Saturday, October 20, 2012

மனிதர்கள்எத்தனைவிதமான மனிதர்கள்
எத்தனைவிதமான வெளிப்பாடுகள்
எத்தனைவிதமான அந்தரங்கங்கள்
எத்தனைவிதமான நம்பிக்கைகள்
எத்தனைவிதமான ஏமாற்றங்கள்
எத்தனைவிதமான நிர்ப்பந்தங்கள்

எனக்கு அசூசையையாக இருக்கிறது
மேலும்
எனக்குப் பயமாக இருக்கிறது

எந்தவிதமான மனிதன் நான்

நன்றி வல்லினம்


நிகழ்வுகள்ஒருஊரில்
என்று துவங்கும்
ஒவ்வொரு கதையிலும்
ஒரு கதை
இருந்து கொண்டுதானிருக்கிறது
உண்மைகளை உசுப்பிப் பிடித்தவாறு !

நன்றி வல்லினம்

பெயர்அறியாப் பறவையொன்றின் சிறகுகளில்


நீயற்ற வனத்தில்
ஏதுமற்ற மழையாய் உதிர்ந்து விழும்
துயரப் பாடலென நான் மிதக்கிறேன்

பெயர்அறியாப் பறவையொன்றின் சிறகுகளில்
உனக்கான இருப்பை பத்திரப்படுத்துவதில்
மும்முறமாய் கவனித்துக் கொண்டிருக்கிறது
எனது பெருங்கோடை

ஒரு கரமைதுனத்தின் கடைசிக் கணமென
உடைபடும் மௌனபலூனின் நாள்
பெருமழையின் முதல் துளியென
இறுகத்தழுவும் கரங்கள்

ராட்சஸப் பாறையாய் வியாபித்திருந்த
பிரிவு அறிந்த தீராக்காதலின்
ஒற்றை வெளிச்சத்திலிருந்து
அழுந்தமுத்தம் ஒன்று மெல்ல கீழிறங்கும்

துயர் பற்றி எரியும் வனம்
திரும்பும்
வேட்கையின் பெருநதி அணைத்து

நன்றி வல்லினம்


அரேபிய ராசாக்கள் 20

20.
விடுமுறையின் தாகம் 
கானலில் ஒளிரும் உனது கையசைவில், 
கம்பி வேலிக்குள் தவறிப் புகுந்த பறவையின் சிறகுகளையே 
வெகு நேரம் உணர்ந்து கொண்டிருக்கிறேன்

*** 

21.
மழை பெய்யும் கானலாய் 
இந்நிலம் 
எங்கும் உருளும் வெயில் நதியில்  
உன் வழியனுப்பிய முகம்
ஏந்தி நிற்கிறது தீபமாய் 

***  

22.
வெயில் புரண்டோடும் மண்
கொணர்ந்தப் பிரிவுதனை  
பூனையாய்க் ழுவுகிறேன்
நேசம் மருகி நேசம் பெருகி 

தெப்பக்குளத்தில் கால் கடிக்கும் சிறு மீனாய்
துள்ளும் நினைவலைகளில்  
பிரிய முகத்தின் ஈர சுவாசம் 
பெரு நிலவாய் 

*** 


23.
பரிசாய் நீ செருகிய 
மறந்துவிட முடியாததொரு முத்தத்தை 
இரண்டரை மணி நேரத்திற்கு அப்பாலிருந்து 
நேசிக்க நேசிக்க நேசித்துக் கொண்டிருக்கிறேன்

திருவிழா ஆரவாரமாய் 
மணற்காற்றெங்கும் ஏங்கிப் பொழிகிறது
அன்பின் சொற்கள் அன்பின் அன்பாக
 
கானல்நீர் என் திசைஅறுந்து செல்கிறது
உனது குரலை எந்தன் இசையில் 
செவியாறப் பருகி 

***

24.

தனியனாய் 
எப்படிக் கடப்பேன் 
இப்-பெரும்பாலையை
தினம் தினம் நான்  

பள்ளியிலிருந்து வீடு செல்கையில் 
நனைந்தோடிய மழையாய் ஞாபகமிருக்கிறது 
உன்னை என்கிறாயே 

***

25.

நடக்க கற்றுக் கொண்டிருக்கிறேன்
மனம் பிசையும் வல்லாத அன்பினிடத்து
கால்களை இரைந்துவிட்டு
 
வாஞ்சையோடு பற்றிக் கொள்ள 
காத்திருக்கும்
ஒரு மலையடிவார நதியினை 
விரல்களில் அள்ளிக் கொண்டு  
கண் எட்டாத் தொலைவு கடந்திருப்பாய் நீ 
எப்பொழுதோ 

சந்திக்கும் தருணம் சொல் மறந்துவிடாது
உனக்கு முன் அடைந்திருந்த 
எனது நட்சத்திரக்கண்களிடம் பிரிவின் வாதையை 

***

நன்றி மலைகள்.காம்

Tuesday, October 9, 2012

காலத்தின் கரங்களில் மொத்தமுள்ள ரேகைகள்என்றோ ஒரு நாள் 
வீசியெறிந்த உணவிற்கு
காலைச் சுற்றும் நாயென
ஞாபகத்தைப் பேசிக்கொண்டிருக்கிறேன் 

நினைவில் காடுள்ள 
அங்காடித்தெரு பெரும்பசி யானையாய்
பிரிவை மாத்திரமே 
அகோரமாய் வரைகிறாய் நீ

மிக உக்கிர வெயில்
நம் இருவரையும் புணர்ந்து கொண்டிருக்கிறது 

நாளையொரு பெருமழையில் 
அழிந்தும் போகலாம் இத்தாவரம்
அல்லது 
ஆழப் புதைந்துக் கிடக்கும் 
வேரிலிருந்து மெல்ல 
தலையெடுக்கலாம் ஒரு சிறு துளிர்

காலத்தின் கரங்களில் மொத்தமுள்ள ரேகைகள் 
யாரால்தான் படித்துவிடமுடியும்