Thursday, July 30, 2009

பொய்கால்குதிரை..

பூக்களெல்லாம் அணிவகுத்து
ஆர்பாட்டம் செய்கின்றன
உந்தன் பிறந்தநாளை
பூக்களின் தினமாக்க சொல்லி !!

தங்கை பூட்டி வைத்திருக்கும்
வளையல்கள் அனைத்தும்
இரவுநேரங்களில் திருட்டுத்தனமாக
என்னிடம் வருகின்றன
கால்கள் வரைந்துவிடெனசொல்லி
உந்தன் கைகள்சேர
கொள்ளை ஆசையாம் அவைகளுக்கு !!

செட்டியார்கடை கொலுசுகளெல்லாம்
எந்தன் கைப்பிடித்து விடமறுக்கின்றன
உன்னை கடைவீதியில் கண்டபின்னால் !!

எப்படி தெரிந்து கொண்டதோ
இந்த கோவில் சிற்பங்கள்
நீ போகும் முன்னே
மெதுமெதுவாய் வெளிநடப்பு
செய்ய துவங்கிவிட்டன
ஓ.... நீ நடக்கிறாயோ !!

இப்பொழுதெல்லாம்
நிலா இரவையோ
நீண்ட ரயில்தடங்களையோ
எதிர்வீட்டு மழலையோ
என் முதல்காதலையோ
யோசிப்பதே இல்லை
என் கவிதைபொய்கள் !!

கடைசியில் ஒருநாள்
என் கனவுகளுக்கு
கால்கள் முளைத்து
உன் வாசல் வரும் !!

அன்றும் சொல்லி அணைக்காதே
நீ என் தோழனடா!!

"விண் தொட்ட விரல்கள்"


உன் பாதங்களை
தரிசிக்கும் வீதிகளில்
காத்திருக்கிறேன்
வானளவு காதலுடன்!

கடந்து செல்கிறாய்
ஒவ்வொரு நாளும்
அழகு கூடியவாறே!

பேசாத மௌனமும்
சொல்லாத காதலுமாய்
ஓர் முட்டுசந்து மறைவில்
தவமிருக்கிறேன் நானும்!

ஒவ்வொரு இரவும்
கழுத்து நெரிக்கிறது- காதல்
நாளைய பொழுதினில்
உன்னோடு ஒட்டிக்கொள்ள!

வெட்கி சிரிக்கிறது
கனவுகள் கண்களிடம்
இன்றைய காலையின்
வியர்வை பொழுதினை எண்ணி!

உன் உதட்டுபுன்னகை
கண்டபின்னால்
சிதறிகிடக்கும் வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாக!

கோபம் சாமிக்கு
தெரிந்துவிட்டதுபோலும்
நான் கோவில்வருவது
உன்னை தரிசிக்கவென்று!

சில நாட்களில்
அக்காவின் அர்த்தமற்ற கோபங்கள்
நீ வெட்கி வெட்கி
விளக்கியபின் அர்த்தமுள்ளதாக!

ஒரு மொட்டைமாடி இரவில்
நீ நட்சத்திரங்களை
எண்ண சொன்னபின்
நம் காதலின் அளவறிந்துகொண்டேன்!

அதே இரவினில்
உனக்களித்த முத்தங்கள்
பெண்மையின் வெட்கம்
முழுமையாக தெரியபெற்றேன்!

நான் வாசிக்க
நீ ரசிக்க
மழலை நம்மை கட்டியணைக்க....

"அம்மா அதட்டுகிறாள்
டேய் தூங்குடா"!!!

Wednesday, July 29, 2009

"வேசிகளும் கடவுளின் குழந்தைகள்தான்"

காமம் விற்கப்பட்ட
ஓர் அழுக்கு இரவினில்..

யாரை குறைசொல்ல
ஒவ்வொருத்திக்கும்
ஒவ்வொரு கதை!!

மொத்தமாய்
விதியை
பலியிடுகிறோம்!!

