Monday, May 30, 2011

தோல்வியின் பெருவெளி !







அச்சொல் விழுந்தொடிந்த கணம், 
நதியென அலையும் நினைவின்
பல்லக்கில் ! 

முன்னெப்பொழுதுமில்லா
அடங்கா வெறுமையுடன்
வறுமை படர்ந்த விழிகளென
பனித்திருக்கிறது வெளிச்சம்.

பிரிவின் உடைந்த நாற்காலியில்
இருத்தல் மெல்ல நகர்கிறது
காற்றில் ஒரு சிறு இலையினையொத்து..

என் தீக்கனவில்
அவளின் புது வீட்டை
பழைய சாக்கடைப்
பின்தொடர்வதாய்
எழுதி வைக்கிறீர்கள் என்னை..!

தோல்வியின் வெளியெங்கும்
எனது ஒற்றைக் காதல்.


நன்றி உயிரோசை..


Monday, May 23, 2011

அரேபிய ராசாக்கள்.. 15







புறக்கணிப்பின் நிறங்கள்
படிந்து கிடக்கின்றன
இப்பாலையின் பெருவெளியெங்கும்
கானலைப்போல.

கதைகள் பல நிரம்பியிருக்கும்

இம்முகங்களின் பார்வை கானகத்தில்
ஒரு வயோதிகனின் இருப்பென
படர்ந்திருக்கிறது
வலியென்பது.
நிழல்கள் அனைத்தும்
மரித்த பிம்பங்களென
ஒட்டிக்கொள்கின்றன
அறையின் இரவினிடத்து..!

தெவங்கி தெவங்கி அழும்
அப்புதியவன்
அறிந்திருக்க வாய்ப்பில்லை,

நாட்கள் திங்கும்
இத்தலைகள்,  
இயலாமையின் உச்சத்தில்
பிறகெப்பொழுதும்
வெறுப்பையே தன்னிடத்து
நிலைப்படுத்தியிருக்கிறதென்பதை.


நன்றி உயிரோசை..

Tuesday, May 17, 2011

அனகாவும் மழையும் !







இந்நாட்களில்
எவருக்கும் பெய்யாத மழையை
தன் பிளாஸ்டிக் செடிகளுக்குப்
பெய் பெய்யென
அறையிலிருந்த மழை சித்திரத்தை
தட்டித் தட்டிக் கொண்டிருந்தாள் அனகா!

அலுவல் முடித்த களைப்பில்
வீடு சேர்ந்த அம்மாவின்
கைகளில் அகப்பட்ட மழை
அனகாவின் கண்களிலிருந்து
சுரந்து தரப்பட்டது!


நன்றி உயிரோசை..

Tuesday, April 5, 2011

அதிர்வு



எறும்பு மொய்க்கும்
காலி தேநீர் டம்ளரில்
சுவை மிச்சமிருக்கிறது.

மேகத்தின் கால்களில்
ஈரம்
மழை குறிப்பெழுதுகிறது.

ஒரு கூட்ட நெரிசலில்
ஏதோவொரு அவன்
ஏதோ ஒரு அவளைத்
தேடுகிறான் அல்லது
தொலைத்துவிடுகிறான்.

தனித்துக் கிடக்கும் பாறையில்
நத்தையொன்று மெல்ல
இடம் பெயர்கிறது.

பக்கத்து காற்று
தூரத்திலேதோவொரு கிளையை
உடைத்து வந்திருக்கிறது.

சிறுவர்கள் இரண்டுபேர்
மணல்வீடு கட்டித்தீரும் தருவாயில்
தங்கைப் பாப்பாக்களை
அழைத்துக் கொண்டாடுகின்றனர்.

கடலில் அலை
இன்னும் மிச்சமிருந்தது.





நன்றி உயிரோசை..

Monday, March 28, 2011

அதற்குப் பின்னும்






உன்னை அல்லது
உங்களை அறியாத
பெருநகரத்தில்
கொசு ஒன்று செத்து
இரத்தம் புறங்கையில்
வெறுமெனே காய்ந்து கொண்டிருந்தது.

