக உள்ளது
ஆராதனா..

***  

17.
ஆராதனா, 
அன்றொரு நாள் முத்தமிட்ட 
உன் தெளிர்ந்த முதுகினை 
ஞாபகத்தில் குறு குறுக்கிறது 
கையகப்பட்ட இச்சிறுஇலை

எனது தொலைதேச நதியில் பெய்து கொண்டிருக்கும் 
உனது மழையில் 
வாதையின் ஸ்பரிசம் தளும்ப 
மீண்டும் தொப்பூல்கொடி அறுந்து விழுகிறேன் 
அழுகையும் சிரிப்புமாய்ஆராதனா

***

18.
நீண்ட நீண்ட இரவும் பகலுமாய் 
பிரிவு தின்று பிறழ்வில் அலையும் 
என் நமதுமனசை 
மேகம் அவிழும் முதல் மழையாய் விடுவிப்பாயா
ஆராதனா

***Thursday, December 6, 2012

அரேபிய ராசாக்கள் 26

26.
பேசும் பொம்மைகள் வாங்கி வருவதாக 
கடல்களுக்கு அப்பாலிருந்து கொஞ்சியவனிடம் 
மழைக் கிழமையின் ஈரத்தை தெளிக்கிறாள் 
அனன்யா 

தனது முறையில் வழக்கமாய் 
கோடையை சிலாகித்துத் தேயும் 
அனன்யா அம்மா 
எப்பொழுதும் போலல்லாத மௌனியாகிறாள் 

கொஞ்சம் கொஞ்சமாய் 
விடுதலையை இரைஞ்சத் துவங்கியபடி 
பெருங்கானல் படரும் உடைந்த உதடுகளோடு 
அணைக்கப்படுகிறது ஈரப் பார்வைகளுடைய 
விளக்கு

***

27.
ஈரத்தின் கதகதப்பு அள்ளும் வாஞ்சையுடனான 
சப்தம் அற்ற உன் மென்பார்வை 
சிதறிக் கிடக்கும் ஈச்சம்பழ மணத்தில்
அடர்துயர் மோதி துரத்தப்படுகிறேன்
 
மூச்சிரைக்க 
முத்தத்தின் கட்டாயம் 
அல்லது
நிஜத்தின் புனிதத்தில் சரிய விழைகிறேன் 

உனது தொலைகுரல் மீள்கையில் 
நினைவில் வற்றாத நதி மீது 
சிறு பிள்ளையின் மழையென
பூமிக்கும் வானத்துக்குமாய் துள்ளித் துள்ளிக் குதிக்கும் 
எனது முழுநீள வர்ணக் கடல் 

***

28.
கிழிபடும் கிழமைகளருகே நின்று 
விடுதலையை வாசித்துக் காட்டுதல்
கூடும் கிழமையில் 

பொருட்களின் பட்டியலை வாசித்துவிட்டு 
அமைதியாக நகரலாம் 
ஈட்டுதலின் பொருட்டு தவித்து இருத்தலென்ன 
அத்தனை சுலபமாவென

***

நன்றி கல்கி 

திரும்புதலின் பாரம்எனது மனதில் எறியப்பட்ட உந்தன் கல்
கண்ணாடிச்சில்லுகளைப் பொழிந்துள்ளது,
ஸ்தம்பிக்காமல் கேசம் சரி செய்துகொள்
நீ

கொல்லும் நினைவுகள் மீது
ஒரு கூடை வண்ணத்துப்பூச்சிகளின் நிறம்
நீ நிறைந்த என் தனிமை துயரம்
சிலாகித்தல் பழகுதல் அழகு

சூழும் மேகத்தின் உள்
பறக்கும் விமானம் அண்ணாந்து தேடும்
பால்யனாய் திரும்புகிறேன்
நான்

சில்லுகளில் வழியும் குருதி
தோய்த்த விரல்களுடன் வருகிறாய்
நமது பெருங்காதல் நோக்கி

காத்திருப்புகளின்றிப் பிரிவுக்குஏது உயிர்

மௌனத்தின்மேல் மெல்லிய ஒப்பனையுடன்
ஈர்க்கும்
உனது அன்பு பெய்யும் மழையில்
திரும்புகிறேன்
பெருவலியின் தடயங்கள் கழுவி

நன்றி எதுவரை.நெட்


ஆமென்
1.
உனது மௌனத்தில்
தடதடக்கும் ரயில்வண்டியின் அதிர்வு,
எனக்குப் பைத்தியமெனச் சொல்லும்
முந்தைய காதலிகள் உண்டு

நீயாவது மழையில் நனை
அல்லது
கடைசிக் காதலியாக இரு

2.
எனது
தற்கொலைக்குப் பிந்தைய
இரவை
துண்டுத் துண்டாக்கி வை

வருகிறேன்,
உனது தற்கொலையை
கொலையாக மாற்ற!

3.
ஆக்ரோசமாய்
புணர்ந்து கொண்டிருக்கிறது
இருளடர்ந்த இரு நிழல்கள்

வெளிச்சப் புள்ளிக்கான
ஆதர்சக்கோட்டில்

4.
ஆம்
காதலி
யோனியின் ஸ்பரிசத்தில்
மூர்ச்சையாகிக் கிடந்த கணத்தில்
முத்தம் உண்டது
நீயா?
காதலா?
காலமா ?

ஆம்
காதலி
சொற்களை விழுங்கு
மௌனத்தைச் சொல்

ஆம்
காதலி
நீ நிரம்ப நீயே வாழ்.