எங்கிருந்து கற்றேன்
இமைகளோடு உதடுகளும்
கூடிகுவிந்த இந்த
புதுவகை புன்னகை!!

மனித குரங்குகளின்
அசிங்க ஆட்டம்
சில நூறுரூபாய்களோடு!!

மாத கடைசிகளில்
ஏழை போதகனும்
போற்றி அனுப்பபடுகிறான்
சில,பல வக்கிரமான திட்டுகளோடு!!

அழகி ... நீ
கொஞ்சும் வழிபோக்கன்
கொஞ்சம் அதிகமாகவே
இன்பம் வாங்கி செல்கிறான்!!

வருங்காலம்
வெட்கம் என்ற
ஒன்றே மறக்கும்
எங்கள் இனபெண்களுக்கு!!

ஒவ்வொரு முறையும்
மரண ரணம்...
உடல் விற்கிறோம்
வயிறு நிரம்பவே...

ஒருமித்த ஆசையில்லை
வருபவனுக்கெல்லாம்
எங்கள் ஆசைகேட்க
எவனுமில்லை..

விசித்திர குரங்குகள்
வாசல் தட்டுமோ
விதி நொடிக்க ?

நல்வாழ்வு பிறக்குமோ
நாங்களும் கடவுளின் குழந்தைகள்தான் !!

கனவற்ற இரவு...

என் தோட்டத்து
பூக்களுக்கெல்லாம்
கண்கள் முளைத்து அழுகின்றன
விட்டுப்போகிறேன் என்கிறாயே!

விழிகள் திறக்க மறுக்கின்றன
உன் வருகையில்லா
வீதியை வெறுப்பதனால்!

சுண்டல் பையன்
தொழில் மாறுகிறான்
கடற்கரை மையானமாகிறதாம்!

இரவுகள் அடம்பிடிக்கின்றன
உன் புன்னகை நிரம்பிய
கனவு வேண்டுமென்று!

வார்த்தைகள் சிதைகின்றன
காதல் இல்லாத
காதல் கவிதை வாடி!

கால பகவான்
செத்து போகிறான்
வாழ பிடிக்காமல்!

கடவுள்
சாபமிடுகிறான்
காதல் செத்தொழிய!

வெறுக்கிறது
எனை இந்த
புது எழுத்துலகம்..

நட்சத்திரங்களில்லா இரவு
அலைகளில்லா கடல்
காண ரசிக்குமோ ??

Tuesday, July 28, 2009

எதிர்பார்ப்பு ...

காதல் சாகும் நேரம்
காமம் - தீரும் தாகம்;
உனது ஆசை
நான் தீர்க்க
முத்தங்கள் தொடர
முன்னேறுவோம் இரவை !

இரவோ - நீள நீள
காதலோ பெருக பருக
விழித்திருப்போம் காமத்தோடு !

விண்மீன்கள் கண்சிமிட்ட
பகலொளி அறியாமலேயே
தூங்கி கிடப்போம் !

அங்கீகரிக்கப்பட்ட காதலயினும்
தோளோடு தோள் உரச
வெட்கப்படுவோம் வீதியில் !

இருவருக்கும்
புதுபுது உறவுகள் பிறக்க
கொண்டாடுவோம் நாட்களை !

கருவொன்று - உனது
கருவரைக்குள் வளர
தக்க நாளில்
அழுகை சப்தம்
நம்மை தாலாட்ட
உயிர்பெருவோம் முழுமையாக !

இன்றைய இதே காதல்
என்றும் நம்மை தாங்க
வழிநடப்போம்
புது உலகம் சேரும்வரை !!

காதல் வியாதி..!

கனவில்
நீயும், நானும்,
ஆசைதீற அளவுமீற
காதலித்துகொண்டிருக்கிறோம்
ஆனால் நிஜத்தில் ??

காதல்......
காதலிப்பவர்களுக்கெல்லாம்
கிடைக்குமென்ற நப்பாசை
உன்னைப்போல் எனக்கும் !

