Friday, September 28, 2012

சர்ப்பங்களிலான உலகம்






நெருங்கி வருகிற விழிகளிலிருந்து
சர்ப்பங்கள் வெளியிறங்குவது
அறிந்தே
நகர்தல் மறுதலிக்கிறோம்

விஷம் பூத்த
செந்நிற மௌனம் நிரம்ப
துயர் இசைப் பாடல்

ரட்சித்தலையும் புனிதத்தையும் தவிர்த்து
துரோகத்தையும்
குரூரத்தையும் 
குறிப்புகள் சேகரித்து சேகரித்து 
மரப்பெட்டியில் அடைக்கலாம் அவர்கள்

யாவருக்குமான ஆமென்களோடு
கரைந்து தீரட்டும்
தைரியம்கூடிய பரிசுத்தம் நிறைந்த
ஸ்வாதீனத்தில் அல்லாத
நமது வக்கற்ற நேசமும்
நாமும்  

நன்றி யாவரும்.காம்




சிறகுகள் இன்னும் பறவையிடத்தே







உடைக்கப்பட்ட
நினைவுப் பறவையின் இறகுகள்
பறந்து கொண்டிருப்பது அபத்த அந்தரத்தில்

வழியும் துயர மழை
நிரம்ப
நாம் நம்பும் பேருலகம்

சிறகுகள்
இன்னும் பறவையிடத்தே
ஞாபகம் அல்ல இருப்பு..!   

பெருஞ் செவியில்
திரும்புதலுக்கான இசையாய் நீந்திக் கொண்டிருக்கின்றன
வெயிலற்ற அந்தரங்க நிறங்கள்

நன்றி உயிரோசை


***



தனிமை போதை அதிகமாக அதிகமாக
பிறழும் மனம் உதிர்க்கும் நெடுங்குருதிச் சொற்களை
தனக்குத் தானே பருகிப் பருகி
பெரும்பசிக்குள் நுழைந்தும் விலகியுமாய்
வியூகம் செய்து கொண்டிருக்கிறேன்,
இரவின் கழுத்தை அன்பு வடிய வடிய அறுத்துவிட்டு
மெல்லிய புன்னகையோடு கையசைத்தபடி
அந்தரத்தில் நடந்து செல்ல..

Sunday, September 23, 2012

அரேபிய ராசாக்கள் 19






துணையிழந்த
நோய்மையுடனான முதியவனின்
பார்வையாய்
வ்டிந்து சொட்டுகிறது தனிமை,

ஒருபொழுதும்
உங்களது மழையுடன்
ஒப்புக்கு வராதீர்கள்

மணற்காட்டில் நிச்சயக்கப்பட்ட வெயில்
எங்கள் பெருவானம். 

***

நன்றி நவீன விருட்சம் 

Wednesday, September 12, 2012

இனி



இறந்திருந்த பட்டாம்பூச்சியின்
மேலூர்ந்து கொண்டிருக்கும் எறும்புகளை
வெறித்து அமர்ந்திருந்தோம்

ஒண்ணேமுக்கால் வயது நேயா அழுகிறாள்

பேரன்பின்
நிதர்சன வெயில் கலைத்து 
பெரும் பைத்தியக்கூடாரத்துள் திரும்பலாம்
இனி

நன்றி யாவரும் .காம்

சுபீட்சம்






நசுங்கிய வால்
முன் நகரும் பல்லி
கண்ணாடியில் பளிச்சிடும் இமேஜ்

இரவென்பது
வெறுமனே இரவு மட்டுமா

நன்றி உயிரோசை



ஆமென்






உனக்கெதிரான
ஆயுதம் என்கிறாய்
பெருஓடையென வழியும் அன்பினை

மொழிப்படுத்துதல் பெருங்கோடை

நன்றி உயிரோசை




அர்த்தக்காடு பற்றி எரிகிறது



எந்தப் பறவை விழி அகல
நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறதோ

ஆதியின் கூறுகளை
புராதனங்களாகப் பெயர்த்தவாறு
நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்
எது எதையோ குறித்து

நன்றி உயிரோசை

ஆராதனா எனும் பேய் 15






சாபங்களால் ஆனதாகயிருந்த என்னுலகம் நுழைந்தாய்
ஆராதனாவாக மாறிய உலகத்தில்
பலநூறு ரோஜாக்கள் தினமும் பூக்கச்செய்கிறாய்

நீந்திக்கொண்டிருக்கிறேன்
பழக்கப்படாத
ஈரத்தோடு 

Monday, September 10, 2012

***



சைரன் ஒலி வாசித்துக் கொண்டிருக்கிறது இரவை
எந்த நேரத்திலும்
கானலாகத் தீரலாம்
கம்பி வேலியும் மந்தையும்..

