Sunday, September 15, 2013

ஆராதனா எனும் பேய் 52

“ பூமாலை கோர்க்கும் குரங்கினை அடைந்தவள் கண்களில்
பிரகாசத்துயில் பரப்பும் ப்ரியக்குழந்தை
அழகிய பேரழகிய ஸ்பரிசத் தூறலை வனைந்து வனைந்து அசைகிறது “ என கிறுக்குத்தனமாக சனநெருக்கடி மிகுந்த அங்காடித்தெருவின் நட்டநடுவில் நின்றுகொண்டு, நீ அழுந்தக் கவ்விப்பிணைத்த உதடுகளில் சொல்லிப் பார்க்கிறேன் ஆராதனா.

நெடுநாளாக உனக்குப் பரிசளிக்க எண்ணி விடுபட்ட கொலுசுஜோடியை ஏறக்குறைய அலைந்து அலசி இறுதியில் தங்கத்தில் மணிகள் நிறைந்த ஒரு ஜோடியை வாங்கியாகிவிட்டது. மிகவும் பிடித்திருக்கிறது. உனக்கும் நிச்சயம் பிடிக்கும் ஆராதனா. ஆம், அந்த முத்தத்தின் ரீங்காரம் என்உயிர்க்கூட்டில் இடைவிடாது ஜெல்லிமீனைப்போல நெளிந்து நெளிந்து நெளிகிறது என் பெண்ணே. உன் சிறு வட்டவடிவ தங்கநிற முகத்தின் தாடையிலுள்ள, எந்நேரமும் சிறுமி வானதியின் கரங்களில் தவழும் கலர்பென்சிலின் ஒல்லி முனையளவிலான மச்சம் பிறகு எப்பொழுதாவது நான் எங்கே என்று உன்னிடம் நலம் விசாரித்ததா ஆராதனா?

நினைவில் அழிகிறேன் என்று எங்கோ வாசித்த அனுபவம் என்னிடம் எப்பொழுது நிரந்தரமாகக் குடியேறியது? தங்கிப்போனது? உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது ஆராதனா...

நிலம் குடிக்க சரசரத்து அந்தக் கிளிப்பச்சைநிறப் புடவையில் நீ மெல்ல அசைவது போல நடந்து என்னை நெருங்கியபோது கிளையின் சிற்றசைவில் மொத்தமாக சிறகடித்துப் பரபரக்கும் பறவைகளைப் போல அத்தனைப் படபடப்புக் காட்டியது என் குட்டி இதயம்! ( முதல் சுகவலி ஆராதானா) கூடவே..அதுவரை ரயில்வண்டியென நீண்டு வளர்ந்திருந்த என் தனிமைக்கழுகின் வற்றாத செவ்வெயில் நான் இமை மூடித் திறந்த நாழிகைக்குள் இனி எப்பொழுதும் திரும்பமுடியாத தூரத்திற்குள் சென்று தன்னை விடுவித்துக்கொண்டது ஆராதனா.
நன்றிகள் உரித்தாகுக உனக்கு ஆராதனா...
எனது தீரா ப்ரியங்கள் உரித்தாகுக உனக்கு ஆராதனா...

ஆராதனா.. ஆராதனா...
உன் பெயர் விழுங்கி உன் பெயர் விழுங்கி என்னைத் தேடுகிறேன் உன் பச்சை வனாந்தரத்தின் முழுக்க நின்றுகொண்டு...

வெட்கமும் கூச்சமுமாக இருக்கிறது ஆராதனா, இருந்தாலும் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. உங்களது ஒல்லியான சதைப்பிடிப்பற்ற அந்த உருவம் அவ்வளவு அழகாக இருக்கிறது. நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் ஆராதனா. ( எழுதிவிட்டு சந்தோசமாகச் சிரிக்கிறேன் )

நிலவு காட்டி சோறூட்டும் தாய்இடுப்பு நிறைய வளர்ந்திருக்கும் குழந்தையின் பன்னீர்சிரிப்பாய் சூழல் வாய்க்கும் ஒரு தருணத்தில் உன்னைச் சந்தித்திருப்பேன் மீண்டும். காத்திரு.

காலப்பிரக்ஞையில் நொண்டும் இந்நொடியில் தேர்ந்த மெஜீசியனின் அசைவுகளுக்கு உடல் உடையும் ஒருவனாக நான் தீரமாட்டேனா ஆராதனா?! புதைகடல் அமிழ்ந்த இம்மூச்சு வரம்.

முத்தங்கள் உனக்கு...
உன்னைப் பார்க்கவேண்டும் போல இருக்கிறது ஆராதனா.

No comments: