Wednesday, December 29, 2010

மீள்வருகைக்கான நேச இணங்கல்..


கையாண்ட சொல் பிசுபிசுப்புகளை
எதைச் சொல்லி நிராகரிப்பது
என்ற ஒன்று இருந்துவிடுகிறது

அவர்களின் மௌனப்பைக்குள்
ஒரு கூர்தீட்டப்பட்ட கத்தியினை யொத்து.

மறுசந்திப்பிற்கான
ஆயத்தக்கூறுகள் நெய்து,  
ஒரு விரும்பத்தகாத் தர்க்கமென
விசும்பிக் கிடக்கும் நேசத்தின்
ஆழ் மனங்களை
ஒரு கோப்பைத் தேநீரிலிட்டு
கலக்கி குடிக்கும்
அந்த ஒரு தீர்க்க முடிவினை
பரிசீலனையில் அடைத்துப் பூட்டிவைத்திருப்பதாக
ஒருவர் மாற்றி ஒருவர்
கைப்பட கடிதம் எழுதிய
அந்த ஏகாந்த வேளையில், 
ஒரு காதல்
இசைந்திருக்கிறது தான்இன்னும் இருப்பதாக.

இயலாமையின் தீயில்
அந்த ஏகாந்தவேளை எரியுமுன், 
மீள்வருகைக்கான நேச இணங்கல்
ஒன்றைத்தவிர

யாதொரு நோக்குமற்ற
ஒரு பழைய டைரிக்குறிப்பு அதென
நீங்கள் உரக்கச் சொல்லலாம்  
அல்லது
என்னைப்போல படித்துவிட்டு மூடிவிடலாம்
யாருமறியாது ரகசியமாகவும் கூட!


நன்றி உயிரோசை..

Monday, December 6, 2010

அரேபிய ராசாக்கள் 14..






அமர்ந்த நாற்காலியில் இல்லாத நான்
கண்களை அகல விரித்தபோது
நகரும் படிக்கட்டுகளில்
நின்று கொண்டிருந்தேன்..

அரேபியப் புழுதியை
இதயத்தில் ஒத்தி
சற்று கைகளை நீட்டியபொழுது
ஆகச்சிறந்த நொடி இதுவென
கவனம் உணர்ந்தேன்..

மதியம் உண்கையில்
அம்மாவின் ஈரப்புனகை
சாம்பாரில் இனித்தது..

பின்-மாலைப்பொழுதில்
பிரிவு அறிந்தவர்கள்
சாக்லேட் புன்னகையோடு
சிறகுப்பறவை பறந்ததையும்
அழகுப்பெண் வணக்கத்தையும்
காதுகளில் முத்தம் கொண்டனர்..

அடர்வர்ண காலங்களில்
எனத் தொடங்கப்பட்ட
உரையாடலின் நடுநடுவே
ஈச்சமர வாடையும்
மணல் அலையும்
வந்து வந்து ஒட்டிக்கொள்கிறது..

இரவு உறங்கப் போகையில்
அப்பாவின் விரல்களில்
அன்பை பரிசுத்தமாகப்
பரிச்சயம் கண்டது
உச்சந்தலை..

விடுமுறை தீருமுன்
எப்படியாவது
காதலைச் சொல்லியாக வேண்டும்
கூடப் படுப்பவளிடம்..

பாட்டி தாத்தாவோடு
கதைபேசும் வெண்ணிலாவை
இம்முறையும்
கூட்டிப்போவதாகயில்லை
விமான வாசல்.


நன்றி உயிரோசை..

Monday, November 29, 2010

கடவுள் நேர்முகத்தேர்வில் இருப்பதாகச் சந்தேகிக்கிறார்கள்..!







பிரார்த்தனைக் கூடத்தில்
கூட்டம் கூட்டமாகப்
பிரார்த்திக்கிறார்கள்.

தப்பி ஓடிவந்து கொண்டிருக்கிறேன்
பேரிரைச்சலிலிருந்து.

புகைத்துக்கொண்டே மது அருந்துதல்
கணேசன் சித்தப்பாவுக்கு
மிகப்பிடிப்பதுபோல
தனிமையில் நமஸ்கரிப்பதை
அதிகமாக விரும்புகிறேன்.

கடவுளுடன் பேசுகையில்
கண்களை மூடிக்கொள்ளுதல்
எனக்குப் பிடிப்பதேயில்லை
முடிந்த கலவிக்குப்பின்
முத்தமிடாமல் கிடப்பதைப்போல.

பிரார்த்தனை நேரங்களில்
குழந்தை அழும் சப்தம்
காற்றில் கலந்து வருகிறதெனில்
கடவுள் நமது பிரார்த்தனையைக்
கவனிக்கிறார்
என்ற அர்த்தத்தில் எழுதப்படுவதை
நாளடைவில் வேறொருவன்
மீண்டும் எழுதிவைக்கலாம்
அல்லது
மனப்பூர்வமாக நம்பலாம்.