ஆமென்






எவ்வளவு கெஞ்சித்தும் வஞ்சிக்கிறேன்
என்னை
நேசிக்க மறுதலித்து
நான்



***






சடங்கிற்கான
சில மணிநேர உடல்கூட
உங்களுக்கு வாய்ப்பற்றுப் போகலாம்

அன்பு செலுத்தி வாழ்தல் இனிது


அன்பின் முத்தங்களுடன்



எனது வாழ்வு மொத்தமாக உன்னிடத்தில் சரணடைந்துள்ளது
உன்னுடைய திமிர் உனக்கானது அல்ல
என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு
செயல்களைக் கலைத்துப்போடு

இருகரம் கூப்பி இறைஞ்சும்
அன்பின் தூய்மைக்கு
சிறிதேனும் நிழல் கொடு

Tuesday, September 4, 2012

சொல்லிவிடமுடியாத கோடை






ஒரு சொல்லிவிடமுடியாத கோடையை
பார்வையில் செருகி விரைபவளிடம்
என்ன சொல்லியிருக்கக் கூடும் 
மழை நின்ற இம்-மரத்தின் கிளை?

வெயில் குடித்த குடியை
ரோட்டோரத்தில்
சிறுநீராக நனைத்துக்கொண்டிருந்தவனிடம்
நான் எதுவும் சொல்லவுமில்லை
கேட்கவுமில்லை

நன்றி உயிரோசை


ஆமென்



பசித்த நாக்கை வெட்டி வீசத்
துரத்துகிறீர்கள்

பொறுமையாக
குடில் செய்துகொண்டிருக்கிறேன் நான்

நாய் தொப்பலாக மழையில் நனைந்துள்ளது

நன்றி உயிரோசை

தொலையும் வனம் ஒழுகும் கடல்



பால்காம்புகளில்
ரிதம் மீளும் உதடுகளை
அபரிமிதமாய் அமிழ்த்தி அமிழ்த்திக்
கொல்கிறாய்

நீ யாரென முன் நின்று 
பரிசுத்தமாய் அழத் துவங்குகிறாய்
கலைந்த மயிர்கள் அள்ளி

பிரியத்தின் நகம் கீறி புன்னகைக்கிறாய்,

வியாபிக்கும் அன்பு
கருணையற்று வலிக்கிறது

நன்றி உயிரோசை


Monday, September 3, 2012

பசி தீர விரல்கள் வேண்டுமாம்






தலையைக் கழற்றி வைத்துவிட்டு
நடக்கத் துவங்கினேன்
முண்டமாகிய உலகு
கால்களைத் தாங்கிப் பிடிக்கிறது

நன்றி வல்லினம்.காம்


பெருந்துயரத்தின் வாடை






கேவலின் கொடுந்தீயில்
உயிரே
ஒருஐஸ் துண்டின் தன்மையில்
மீதகாலம்
மூச்சு முட்டுகிறது
உரையாடலில் வார்த்தைகளில்லை
பெருந்துயரத்தின் வாடை

நன்றி வல்லினம்.காம்


ஆமென்






ஒரு நல்ல கவிதைக்கும்
ஒரு மோசமான கவிதைக்கும்
உள்ள வெளியில்
நம்மைக்
கொலையும் தற்கொலையும் செய்கிறேன்
ஆமென்!

நன்றி வல்லினம்.காம்


வெளியேற்றத்திலிருந்து துவங்குகிறது உட்புகுதல்






தயங்கித் தயங்கி கூடுடைத்தல் பற்றி
சிந்தனை செய்து கொண்டிருந்தேன்

நாய்களும் எறும்புகளும்
அடிக்கடி புகுந்து கொள்கிறது
என் கனவு வீட்டிற்குள்
சித்திரக்குறிப்புகளாய்

நன்றி வல்லினம்.காம்