உளவியல் ரீதியாக
உனக்கொரு பிரச்சனை
மருத்துவன் மறைமுகமாய்
என்னிடத்தில் !!

Monday, July 27, 2009

"காதல்... காதல்...காதல்"

அதிகாலை கனவில்
ரோஜாவே வந்து கெஞ்சுகிறது
உனக்கு தரசொல்லி!


விண்மீன்கள்
விலையற்றுபோனதாம் உன் விழிகள்
பிரசவித்தபின்பு!


வியர்வைகூட இனிக்கிறதாம்
உன்னை காண
காத்திருக்கும் நேரங்களில்!


பிசாசுகளும்
நல்லது செய்ய தொடங்கிவிட்டனவாம்
உனது புனகையை கண்டபின்னால்!


மண்ணிடம் நட்பாகிவிடேன்
உன் பாதங்கள்
அணைப்பதால்!


நீண்ட தியானமிருக்கிறேன்
உன் முகம் மட்டும்
நடுவில் அடிக்கடி!


எனக்கும் உனக்கும்
சின்ன விதியாசந்தான்
உன்னை காதல் தேடுகிறது
காதலை நான் தேடுகிறேன்!


நட்புக்கும் - காதலுக்கும்
நடுவில் நிற்பது
நானா இல்லை நீயா?!


உறங்கப்போன நேரத்தில்
இதயம் ஞாபகபடுத்துகிறது
ஆக்சிஜன் உனது பெயரில்
மட்டுந்தான் கிடைக்குமென்று!


கனவுகளை
உயிர்ப்பிக்குமோ
காதல் காற்று வழங்கி!


காதலுக்கும்
காதலிக்க தோணுமோ
நம்மை பார்த்து ?!

தவம்மறு ஒருமுறை
மனம் ஏங்குகிறது
மழை உனை ரசித்த
இந்நாளுக்காக !


உன் சிரிப்பின் வெளிச்சத்தில்
காணாமல்போன மின்னலுடன்
இணைந்து கொண்டது
என் வெறுமையும் !


ஈரம்பட்ட உன் துப்பட்டா
வெட்கத்தில் வழிகிறது
என் உதடுகள் !


உன் பாதங்கள்
நட(ன)மாடுவதை பார்த்தபின்
என் விழிகள் மோட்சத்தில் !


உன் கொலுசொலி கேட்டபின்
இடி - இடிப்பதை
சற்றுநேரம் நிறுத்தி கொண்டது
என் காதல்கடவுளின் ஆணையால் !


மழை எப்பொழுது நிற்குமென்றாய்
சின்ன குழந்தையை போல
நின்று போனது - இருமுறை
என் இதயம் !


பொல்லாத விழிகள் கொண்டு
எனது மௌனத்தை
விமர்சித்து சென்றாய்
நான் சிலையானேன் அங்கேயே !


இசை ப்பிரியனாகிறேன்
நீ பேசியதை தொடர்ச்சியாய்
அசைபோட்டு கொண்டிருப்பதால் !


விழிகள் மூடி
யாசிக்க தொடங்குகிறேன்
மறுமொருமுறை
இதே மழை நாளுக்காக !


Sunday, July 26, 2009

மனம் கோணல் ??


பகிர்தல் கொண்டோம்
காதல் பிறப்பித்தோம்...

சந்தோஷ தருணங்கள்
நமது கரங்கள் பற்றி
அழைத்து சென்றது
ஆழமான அற்புத உலகிற்கு...

ஓர் பிரகாச நாளில்
பிரிவதர்கான காரணங்கள்
அறிய முற்பட்டோம்...

திருட்டு புன்னகையுடன்
விரல்களை நகர்த்தி
விதியென்று வருந்தினோம்
காதலை தோற்பித்ததற்கு...

ஓர் மாலை பொழுதினில்
தனிமை விருப்பமின்றி
பூக்களோடு ரகசியம் உரைக்கிறேன்
உன் நினைவுகளை கொல்கிறேன்...

