எதற்காக ஆனந்தன்
தற்கொலை செய்துகொண்டான்?
இன்று மதியம்
இருவருமே
சேர்ந்துதான் உணவருந்தினோம்
கோல்டுபிளாக் புகைத்துக்கொண்டே
“ஆமென்” (டிவைன்
காமெடி)
என்ற சமீபத்திய
மலையாளப்படம் குறித்து
கையை அசைத்து
அசைத்து
கதையை அவன்
அவ்வளவு சிலாகித்துப் பேசியபோது
நான் நிஜமாகவே
அத்தனை அத்தனை
சந்தோசத்திற்குள்
சென்றிருந்தேன்
எதற்காக ஆனந்தன்
தற்கொலை செய்துகொண்டான்?
மறுபடியும்
புகைத்துக்கொண்டும் பேசிக்கொண்டும்
அவன் வீடுவரை
நடந்தேதான் சென்றோம்
நடுநடுவே
நீ சந்தோசமாக
இருக்கிறாயா என்றான்
அவன்
கையைப்பிடித்துக்கொண்டேன்
சிரித்தான், உன்
சிரிப்பின் உருவம்
குழந்தைகளுக்குரியதுடா!
என்றேன்
அதற்கும்
சிரித்து வைத்தான்
அழகாய் இருந்தது
எதற்காக ஆனந்தன்
தற்கொலை செய்துகொண்டான்?
வழியில்
வாங்கிவந்த பால்பாக்கெட்டின் ஓரத்தை
சிசர் கொண்டு
மென்மையாக கத்தரித்து
அவனது
செல்லப்பூனைக்கு நிதானமாக ஊற்றிக்கொடுத்தான்
தனிமையை
நெஞ்சுருக காதலிப்பதாகவும்
இன்னும் படிக்க
வேண்டியப் புத்தகம்
நிறைய மீதம்
இருப்பதாகவும் சொல்லிக்கொண்டான்
மீண்டும்
பார்க்கலாமென்று
நானும் வீடு
திரும்பிவிட்டேன்
எதற்காக ஆனந்தன்
தற்கொலை செய்துகொண்டான்?
ஆனந்தன்
அழைத்திருந்திருக்கிறான்
23 மிஸ்ட் கால்ஸ்
கிடைக்கிறது
மகிழ்ச்சியின்
களைப்பில்
நான் ஏன்
இப்படித் தூங்கிப்போனேன்
ஆனந்தன்
எதற்காக தற்கொலை
செய்துகொண்டான்?
மழை
வலுவாகப்பெய்கிறது
இடுகாட்டிலிருந்து
திரும்பிக்கொண்டிருக்கிறேன்
ஆனந்தன் தற்கொலை
செய்துகொண்டான்
No comments:
Post a Comment