Tuesday, January 10, 2012

உயிரோசை கவிதைகள்..







நிசப்தம்

என் இரவு மிருகத்தின்
பகல் நாவினை
ருசித்து உண்கிறாய் நீ

கூரை வழி சொட்டும் மழையென
வழிந்து கொண்டிருக்கிறது துயரம்

என் ஒரு துண்டு வானத்தின்
முழு கடலையும் கைப்பற்றி விடுகிறாய் நீ

பிரிவின் சாத்தியங்கள்
இனி எந்தவொரு கோடையிலும்
நம்மில் இல்லை.



நானும் அவர்களும்

கடவுள் வருவதாகச் சொன்ன இரவில்
பால்யன் ஒருவன் மூத்திரம் பெய்கிறான்

தான்யாவின் காதுமடல் மச்சம்
எழுதப்பட்டிருந்தது முன்பொரு காலத்தே
கீதாவின் மருதாணிக் கைகளில்

நான் நானாகித் தொலைத்த தருணம்

பெரு மழை தீர்ந்த கனவில்
வயலின் மீட்டிக்கொண்டிருந்தான் கடவுள்.







நன்றி உயிரோசை




Monday, January 2, 2012

உயிரோசை கவிதைகள்..








ஸ்பரிசம்

கோடையின்
செந்நிற கால்கள் அசையும்
நிலத்தில் யாதொரு பிடியுமற்று
நிற்கிறேன்,
உன் பனி கைகளைத் தந்துதவு
இப்-பிள்ளை வாழட்டும்
இன்னும் சிறிது தொலைவு.  


அடையாளம்

துளி,
கடலினும் பெரிதாகையில்
சிறகை விடுத்து பறவையாகிறாய்
பின்தொடரும் அலகு அல்ல
இவ்இறகு,

நினைவின் தடயம் !


நிகழ்ந்த மரணத்தின் காரணங்களாக
1) புறக்கணிப்பின் அழியாத் தடம்
2) அவமானத்தின் அந்திமம்
3) இழப்பின் பெரு ரணம்    

கடவுளெனும் பெயரில் சாத்தான்
சாத்தானெனும்  பெயரில் கடவுள்

எப்படியும் நிகழலாம்
எப்படியும் நிகழ்த்தப்படலாம்
இறப்பு.


நன்றி உயிரோசை..




Saturday, December 31, 2011

தாகம்





அலைகடலில் மிதக்கும்
நிலவின் வெள்ளொளியில் முகம் காணும்
இரவை கடத்தி படுக்கையில் உலர்த்துவதாய்
கண்ட அந்த அபத்தக் கனவை
சாமத்தின் வாசலில் குரைக்கும்
தெருநாயின் காது திருகி சொல்கிறேன்.

பின்
பின் மதியப் பூனையாய்
அவள் முலையருந்த,
வேட்கை கனலின் விரல்கள் மீது
திரும்புகிறேன்.

கொலுசு கால்களின்
இசை வழியே நிரம்புகிறது
அன்பின் ஊற்று.

Tuesday, December 27, 2011

மழை இரவில்







மழையோய்ந்த முன் இரவின்
விடியலில்
சொட்டிக்கொண்டிருக்கும் துளிகளென
வசீகரிக்கிறாய்.

தெளிந்த நீரோடையில்
ஒரு இலை உலவுவதைப்போல
அத்தனை அழகியலாக
என்னுடல் பற்றுகிறாய்.

அன்பின் ஆயிரங்கரங்கள் கொண்டு
அத்தனை மெலிதாய் புன்னகைக்கிறாய்.

புன்னகைக்கும் போதே
இனியும் கோடை வருமென்கிறாய்.

ஒரு சிறு கைப்பிடியினைச் சுற்றும்
கொடியென தன்னை
இறுகப் பற்றிக்கொள் என்கிறாய்.

கோடையொன்றும்
அத்தனை வெம்மையோ
அத்தனை தனிமையோ அல்லவென
நம்பும்படியாகச் செய்துவிடுகிறாய்.


இன்றிரவும் மழை பொழியுமாயின்
அதனின் சில துளிகளை
உன் கைக்குட்டையில் கோர்த்து
பின் வரும் கோடையில்
உலர்த்தலாமென நிசப்தமாகிறேன்.


நன்றி உயிரோசை..