உணர்வுகள் அதேயாயினும்
உனது உருவம் புதியதே !!!

ஏனென்று கேள்வி பதிக்க
ஆயிரம் வாய்புகளிருந்தும்
அதனை தேடமுயற்சிப்பதில்லை மனம் !!!

கனவாய் கலையாமல் நிகழனும் ...


கண்ணீர் வடிக்கின்றன
மனித புற்றுகளும்
மாட்டு கொட்டகைகளும்
அனாதை ஆகிபோனதெண்ணி ...

பிணவாடையில் வாழவிருப்பமின்றி
மக்கி அழுகின்றன
தேயிலை தோட்டங்கள் ...

நாலாபுற அலைகளும்
நுரைகளில் தூக்குபோடுகின்றன
ரசிகனற்ற ஆதங்கத்தில் ....

கடலின் வழிவரும்
கப்பல் பிடித்து தப்பியோடலாம்
புத்தன் மீண்டும் உயிர்தெழுகிறான் ...

குண்டு சப்தம் நின்றுபோகட்டும்
அகதிகள் ,, கற்பழிப்பு
அகராதியிலிருந்தே அழிந்து போகட்டும்
சிறார்கள் பேடியற்று பள்ளிசெல்லட்டும்
புத்தர் மௌனமாய் தவம்செய்யட்டும்
காதலர்கள் கடற்கரை ரசிக்கட்டும்
தேயிலை வாசம் வீசட்டும்
இயற்கை பீற்றிகொள்ளட்டும்
இலங்கையின் அழகை ....

நேற்று வெடித்த குண்டில்
செத்துபோன சாமி
வரம் .. கொடுத்து போகிறான்
ஏழாம் ஜென்மத்திலாவது
கிடைக்கட்டும் இவையெல்லாம் !!!


Saturday, July 25, 2009

நெடு நீண்ட ஆண்டுகளாகவே...
விழிகள் இறுக்க மூடுகின்றோம்
விடிந்ததும் திறக்குமென்ற
அர்த்தமற்ற நம்பிக்கையினிலே...

ஈரம் படிந்த கண்கள்
பஞ்சடைத்த காதுகள்
இஷ்டதெய்வத்தை கூப்பி கூப்பி
ஒடிந்துபோன கைகள்
கனவுகளும் விரோதமாகவே...

சூரியன் எழுப்புதோ என்னவோ
வெடிகுண்டுகளின் வெளிச்சம்
முகத்தில் அறைந்து...
ஆச்சரியம் - காலை !!!
வெற்று விடியல் ???

பின்பு அது
முற்றத்தில் தெரிக்குமோ
கொல்லையில் சிதறுமோ
நிசப்தமற்ற நிழல்களாய்
பொழுதுகள் நகர்கிறது...

பச்சை குழந்தைக்கு
பால்பசி எடுத்தால்
தெருவோரம் தேடியோடுகிறோம்
வெடிகுண்டு விழுங்கிசென்ற
குருதிகாயாத முலைகளை...

கடைசியில் பொறுமைகொன்று
திங்க... தூங்க... வழியற்று
ஒற்றை மூட்டையில்
மொத்த வீட்டையும் அடைத்துவிட்டு
புறப்படுகின்றோம் பயணம்...

புதிய மண்ணின் வாசனை
இருகரம் தாங்கி
விழிகள் கசிந்து
நூறுகோடி வேதனையோடு...
........................................................
அன்புடன் வாசிப்புபலகை
வரவேற்கிறது எங்களை
அகதிகள் முகாம்..................................

"வாயிருந்தால்" வெடிகுண்டு ?!

பச்சை குழந்தைகளும்
பாவாடை பெட்டைகளும்
கணவன்மார்களும்
கைதடி கிழவன் கிழவிகளும்
ஆடு மாடு கோழிகளும்
கருகி சாகின்றனவே
ஒருவேளை எனை கொணர்ந்தவன்
கண்களற்ற குருடனோ ???

