Saturday, September 28, 2013

உங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை





ஒரே ஒரு நட்சத்திரம்
அதுவும் பொன் நட்சத்திரம்
இங்கே இங்கே
இதே அறையில் என்னுடன் தானிருந்தது

தேடிக்கொண்டிருக்கிறேன்..

துல்லியமாக சொல்வதற்கில்லை
ரணம். 

***




தெருமுக்குப் பைத்தியக்காரக் கிழவனை
ஞாபகப்படுத்தும்
கவிதையை
நான் எழுதவே போவதில்லை.

***





வண்ணத்துப்பூச்சியின்
பகலொன்றில்
சிலுவையின் பாரமென இலைமீது பனித்துளி

***




பற்கள் தளிர்விடா குழந்தையைப்போல சுண்டு கொண்டு கவ்விப் பிசைந்த உனது இளமுலைகளின் அடிநாதம் நினைவுஇடிக்கில் விசும்ப அனற்காற்றாய் இந்த இரவு ஒரு கவிதையை எழுதிச்செல்கிறது. மலையுச்சி மௌனமாய் ஒரு சிறுகீறல். பசி பசியைத் தின்னும் உன் எழில்உருவை கண்கள் வீங்க முகர்ந்துவிட்டு நான் உறங்கிப்போவேனோ? அல்லது, மூடிய இமைகள் மூடியபடியே எப்பொழுதுக்குமாய் திணற அருகமர்ந்து பெருங்குரலோங்கி அழுவாயோ நீ? 

அறம்




அடுப்படிக்குள் ஒழிந்துகொண்டிருக்கும்
பூனைக்கு இருக்கும் இதயம்
யாருக்கு கவலை? என்ற கவிதையில்
ஆயிரத்தெட்டுப் பிழை இருந்தபோதும்
கண்ணீர் சொட்டும் என்னை
ஏன் வெறுக்க வேண்டும்
என்ற கேள்வி
நீ கேட்கிறாய்.

நல்லது..

மேலும்,
ஒரு நதியின் உடலில்
ஏன் இவ்வளவு நட்சத்திரங்கள்?

புன்னகையா பதில்
அல்லது
கண்ணீரா பதில்

அறம்.

காற்றில் உடையும் அழுகையின் குரல்





மிருதுளா
தன் சின்னச் சின்னப் பாதங்களால்
வீடு நிறைய அங்குமிங்கும்
ஓடிக்கொண்டிருக்கிறாள்

வீங்கிய மௌனத்தின் விஷப்பற்கள் திறந்து
முடிவாகச் சொல்லிவிட்டாள்
வித்யா

கண்ணாடியில் மண்புழு ஊர்வதென
பிரதியிட்டப் பார்வையுடன் அமர்ந்திருந்தான்
பிரவீன்

சின்னச் சின்னப் பாதங்கள் உருண்டு
வெறுமனே குரலாகி உதிர்ந்தது
பெருவெளியெங்கும் அழுகையின் கேவல்

நீ தான் சாத்தான்..
நீ தான் துர்தேவதை...
என மாற்றி மாற்றி விரல்நீட்டிக்கொண்டிருந்தார்கள்  
காலத்தின் கதாப்பாத்திரங்கள்


குழந்தை தானாகவே முத்தம் கொடுக்கிறது





கிழக்கின் திசையிலிருந்து எழும்பிய பறவை
வானை அளக்கமுடியாதபடி
அதற்கும் அப்பால் அதற்கும் அப்பால் என..

தெய்வத்தின் கருணை
துயரத்திற்கு
தன்னை மூடிக்கொண்டிருப்பது  
சுகம்.

கவனித்தீர்களா?
அவ்வளவு வேலைப்பாடுடைய அரங்கத்தில்
சிறியதாய் மிகச் சிறியதாய்
வந்து நிற்கிறது
மரணம்

வேதனை






புல்லாங்குழல் வேண்டுமே வேண்டுமாம்
மகள் உதயமொழி
அழுகிறாள்

உன் மூன்று நாள் உதிரம்
வெயில்மீதேறி மிதக்கும் என் துடிப்பு,
வலிக்கிறது வலிக்கிறது வலிக்கிறது...

இது மழை இரவு
இது கோடை பகல்
இது பிழை
இது வன்மம்

“ நான் ஏன் நீயாகப் பிறக்கவில்லை “

நெஞ்சடைத்துச் சாகிறான்
இதயத்தை வரைந்து காட்டுபவன்

புல்லாங்குழல் இசைக்கப்படுகிறது.

உதயமொழி சிரிக்கிறாள் பார்
என் உதிரமே!  