கடவுள் அல்லாத ஒருவன்
நம்பும்படியாகச் செய்யச் சொல்லும்
பரிகாரங்கள் அனைத்தையும்
கடவுள் அல்லாத நான்
எப்பொழுதுமே ஏற்றுக்கொள்வதில்லை
இப்பொழுதெல்லாம்
கோமதி சித்தி
என்னை அவ்வளவாக இஸ்டப்படுவதில்லை.

தன் மதம்அறியா
விநோதக் கடவுள்
தனக்குப் பசிப்பதாக
என்னிடம் வந்தான்
கடந்த இரவில்
பூத்த கனவில்..!

அதிகாலை தொடங்கித்
தேடிக்கொண்டிருக்கிறேன்
எனக்குப் பிடித்த உணவோடு..

கடவுளைக் கண்டால்
யாராவது அழைத்துவரலாம்
எனது முகவரியில்
நான் மட்டுமே பிரார்த்திக்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன்
கடவுளைப் புறந்தள்ளுதல்
எனது நோக்கமல்ல.


நன்றி உயிரோசை..

Monday, November 22, 2010

வேறொன்றுமில்லை.






வியர்வைப் பிசுபிசுப்பில் கருகித் தகிக்கும்
உலோக அடைப்பான் பயணத்தில் 
நான் அடைந்த நகரம்
எனக்கு மிகப்புதிதாக இருந்தது..

நகர்தலின் அதிர்வு தாளாது
பித்துப்பிடிக்கிறது மனமும் உடலும் ஒருசேர
முதுகுமுன் மார்புகளை சிலாகிக்கும்
அப்பருவப்பெண்ணிடம்..

வலுவற்ற
ஒரு புன்னகையைத் தருவிக்கிறேன்
வழியற்றுத்
தலையில் செருகிக்கொள்கிறாள்..

கவனித்தலில்
சிக்னல் யாசகப் பிள்ளைகளுக்கென
ஒரு தீர்வும் எடுக்க இயலுவதில்லை..

பருவம் எய்க்காத
பெண்ணுக்கு
அடுத்த பேருந்தில்
அமையப்பெறலாம் பிரசவ வலி..

அவசியமில்லை,
காரணங்களைக் கண்டறியுமுன்
நிறுத்தம் வந்துவிடலாம்.

எனது நிறுத்தத்தில்..

ஒரு தேநீர் டம்ளரிலோ
ஒரு சிகரெட் புகையிலோ
ஒரு டாஸ்மாக் முட்டையிலோ
பழகிக் கொள்கிறேன் இந்நகரத்தை.


நன்றி உயிரோசை.

Monday, November 15, 2010

நிராகரிக்கப்பட்ட காகிதங்கள் உதிர்க்கும் மூச்சு..!






பிடிமானங்களற்று
உடைந்து கொண்டிருக்கும் நாட்களில்
பாழ்மண்டப வெளவால்களைப்போல
நடந்து திரிகிறேன்..

காகிதங்களில் அடைபட்டிருக்கும் உயிரை
ஏந்திக்கொண்டு
தெருத்தெருவாய் அலைகையில்
சுவாசம் முட்டுகிறது.

தற்சமயம்
ஒரு எரிமலை துப்பித்தள்ளும்
அடங்காத் தீயில்
மாட்டிக்கொண்ட
ஒரு பூச்சியினைப்போல
நேசிக்கப்படுகிறேன்
உங்களால்..!

முதல் சூரிய உதயம் ஞாபகத்திலில்லை
இக்கடைசி சூரியோதயம் மறப்பதற்கில்லை.


நன்றி உயிரோசை..

Monday, November 8, 2010

படிதல்.







சில காலைகளை
நேரிட நேர்கிறது
பனி இரவின்
செத்த சிகரெட் துண்டுகளோடும்
உடைந்த மதுவாடைக் குவளைகளோடும்

ஒரு பிரியத்தை தெரிவிப்பதற்கு
வாய்க்கப்பெறாத நாட்கள்
தொடர்ந்து ஊசிக்கொண்டேத்
தடயமாகிறது செத்துப்போவதற்கு.

அதிக சிரத்தையுடன்
அந்த அபத்தப் பொழுதின்
படி ஏறி நின்றுகொண்டு
பிரியத்தைச் சொல்லும்போது
எதிர்கொள்வதற்கு அவனோ அவளோ
இல்லாமல் போகின்றனர்.

வதங்கிய மௌனத்துடன்
கணம் துரத்தியடிக்கிறது
தவழ்ந்து கடக்கிறோம்.

சில இரவுகளை
நேரிட நேர்கிறது
வெயில் பகலின்
குரூர மரித்த ஸ்பரிசங்களோடு.