பாதங்கள் தொட்டாலே
உரைத்து சொல்வேன்
யாருமற்ற தனிமை வேண்டுமென்று
வடித்து கொடுத்தவன்
கால்களில்லா நொண்டியோ ???

அனிச்சையாய் அமைதிகாத்து
அடங்கி போயிருப்பேன் !!!
உண்டாக்கியவன் என்னிடம் கேட்க
மறந்து தொலைத்தானே
காதுகள் தைத்துவிட
ஒருவேளை செவிடனுமோ ???

கொலை சிரிப்புடன்
என் கோழை சப்தத்தையும்
வெற்று வெளிச்சத்தையும்
தூரநின்று கண்டுகளிக்கிறானே ...

மனசாட்சியை
பிணங்களுக்கு விற்றுவிட்டானோ
என்போல் எரிந்து போகட்டுமென்று ??!

இலங்கையும், இறைவனும் ..


ஆறுகால பூசைகோயிலில்
மணியடிக்க ஆள்தேடி
வீதிவழி அலையும்
குருட்டுசாமி,
சிங்கள சிப்பாயொருவன்
பந்து விளையாட
பால்பைகளை
கிழித்து சென்றுவிட்டதறியாமல்
தமிழச்சி வயிற்றில்
வடியும் இரத்தம்
நக்க முயற்சித்து
தோற்று அழும்
குழந்தை கண்டு
கோபத்தில்
மணியும், பூசையும் மறந்து
சிங்களன்குடில் முகவரி
தேடி விரைகிறான் ..

மட்டையும், பந்தும் கிடைத்தாயிற்று
கூச்சலிடுகிறான்
குருட்டுசாமியின் கால்கள் முறித்து
கொடூரமாய் சிப்பாய் ..

கண்ணும், காலும் அற்றுபோன
சாமிக்கு வழிகாட்ட
பிணவாடை நுகர்ந்து
மூச்சிரைக்க ஓடிவருகிறான்
ஏழை தமிழனொருவன் .

Friday, July 24, 2009

வாழு.. வாழபழகு ... காதலோடு..,


என்ன சொல்லி சமாதானப்படுத்த
மீண்டும் மீண்டும்
உனது பெயரை மட்டுமே
எழுதி எழுதி பார்க்கும்
எனது காதலை...
அதிகாலை பூக்களின் புன்னகையுடன்
என் கைப்பிடித்து கேட்கின்றது பேனா
எவ்வளவு அழகு அவள் ?!
நேற்று என்னை பிரியும்பொழுதினில்
நினைத்துகொண்டேயிரு என்று
நீயளித்த முத்தங்களை காண்பித்தேன்
வெட்கபட்டுகொண்டு
மறுபடியும் காகிதங்களை
நனைக்க ஆயுத்தமாகி
சொல்லாமல் சொல்லிபோனது
வாழு.. வாழபழகு ... காதலோடு..,

நிர்பந்திக்கபட்டவைகளே...இழப்புகளும்.


பூக்கள் பறித்துவருகிறேனென்று
பாலை மணல்திசையில்
நகர்ந்துகொண்டிருந்த மனம்
கிழவனொருவன் வழியில் ஒற்றையாய்
கைத்தடியின் பாக்கியத்தோடு
சிறகுகள் விற்பனை செய்ய
அலைந்து கொண்டிருப்பதை கண்டு
சில நிமிடங்கள் நினைவு கூர்ந்தன...
ஞாபகம் தொலைய மறந்ததாய்
வெறுமை முற்றிலும்
கிழவனின் கைகளில் திணித்துவிட்டு
சிறகுகள் பற்றியவாறு
பட்டாம்பூச்சியின் வண்ணத்தை
லேசாய் ஒட்டிக்கொண்டு திரும்பின
செத்துபோன அம்மாவின்
முலைகளுக்கு காத்திருக்கும்
பிஞ்சு மழலையின் கன்னம் தடவ.