Sunday, September 15, 2013

மிரட்சி





சிறு இலை நான்
பனித்துளி
அவள் கண்ணீர்

என்ன ஆகும்
பாறைமீது பாறை.

தொலைவுக்கு அப்பால்
ஓடிவரும்
எறும்பிற்கு
ஏன் இத்தனைக் கால்கள்?

அலறல்





தீரவே தீராதப் பசியுடன்
பிம்பங்களைப் பெருக்கும் கண்ணாடியாய்
நம் வக்கற்ற ப்ரியத்தின்
வாள்முனையில் முட்டும் எண்ணிலா முகங்கள்
முகங்களே அல்ல.

எனக்கு நானே கதற கதற கழுத்தறுத்து
ரத்தம் பீறிடும் கனவிலிருந்து
விழும்
கண்களைத் தாங்கி
சுடர்விட்டு அலறும் நம் மனமைதானத்தின் பெருந்தாபம்
குளிர்.

ஆராதனா எனும் பேய் 53




என்னுடைய தற்கொலைக்குப் பிறகு
இவனது கடைசி ஆசை என்னவாக இருந்திருக்கும்
என்று யாராவது சிந்தித்திருந்தால்
ஆராதனாவின் புன்னகையில்
ஒரு வெளிச்சம் உதிரும் பாருங்களேன்

ஆசையாக இருக்கிறது.

ஆராதனா எனும் பேய் 52





“ பூமாலை கோர்க்கும் குரங்கினை அடைந்தவள் கண்களில்
பிரகாசத்துயில் பரப்பும் ப்ரியக்குழந்தை
அழகிய பேரழகிய ஸ்பரிசத் தூறலை வனைந்து வனைந்து அசைகிறது “ என கிறுக்குத்தனமாக சனநெருக்கடி மிகுந்த அங்காடித்தெருவின் நட்டநடுவில் நின்றுகொண்டு, நீ அழுந்தக் கவ்விப்பிணைத்த உதடுகளில் சொல்லிப் பார்க்கிறேன் ஆராதனா.

நெடுநாளாக உனக்குப் பரிசளிக்க எண்ணி விடுபட்ட கொலுசுஜோடியை ஏறக்குறைய அலைந்து அலசி இறுதியில் தங்கத்தில் மணிகள் நிறைந்த ஒரு ஜோடியை வாங்கியாகிவிட்டது. மிகவும் பிடித்திருக்கிறது. உனக்கும் நிச்சயம் பிடிக்கும் ஆராதனா. ஆம், அந்த முத்தத்தின் ரீங்காரம் என்உயிர்க்கூட்டில் இடைவிடாது ஜெல்லிமீனைப்போல நெளிந்து நெளிந்து நெளிகிறது என் பெண்ணே. உன் சிறு வட்டவடிவ தங்கநிற முகத்தின் தாடையிலுள்ள, எந்நேரமும் சிறுமி வானதியின் கரங்களில் தவழும் கலர்பென்சிலின் ஒல்லி முனையளவிலான மச்சம் பிறகு எப்பொழுதாவது நான் எங்கே என்று உன்னிடம் நலம் விசாரித்ததா ஆராதனா?

நினைவில் அழிகிறேன் என்று எங்கோ வாசித்த அனுபவம் என்னிடம் எப்பொழுது நிரந்தரமாகக் குடியேறியது? தங்கிப்போனது? உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது ஆராதனா...

நிலம் குடிக்க சரசரத்து அந்தக் கிளிப்பச்சைநிறப் புடவையில் நீ மெல்ல அசைவது போல நடந்து என்னை நெருங்கியபோது கிளையின் சிற்றசைவில் மொத்தமாக சிறகடித்துப் பரபரக்கும் பறவைகளைப் போல அத்தனைப் படபடப்புக் காட்டியது என் குட்டி இதயம்! ( முதல் சுகவலி ஆராதானா) கூடவே..அதுவரை ரயில்வண்டியென நீண்டு வளர்ந்திருந்த என் தனிமைக்கழுகின் வற்றாத செவ்வெயில் நான் இமை மூடித் திறந்த நாழிகைக்குள் இனி எப்பொழுதும் திரும்பமுடியாத தூரத்திற்குள் சென்று தன்னை விடுவித்துக்கொண்டது ஆராதனா.
நன்றிகள் உரித்தாகுக உனக்கு ஆராதனா...
எனது தீரா ப்ரியங்கள் உரித்தாகுக உனக்கு ஆராதனா...

ஆராதனா.. ஆராதனா...
உன் பெயர் விழுங்கி உன் பெயர் விழுங்கி என்னைத் தேடுகிறேன் உன் பச்சை வனாந்தரத்தின் முழுக்க நின்றுகொண்டு...