மின்வெட்டின் மிச்ச இரவு
விழித்துத் தீர்ந்தது.

கார்பரேட் கம்பெனி வேலைக்கென
அடுக்குமாடிக் குடியிருப்ப்பு
விரைந்து நகர்ந்தது.

சிக்னலில்
ஒரு அரைக்குருடி
பிள்ளைக்குப் பால் கொடுத்தபடியே
யாசித்திருந்தாள்.

இரு சக்கரனொருவனின்
கெல்மெட்டில்
மற்றொரு ஈ
ஒன்றுக்குப் போனதை
தெருநாயொன்று கண்டு
வள்  வள்ளென்றது.

நான் வழக்கம்போல
டீக்கடையொன்றில்
அத்தியாவசியமான
தற்கொலைச் செய்தியை
தினசரியில் சுவைத்துத் தீர்த்தேன்.


நன்றி உயிரோசை..


Tuesday, March 15, 2011

புறக்கணிப்பு







ஒரு அற்ப தருணமென
விலகுகிறேன்
உனது பெருங்கூச்சலிடமிருந்து.

மௌனத்தின் ஆயிரங்காதுகளை
சாதுர்யமாக்கும் இருப்பிலல்ல
இந்த ஒற்றை இதயம்.


நன்றி உயிரோசை..


Tuesday, March 8, 2011

அறிவிப்பில்லா விடைபெறல்








ஒரு இருள்சூழ்ந்த இரவில்
எஞ்சிப்போன
ஒரு கெட்ட சொப்பனம்தான்
இந்த துர்செய்தி.

அகாலத்தின் படிக்கட்டுகளிலிருந்து
மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும்
அதன் சிவந்த கண்களில்
விடியலற்ற ஒரு பகல்

நகக்கண் அழுக்கைப்போல
துல்லியமாகத்
தன் இருப்பைத் தெரியப்படுத்துகிறது.

ஒரு மரணச்சம்பவத்தின்
அசை
இதனைக் குரூரமானதென்பதை
அவன்
இதற்குமுன் அறிந்திருக்கவில்லை.

ஒரு விடியலற்றப் பகலுக்காகவே
விழித்திருக்கிறான்
அவன்.

நன்றி உயிரோசை..


Monday, February 28, 2011

வனம்







ஒரு பசித்த மிருகத்தை
தொட்டுத் தடவுதல்
எத்தனை அபத்தமோ,
அந்த மாதிரியாக நிகழ்கிறது
எமது இரவின்
புணர்தல் வேட்கை.


நன்றி உயிரோசை..


Tuesday, February 22, 2011

தோழமையின் ஆல்பம்




ஒரு வண்ணத்துப்பூச்சியின்
மரணம் பாதித்ததிர்ந்த
மழலையென நகர்கிறது
தோழியிடம் சொல்லத்தவிர்த்த
எனதன்பு.

நாளையும் வருகிறாள்
எல்லா வடிவிலும்
தனதன்பைத் திரும்பத் திரும்ப
என்னிடம் உமிழ்ந்துகொண்டே
திரும்பிவிடுகிறாள்.

நன்றி உயிரோசை..

Friday, February 18, 2011

நிக்கோடினை உலர்த்திய புன்னகை







ஒரு பட்டாம்பூச்சிக்கு
துப்பட்டா சுற்றியது
மாதிரி இருந்தாள்
அந்தப் பள்ளிச் சிறுமி.

அவள் பென்சிலும்
ரூல்ட் பேப்பரும்
வாங்கிச் செல்லும் வரை
நிக்கோடினுக்குத் தீயிடாது
நிதானித்திருந்தேன்.

பள்ளி காம்பவுண்டினுள்
நுழைந்த பின்னான
மூன்றாவது பாதத்தில்
திரும்பியவள்
ஒரு குட்டிப் புன்னகையை
வீசியெறிகிறாள்! 



நன்றி இந்த வார ஆனந்தவிகடன்.