 நன்றி உயிரோசை..

Monday, November 1, 2010

இருப்பாலானது மற்றும் இருப்பிலாலானது..!






காரணங்களற்று இருத்தல்
அல்லது
காரணங்களோடு ஒத்துப்போதல்.

இடை இடையே
எங்கிருந்தோ உதிர்ந்து விழுகின்றன
வினவுகள்.

பலரும் அதில்
அநேகமாகப் பதிலும் கொப்பளித்து விடுகின்றனர்
அவை சமாளிப்பாகவும் இருந்து தொலைகிறது
ஆனால்..
அதில் பலரும்
அதனை சுட்டிக்காட்டத் தயங்குகின்றனர்.

நிரம்பத் தழும்பிய நரம்புகளுடன் சிறு இலையொன்று
காற்றில் முறிபடுவது
எப்பொழுதும் நடைபெறும் நிகழ்வே !

சில சமயங்களில்
கூர்ந்து உள்புக முற்படுவதில்
அலாதிப்பிரியம் எனக்கு..!


நன்றி உயிரோசை..

Monday, October 25, 2010

வெற்றுடல் தேவதைகள்..






முகங்களற்ற
நிழல்களற்ற
மழை பூத்த சாலையில்
இன்னல் தனிமையைத் தூவிச் செல்வதற்கென
அமையப்பெறுகிறது அவனுக்கு
அம்மதியப்பயணம்..

தலை நொடித்து கற்கள் கொஞ்சத்தை 
உள்ளங்கை தனில் அடுக்கிக்கொண்டு
சாலையின் கடைசி வளைவில்
கால் மடித்துக் கொள்கிறான்.

கற்கள் ஒவ்வொன்றாகத் தொலைபடுகிறது..

தனித்த கைகளாகிய நிலையினில்
ஒரு அமைதியை அடையாளப் படுத்துகிறான்,
அமைதி அதன்பொருட்டு
அமைதியைத் தருவிக்கிறது..!

கன்னம்வழி வளர்ந்த நீரில்
கடுமையாக உப்பின் வாசம்..

காற்று கொணர்ந்த இசையில்
உப்பின் அடர்த்தி குறையக் குறைய..

பதில்களற்ற எல்லா மடல்களும்
காகிதங்களாகத் தோற்றுப்போகிறது.


நன்றி உயிரோசை..

Monday, October 18, 2010

சுயம் தொலைதல் அல்லது தொலைத்தல்..







முழு நீலக்கடலில் கோடிநட்சத்திரங்கள்
அம்மணமாய் ஆடித்திரிவதை
நாய்கள் குரைக்கும் நடுநிசியில்
வோட்கா பாட்டிலிலும்
ஆறாம் விரலிலும்
ரகசியமாய் வழித்துக்கொண்டிருந்தேன்..!

முடியாது நீண்டிருந்த அவ்விரவின்
மற்றொரு கனவில்
தடித்த ஸ்தனக்காரி வற்புறித்திய வண்ணம்  
வருத்தி பின்தொடர்ந்திருந்தாள்..

பின்னொரு கறுத்த ஆடு
தலையற்று முண்டமாகி
தடாகத்தில் சிவத்த இரத்தத்தை
வழியவிட்டபடி செத்துக் கொண்டிருந்தது..

கனவுகள் நிறைய நிறைய பேசியதோடே..

ஆழ்வானத்தின் சிறுதுளையில்
மழிந்து மாய்ந்துகொண்டன.

அந்த ஒரு இரவு
விடிந்தபாடில்லை
இன்னும்...!!      



நன்றி உயிரோசை..  

Wednesday, September 22, 2010

நிழலென வளரும் மரம்..!


சக்கரங்கள் சுழலும் தண்டவாளங்களில்
உருளும் இசையென
மனம் பிரள்கிறது,
நிரம்பிய குடம் உடைந்து
பூ உதிர்ந்த தருணம்..!

குளுக்கோஸ் குழல் வழி
தெம்பூட்டப்படுபவளின்
ஆழக்கண்கள் பூவை நனைக்க,
அவள் புருவங்களுக்கு மத்தியில்
உதடுகள் உப்பி நீர் பதிக்கிறான்
பூ செய்தவன்..!

புதுப் புன்னகை ஒளி
வெளியெங்கும்
நிழலென வளரும் மரமாய் !

அழுது அழும் பூவுக்குத்
தேவதைகள் கதைசொல்லத்
தழும்பும் சமயம்,

நான் கொண்டுசென்ற பழக்கூடை
சிறு சிறு வர்ண நட்சத்திரங்களை
சிறகசைத்து தருவதாகவும்
அவற்றைப் பத்திரப்படுத்தி வைக்குமாறும்
அக்குழந்தைப்பூவே சைகை செய்கிறது
பிரசவஅறை ததும்ப..!


நன்றி உயிரோசை..