வெட்கமும் கூச்சமுமாக இருக்கிறது ஆராதனா, இருந்தாலும் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. உங்களது ஒல்லியான சதைப்பிடிப்பற்ற அந்த உருவம் அவ்வளவு அழகாக இருக்கிறது. நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் ஆராதனா. ( எழுதிவிட்டு சந்தோசமாகச் சிரிக்கிறேன் )

நிலவு காட்டி சோறூட்டும் தாய்இடுப்பு நிறைய வளர்ந்திருக்கும் குழந்தையின் பன்னீர்சிரிப்பாய் சூழல் வாய்க்கும் ஒரு தருணத்தில் உன்னைச் சந்தித்திருப்பேன் மீண்டும். காத்திரு.

காலப்பிரக்ஞையில் நொண்டும் இந்நொடியில் தேர்ந்த மெஜீசியனின் அசைவுகளுக்கு உடல் உடையும் ஒருவனாக நான் தீரமாட்டேனா ஆராதனா?! புதைகடல் அமிழ்ந்த இம்மூச்சு வரம்.

முத்தங்கள் உனக்கு...
உன்னைப் பார்க்கவேண்டும் போல இருக்கிறது ஆராதனா.

Sunday, September 1, 2013

ஆராதனா எனும் பேய் 51






அகோரப் பசியெடுத்து நிற்கும் என்னை
விழுங்கப் போகும் முன்
உன்னிடம் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான் ஆராதனா..

புணர்ச்சிக்குப் பிறகு
மார்காம்புகள் வலிக்கிறதென்ற
மேலும் கூடதலான காதலை
என்னிடம் சொல்லி முத்தமிடாதே

வாழ்தல் விடுத்து மரணத்தில் ஒழுகிவிடுவேன் நான்

இல்லை இல்லை என்று சொல்லி நெருங்கி அணைக்கும்
உன்னை
எந்த தொட்டிலில் தாலாட்டுவது 

...





கனவிலும்
மார் தரும் அம்மாவிடம்
ஆழ
சாய்ந்து
எச்சில் வடிய மூச்சொறிகிறது
குழந்தை

கவனிக்கும்
கடவுளின் கைப்பையில்
முத்தக் கடல் தடுமாறும்
இந்நிழல்...
ஆக கடைசி ஜென்மத்திற்கும்
பெய்க
என்றதொரு மழையை நான் வாசித்தேன்

...







புரோட்டாவுக்கு காசு தரவேண்டும்
உறக்கம் வருகிறது, கடைசி பஸ் போய்விட்டது.

கை ஓங்குகிறார்களே
என்ன செய்வேன்
இந்த சுதந்திரத்தை  


குகை இசை





ஏழு கடல் ஏழு மலை
தாண்டி வந்துவிட்டேன்

சொல்கிறாள் சொல்கிறாள் சொல்கிறாள்

அங்குதான் நிற்கிறாள்
அவள் 

ஆனந்தனும் மனோவும்






எதிர்கொள்ளமுடியாத புறக்கணிப்பிலும்
கெக்கலிப்பிலுமிருந்து
வெளியேறிய
முதல் நாள் அது

கூட்டமாகப் பறந்துகொண்டிருக்கிற
தும்பிகளென
அன்று
வெயிலை ரசித்துக்கொண்டிருந்தான்
நீண்டநேரமாக
ஆனந்தன்

சைலன்ட் மோடில் கிடந்த போஃன்
ஆனந்தனின் சட்டைப்பையை
“விங் விங்.. என்று” முட்டுகிறது,
அவனது மௌனக்குரலை உணர்ந்தவனாய்
இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடுவதாக
சொல்கிறான்
எதிர்முனையில் மனோ

வானம் அடர்கறுத்து
மழைக்கான
தாமதத்தில்
ஆனந்தனின் சொட்டுக்கண்ணீர் தரை தழுவவும்
மனோ ஆனந்தனின் முதுகினை பற்றவும்
சரி கணமாக அமைந்தது

தாங்கள் ஓரினப்பாலுணர்ச்சியாளர்கள் என்பதில்
குற்றபோதம் எதுவுமில்லை
அவர்களுக்கு

புரிபடாத பாஷைகள்
ஒரு பந்தினைப்போல உருண்டு
பலரையும் எதிர்கொள்ள
வெளிச்சக்கீற்றின் ஊடே நிசப்தமாக கலந்து
வெகுதூரம்
கடந்திருந்தார்கள்
ஆனந்தனும் மனோவும்.