Saturday, March 9, 2013

நிறம்



காமத்தைக் கொண்டாடப் பணிக்கிறாய்
எல்லாவுமாய்ச் சிந்திப் போகிறேன்

கண்ணாடிச் சில்லுகளில்
முகம் முகங்களாவதாய் வளர்கிறது
இரவு

நன்றி எதுவரை.நெட்


ஒரு பெருங்கணம்



எடுத்துக்கொள் என நீட்டுகிறாய்
மௌனத்திலிருந்து விடுபட்ட
சிறு புன்னகையை

ரோஜாவின் முட்களிலிருந்து
ஒரு துளி இரத்தம் செய்து
பைத்தியக்காரப் புன்னகையாக்கினேன்
அப்புன்னகையை

பழைய மௌனத்தின் குதிகாலிலிருந்து நடுங்கி
புதிய மௌனத்தின் குறுநெஞ்சின் மேல்
சாய்ந்து விழுகிறது
ஒரு பெருங்கணம்..!

நன்றி எதுவரை.நெட்


Saturday, February 16, 2013

ஆராதனா எனும் பேய் 38



38.

இருண்ட மழையின் சொட்டுகள்
படர்ந்து ஆடும் பைத்திய அகத்தில்
சுடர் பெருகும் இச்சாமம் ஒழிய,
நீ விட்டுப்போன நிலத்தை
தற்சமயம்
பதிமூன்றாவது மாத்திரையோடு
விழுங்கிக் கொண்டிருக்கிறேன் ஆராதனா
 
ஜன்னல் கதவுகளை அடைத்தாயிற்று
கண்கள் உருள்கிறது..

சொல்ல மறந்துவிட்டேன் ஆராதனா
நாளை
"ஸ்போர்ட்ஸ்டேய்"க்கு அழைத்திருக்கிறாள்
ஆறு வயது நம் மகிழ்மொழி
உறங்கும் முன் அவளுக்கு
அம்மா, சாமி கதை சொல்லியிருந்தேன்
இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம்
(உன்னை,உன்னுடைய முத்தமும்..)

***


39.
முன்பொரு
பெருமழைக் காலம் ஒன்றின்
அந்தி சாயும்வேளையின் பட்டர்பிளைக்கு
நான் முழுதும் ஒப்புக்கொடுத்த என்னை
மீட்டெடுக்கும் போலுள்ள உன் அருகிருப்பினை
வரையத் துவங்கியிருக்கும்
இந்த கலர் இரவில்

சலனமற்றிருந்த எனது பெருநதி நீந்திச் செழிப்பது
கண்டும் ஏன்

மௌனக் கானகத்தின் பச்சையத்தில்
நீயொரு
சிறு பிள்ளையாய் குதித்துக் குதித்து
விளாயாட்டுக் காட்டுகிறாய்
ஆராதனா!

***


40.
கூடடையா தாய்ப்பறவையின்
அலகில் விசும்பும்
குஞ்சுப் பறவையின் பெருகும் பசியாய்
வளரும் காத்திருப்பினில்
மரித்து மரித்துப் புசிக்கிறேன் பெண்ணே
என்னை நானே
என்னை நானே

தொலைவில் தெரியும் கடல்நிலவாய்
அருகில்வரும் அது நீயா?
அது நீயா?
ஆராதனா அது நீயா??

***

http://www.vallinam.com.my/issue49/poem1.html








ஆக




சிறு தொட்டிச்செடியில்
ஒழிந்து கொண்டிருந்தது
எனக்கான ஈரம்

ஒரு பெரும் பூந்தோட்டமே
நிறுவ
முயன்று கொண்டிருக்கிறாய்
நீ

நன்றி வல்லினம்


இன்னும் சொல்வோமேயானால்




உடல் அவிழ்த்துக் கொண்டிருந்தேன்
கொடுநாவின் வாள் கொண்டு

மனம் இறுக்கிக்கொண்டிருக்கிறாய்
தேன் உமிழும் வன்மம்
தொட்டு

நன்றி வல்லினம்




மெல்ல வளரும் பேராகாயம்




காற்றின் திசையெங்கும்
மின்னி மின்னிக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்கள்

வியர்வை நுரைத்த நமது உள்ளாடைகளில்
வழிகிறது
நீந்துதலுக்கான ஸ்டார் குறிப்புகள்

வியாபித்தலின்
பசையறிந்து
சலனமற்றதொரு எளிய அன்பு

நன்றி வல்லினம்


மழையெனச் சொட்டும் நிலா மிதக்கும் கடல்




அசைய மறுத்து மிளிரும் முகம்
பைத்தியம் பசிக்கிறது
வாழும் கோடை முன்
என் நீ

பிரிவென்பது பெரும் கோடை
பிரிவென்பது சுனையொத்த அன்பு

பிரிவின் சுவடு அறியுமோ
அறியாதோ
மரண வீட்டில் தீரா மழை

நன்றி வல்லினம்


***




இந்தக் கவிதையில் காதல் நிரம்ப இருக்கின்றது.
நானும் அவளும்
உங்களது தனிமையைப் பாடுகிறோம்

***




உன்னை அமைதியிழக்கச் செய்யும்
என் மௌனத்தின்
வலு
குழந்தைகளிடம் துள்ளும்
பலூனாய்..

***




கடலின் முடிவிலொரு வானம்
வானின் துவக்கத்திலொரு கடல்

எங்கும் துவங்கவில்லை
எதற்கும் முடிவிலில்லை
அது