Tuesday, November 22, 2011

இயலாமை






அன்பு ததும்ப அழைப்பதாய் அழைக்கிறாய்
வரவேற்பறையில் அமர்ந்து விவாதிப்போமென்கிறாய்
ஒரே ஒரு நாற்காலியே அங்கு போடப்பட்டிருக்கிறது
அமர்ந்து கொள்கிறாய்
குவளை நிறைய அவமானத்தை தருகிறாய்
தேநீரெனப் பருகச் சொல்லுகிறாய்
நீ மட்டுமே பேசிக்கொண்டிருகிறாய்
'ம்' சொல் என்கிறாய்
நல்லது என்கிறேன்
குரூரமாய் புன்னகைக்கிறாய்
நடந்தவைகளை மறந்து விடுமாறு கட்டளையிடுகிறாய்
நடந்து கொண்டிருப்பவைகளின் குற்றவுணர்ச்சி ஏதுமின்றி
பின் வெளியேறுமாறு உக்கிரமாய் கண்ணசைக்கிறாய்
இறைந்து கிடக்கும் அவமானத்தின் நிழலை இறுக வாரி
கழுத்து திருகி கொன்று விடலாமென குனிகிறேன்
உனது முதலாளித்துவம்
எனது முதுகில் ஓங்கி ஒரு போடு போடுகிறது.


நன்றி உயிரோசை..


Monday, November 14, 2011

திரும்புதல்




உனது எல்லா விடுபடுதலிலும்
எனது பெருங்காதலே
மீச்சிறுபுள்ளியென
ஆகச்சிறந்த கவிதையொன்றை
விமரிசையாகக் கொண்டாடுகிறாள்
நம் இருவருக்குமான தோழி.


நன்றி உயிரோசை..

Monday, October 24, 2011

அவர்கள்







உன் இருள் நிழலில்
மின்னிப் பறக்கிறது
என் தூய ஆவி.

இருப்பது போல்
இல்லாமலிருத்தலில்
இருந்ததை விட
அத்தனை வெளிச்சம்
அத்தனை அடர்த்தி
அத்தனை மென்மை.

கானகம் நுழைந்து
காணாமல் போவதும்
திரும்பி வருதலென்பதும்
ஒரே மாதிரியான நிகழ்வே
அல்லது
"அல்லது" அல்லதாகவே இருக்கட்டும்.

நீ சொல்வது போல்
நான் அந்நதியென
இல்லையெனினும்
நாளைய மழையின்
முதல் துளியாகவே
பிரிகிறேன்.

பச்சைப் புற்களின் நடுவே
நல்ல பாம்பொன்று
சுருண்டு கிடக்கிறது.
நான் அதை நீ என்கிறேன்.
நீ அதை நான் என்கிறாய்.

அது அதுவேயில்லை
வேறொன்றென சொல்லிப் போகிறார்கள்
கடக்கும் இவர்கள்.





நன்றி உயிரோசை..


 

Friday, September 16, 2011

நிலைப்பாடு




சொற்களின் காட்டுக்குள்
பெருந்தீயாகப் பரவுகிறாய்
உனது இருபெனும் மாயையினை
நிலைப்படுத்த.

பின்னொரு பொழுதினில்
தனிமையின் பெருங்கடலை
ஓவியமாக்க முயற்சிக்கிறாய்
எரியும் ஒற்றை அகல் வரைந்து.

முன்னெப்பொழுதோ
பெய்யாதிருந்த  மழை
ருத்ரதாண்டவமென
தீபத்தை குரூரமாக விழுங்கிப்போகும்
இவ்வேளையினில்

மேலும்
அவனைப் பற்றி விரிவாக
உரையாட ஏதுமில்லை.


நன்றி உயிரோசை..

Wednesday, July 13, 2011

பிறகு




தற்கொலை செய்து
இரு தினங்களுக்குப் பிறகு
மிக அழகாக ஒப்பனை செய்துகொண்டு
ஒரு மெல்லிய புன்னகையோடு
வந்தமர்கிறாள் அபர்ணா.

அந்த அபத்த கனவையும்
அந்த வதையுள்ள ஏமாற்றங்களையும்
அந்த முகமூடி மனிதர்களையும்
அந்த துரோக ஊசியின் கூர்முனையையும்
அந்த நம்பிக்கையின் உடைந்த சில்லுகளையும்
அத்தனை நிதானமாகப் பேசத்துவங்குகிறாள்.

பிறகு இருவருக்குமாக
நல்ல சுவையுடைய தேநீரை
தயார் செய்கிறாள்.

நான் என் கனவின் ஓட்டைகளை
சரி செய்வது பற்றி
தீவிரமாக எண்ணத் துவங்குகிறேன்.

சலனமேதுமின்றி அவள்
என் விரல்களை கோர்த்தவாறு
தான் செத்துப் போயிருந்த தன் கனவை
சின்னச் சின்னத் துண்டுகளாக்கி
தேநீரோடு சேர்த்துப் பருகுகிறாள்.

நானும்
நானெனும் பிம்பமும்
கொஞ்சம் கொஞ்சமாக
உடைந்து சரிகிறோம்.

Monday, July 4, 2011

பெருவனம்







பெய்யாத மழையின் நிலமெங்கும்
பிரிவின் வாதை
என்கிறேன் நான்.
அது
அன்பின் வதை, 
பேய்மழையின் நிலமெங்கும் நீ
என்கிறாள் அவள்!


நன்றி உயிரோசை..