Monday, May 30, 2011

தோல்வியின் பெருவெளி !







அச்சொல் விழுந்தொடிந்த கணம், 
நதியென அலையும் நினைவின்
பல்லக்கில் ! 

முன்னெப்பொழுதுமில்லா
அடங்கா வெறுமையுடன்
வறுமை படர்ந்த விழிகளென
பனித்திருக்கிறது வெளிச்சம்.

பிரிவின் உடைந்த நாற்காலியில்
இருத்தல் மெல்ல நகர்கிறது
காற்றில் ஒரு சிறு இலையினையொத்து..

என் தீக்கனவில்
அவளின் புது வீட்டை
பழைய சாக்கடைப்
பின்தொடர்வதாய்
எழுதி வைக்கிறீர்கள் என்னை..!

தோல்வியின் வெளியெங்கும்
எனது ஒற்றைக் காதல்.


நன்றி உயிரோசை..


Monday, May 23, 2011

அரேபிய ராசாக்கள்.. 15







புறக்கணிப்பின் நிறங்கள்
படிந்து கிடக்கின்றன
இப்பாலையின் பெருவெளியெங்கும்
கானலைப்போல.

கதைகள் பல நிரம்பியிருக்கும்

இம்முகங்களின் பார்வை கானகத்தில்
ஒரு வயோதிகனின் இருப்பென
படர்ந்திருக்கிறது
வலியென்பது.
நிழல்கள் அனைத்தும்
மரித்த பிம்பங்களென
ஒட்டிக்கொள்கின்றன
அறையின் இரவினிடத்து..!

தெவங்கி தெவங்கி அழும்
அப்புதியவன்
அறிந்திருக்க வாய்ப்பில்லை,

நாட்கள் திங்கும்
இத்தலைகள்,  
இயலாமையின் உச்சத்தில்
பிறகெப்பொழுதும்
வெறுப்பையே தன்னிடத்து
நிலைப்படுத்தியிருக்கிறதென்பதை.


நன்றி உயிரோசை..

Tuesday, May 17, 2011

அனகாவும் மழையும் !







இந்நாட்களில்
எவருக்கும் பெய்யாத மழையை
தன் பிளாஸ்டிக் செடிகளுக்குப்
பெய் பெய்யென
அறையிலிருந்த மழை சித்திரத்தை
தட்டித் தட்டிக் கொண்டிருந்தாள் அனகா!

அலுவல் முடித்த களைப்பில்
வீடு சேர்ந்த அம்மாவின்
கைகளில் அகப்பட்ட மழை
அனகாவின் கண்களிலிருந்து
சுரந்து தரப்பட்டது!


நன்றி உயிரோசை..