Monday, March 28, 2011

அதற்குப் பின்னும்






உன்னை அல்லது
உங்களை அறியாத
பெருநகரத்தில்
கொசு ஒன்று செத்து
இரத்தம் புறங்கையில்
வெறுமெனே காய்ந்து கொண்டிருந்தது.

மின்வெட்டின் மிச்ச இரவு
விழித்துத் தீர்ந்தது.

கார்பரேட் கம்பெனி வேலைக்கென
அடுக்குமாடிக் குடியிருப்ப்பு
விரைந்து நகர்ந்தது.

சிக்னலில்
ஒரு அரைக்குருடி
பிள்ளைக்குப் பால் கொடுத்தபடியே
யாசித்திருந்தாள்.

இரு சக்கரனொருவனின்
கெல்மெட்டில்
மற்றொரு ஈ
ஒன்றுக்குப் போனதை
தெருநாயொன்று கண்டு
வள்  வள்ளென்றது.

நான் வழக்கம்போல
டீக்கடையொன்றில்
அத்தியாவசியமான
தற்கொலைச் செய்தியை
தினசரியில் சுவைத்துத் தீர்த்தேன்.


நன்றி உயிரோசை..


Tuesday, March 15, 2011

புறக்கணிப்பு







ஒரு அற்ப தருணமென
விலகுகிறேன்
உனது பெருங்கூச்சலிடமிருந்து.

மௌனத்தின் ஆயிரங்காதுகளை
சாதுர்யமாக்கும் இருப்பிலல்ல
இந்த ஒற்றை இதயம்.


நன்றி உயிரோசை..


Tuesday, March 8, 2011

அறிவிப்பில்லா விடைபெறல்








ஒரு இருள்சூழ்ந்த இரவில்
எஞ்சிப்போன
ஒரு கெட்ட சொப்பனம்தான்
இந்த துர்செய்தி.

அகாலத்தின் படிக்கட்டுகளிலிருந்து
மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும்
அதன் சிவந்த கண்களில்
விடியலற்ற ஒரு பகல்

நகக்கண் அழுக்கைப்போல
துல்லியமாகத்
தன் இருப்பைத் தெரியப்படுத்துகிறது.

ஒரு மரணச்சம்பவத்தின்
அசை
இதனைக் குரூரமானதென்பதை
அவன்
இதற்குமுன் அறிந்திருக்கவில்லை.

ஒரு விடியலற்றப் பகலுக்காகவே
விழித்திருக்கிறான்
அவன்.

நன்றி உயிரோசை..


Monday, February 28, 2011

வனம்







ஒரு பசித்த மிருகத்தை
தொட்டுத் தடவுதல்
எத்தனை அபத்தமோ,
அந்த மாதிரியாக நிகழ்கிறது
எமது இரவின்
புணர்தல் வேட்கை.


நன்றி உயிரோசை..


Tuesday, February 22, 2011

தோழமையின் ஆல்பம்




ஒரு வண்ணத்துப்பூச்சியின்
மரணம் பாதித்ததிர்ந்த
மழலையென நகர்கிறது
தோழியிடம் சொல்லத்தவிர்த்த
எனதன்பு.

நாளையும் வருகிறாள்
எல்லா வடிவிலும்
தனதன்பைத் திரும்பத் திரும்ப
என்னிடம் உமிழ்ந்துகொண்டே
திரும்பிவிடுகிறாள்.

நன்றி உயிரோசை..

Friday, February 18, 2011

நிக்கோடினை உலர்த்திய புன்னகை







ஒரு பட்டாம்பூச்சிக்கு
துப்பட்டா சுற்றியது
மாதிரி இருந்தாள்
அந்தப் பள்ளிச் சிறுமி.

அவள் பென்சிலும்
ரூல்ட் பேப்பரும்
வாங்கிச் செல்லும் வரை
நிக்கோடினுக்குத் தீயிடாது
நிதானித்திருந்தேன்.

பள்ளி காம்பவுண்டினுள்
நுழைந்த பின்னான
மூன்றாவது பாதத்தில்
திரும்பியவள்
ஒரு குட்டிப் புன்னகையை
வீசியெறிகிறாள்! 



நன்றி இந்த வார ஆனந்தவிகடன்.  

Tuesday, February 8, 2011

மாய வலை







பல ஆயிரந்துண்டுகளாக
வெட்டி வீசப்பட்ட
நிலாவை நட்சத்திரங்களாக்க
சந்தர்ப்பம் தேடுபவளாய்
எனது பெரிய பெண்குழந்தையும்

பல்லாயிர  நட்சத்திரப்புள்ளிகளை
ஒற்றை நிலவாக்க முயல்பவளாய்
என் இளைய மகளும்

ஒரு புரிந்துகொள்ளாமையின்
அபத்த இரவில்
கக்கூஸை மூடிவிட்டு
அழத்தொடங்குகிறேன்.

நன்றி உயிரோசை..





Sunday, February 6, 2011

நகரத்தைப் புணர்தல்






டிராபிக் நேரத்து
ஸ்கூட்டிப் பெண்ணின் 
டைட் பேண்டில்
தளர்ந்து கொண்டிருந்தது
எனதுப் பெருநகரத்தின்
வெறுமை.

Tuesday, February 1, 2011

மௌனத்தின் நிழல்




மௌனத்தின் மரணத்தை
என் கனவின் பெருவனத்தில்
அனாயாசமாகப் புகுந்து
ஒரு மரம் ஏறும் அணிலைப்போல
வெகுவிமரிசையாக கொண்டாடுகிறாள்.

ஒரு மயான நிசப்தத்தில்
ஒரு நதியின் சப்தம்
கலவுவதாய்
இரவின் நிழலைப் படிக்கிறேன்..


ஒரு சிறு புன்னகையை
எழுத வார்த்தைகளற்று
நொடிகிறேன்..! 


நன்றி உயிரோசை..



Wednesday, January 12, 2011

துயர்பறவையின் உடைந்த சிறகு..!






பல்லி விழுந்த பாலெனப்
பருகத் தரப்படுகிறது
கோப்பை மௌனம்.

குறியீடுகள் விழுங்கிய
பாம்பென பாறையென
விம்மித் தும்முகிறது இதயம்.

உச்சபட்ச நிராகரிப்பின் கசப்பில்..

வரைபடத்தின் முனைகள் மடக்கி
கப்பலென செய்து
பால்யத்தில் மிதக்கலாம்
எனப் புலம்புகிறாள்
மென்று துப்பிய நாவும்
சிவந்த கண்களும்
வீங்கிய கன்னங்களுமாய்
தோல்விப் பெண்..!

நன்றி உயிரோசை..