Thursday, July 23, 2009

கண்ணாடி

முகம் திருடிய குற்றத்திற்காக
ஆணி அறையப்பட்டு
சுவரில் சிறைபட்டுகொண்டதோ ?

மழலை...உந்தன் சிறியதாய் துளிர்விட்ட
தலைமயிர்கள் தடவும் தருணங்கள்
அகராதியில் எங்கு புரட்டியும்
கிட்டவில்லை வார்த்தைகள்...

சின்னதாய் புருவங்கள் சுருக்கி
விழிகள் விலக்கி
நீ பார்க்கையில் தோன்றபெறுகிறது
அதிசயங்களெல்லாம் அதிசயங்களல்ல...

ஆயிரம் ஓவியங்கள்
ஒன்றாய் கூடியதுபோல்
காதுமடல்கள் உனது...

ஒட்டுமொத்த காற்றும்
ஏங்கி பிணைகின்றன
உன்னை சுவாசமுத்தமிட...

பனிக்கட்டி பற்கள் காட்டி
இத்தணுன்டு நீ சிரிக்கையில்
பூ பூக்கும் பாலைவனம்...

மொத்த விண்மீன்களின்
வெளிச்சம் விழுங்கிவிட்டதோ
விவரிக்க இயலா பிரகாசமாய்
உனது முகம்...

இதுவரை கிடைக்கப்பெறா ஆனந்தம்
உந்தன் பிஞ்சு விரல்களின் ஸ்பரிசத்தில்
உள்ளூர உணர்கிறேன்...

தத்தி தத்தி
தவழும் பஞ்சு பாதங்கள்
கடவுளை கோபிக்கும் மனம்
கண்கள் இரெண்டு போதாதே...

நீ மிரட்டும் செல்லதொந்தரவுகள்
உயிர் மறக்கிறேன்
புதியதாய் பிறக்கிறேன்...

உன்னோடு நான் வாழும்
அந்த பொழுதுகள்
நிலப்பாடில்லாமல்
விரிந்து கொண்டே செல்லும்
என் வானம்.....................

Wednesday, July 22, 2009

அரேபிய ராசாக்கள் IIமண்டையோட்டில் குழவிகூடு
நெற்றியில் பல்லிபடுக்கை
காதுகளில் தேனீக்கள்
தொண்டைகுழியில் மண்புழுக்கள்
மூக்குதுளையில் முதலைகள்
வயிற்றில் பாம்புபொந்து
கைநிறைய மணலள்ளி
கண்ணிலெரிந்து உலுப்பும்
வெறுமை கனவு ..

நடுராத்திரி தலைபிடித்து
உலகமே இருண்டதாய்
விரக்தியில் விரல்கள்மடக்கி
சுவரிலிரண்டு குத்து குத்தி ..

மனைவி மனதிலும்
மக(ள்)ன் புகைபடத்திலும்
தொலைபேசியில் காதலித்து
கழிவறையில் காமம் துப்பி
இளமையை பாலைக்கு விற்று
பணம் மட்டும் உண்டாக்கிகொண்டு
நாளையொருநாள் நாடுதிரும்புவோம்


வாய்நிறைய புன்னகையுடன்
வரவேற்க தயாராயிருங்கள் .

அரேபிய ராசாக்கள்

இதுதான் முதல்முறையா ...
இல்லை இதற்குமுன்
வேறுநாடு போயிருக்கியா ...
பராவாயில்லை எல்லாம் பழகிபோகும் ...
நரகவாசிகளின் ஆறுதலோடு
இனிதே துவங்கும் நரகவாழ்க்கை ..

அறைக்குள் நுழைந்தோமோ இல்லையோ
எங்கள் காலண்டர்களின் தேதிகள்
வெட்டுபட துவங்கும் ..

குளிரூட்டப்பட்ட அறையினில்
தூக்கமற்று நீளும் இரவுகள் ..

அலார கடிகாரத்தின் அச்சுறத்தலோடு
வேண்டாவெறுப்புடன் விதியேயென
விடியும் நாட்கள் ..

இரைச்சிதுண்டு தேயிலையில்
கிடந்தாலும் கிடக்ககூடும்
பார்த்து பக்குவமாய் குடிக்கணும் ..

காலவித்தியாசம், பணமதிப்பு
இன்னும் சில பல
அவசியமற்ற அத்யாவசிய கேள்விகள்...
சுக துக்க நிகழ்வுகள்
துவங்கி முடிந்துவிடும்
தொலைபேசி அழைப்புகளினூடே ..

தாமதமாய் வீடுசென்று
அப்பாவிடம் திட்டுவாங்கி
தூங்கும் இரவுகள் ..
அம்மா கொஞ்சி கெஞ்சி
விடியும் நாட்கள் ..
அக்கா குழந்தையின் புன்னகை
எதிர்வீட்டு பெண்ணுடனான ஈர்ப்பு
தெருமுக்கு டீகடை
நண்பர்களுடன் அரட்டை...............................

அடிக்கடி கனவுகள் கண்டு
கண்கள் கலங்கும்
நாடு திரும்பிவிட துடிக்கும் ..

பொருளாதாரம் பின்மண்டையில்தட்டி
ஞாபகபடுத்தும் குடும்ப வறுமையை ..

கனவுகள் கானல் நீராகி
ஒட்டகங்களின் காலடியில்
மிதிபட்டு சாகும் ..
சம்பளமும் கிடைக்கும்
சந்தோசம் விற்ற காசுகள்
சந்தோசமாய் வீடுபோய் சேரும் .

Tuesday, July 21, 2009

ப்பிரியமுள்ள அப்பாவுக்கு...
முயன்றவரை
முத்தங்கள் கேட்பாய்
இயன்றவரை
இனிப்புகள் வாங்குவேன்...

நான் அழுது அடம்பிடிக்கும்போதெல்லாம்
காகிதங்கள் பல
கப்பல்களாக மாறும் உன்னால்...

கடற்கரையோரமாய்
விரல்பிடித்து அழைத்து செல்வாய்
கைகள் உதறிவிட்டு
நுரைகளோடு விளையாட ஓடுவேன்...

அலைகளின் பயத்தில்
அளவு பொருந்தாத
உன் பாதங்களை
கட்டிக்கொள்வேன்...

நம்மைபோல சிநேகிதர்களோ
நதியும்
காலமும்?!...

நண்பர்கள் உலகறிய
உனைகடக்கும் எனக்கு
அதிகபட்ச தண்டனையாக
காந்திதாத்தா சிரிக்கும்
காகிதங்கள் சிலதருகிறாய்...

ஆசிரியருடனான நட்பு
காதலியுடனான கருத்துவேறுபாடு
இன்னும் இன்னும் நீண்டுகொண்டே
அழகாய் பகிர்ந்து கொள்கிறாய்...

நானும் இன்று
பணியாளனாக
தகப்பனாக...

எங்கு சுற்றியும்
எதோவொன்று உள்மனம் தேடிக்கொண்டு
உன்னிடமே திரும்ப செய்கிறது...

இன்றைய கவர்ச்சி யுகத்தில்
எனது மகனும்
மகனாகவே வளர
உன்னிடமே பணிக்கிறேன்
தொடர்ந்துகொள் உன் தோழமையை....!

அம்மாவை புனிதபடுத்துதல் ..


கொஞ்சம்
இரத்தமும்
கோடி யாகமும்
உருண்டை பிடிக்கப்பட்டு
தொட்டில் யாத்திரையினில் ..

முன்னொருநாளின்
பிறப்புறுப்பு வலியினை
எனது உச்சந்தலை தேய்த்து
மூலையில் அமர
துளி கண்ணீரும்
சிறு புன்னகையும்
ஒட்டிகொண்டவனாய் நான் ..

சுற்றி முற்றி
தேடதுவங்குகிகிறேன்
அப்பனின் கைப்பிடித்து
அம்மா ஓரோரத்தில் .