Showing posts with label கல்கி. Show all posts
Showing posts with label கல்கி. Show all posts

Saturday, April 27, 2013

ராணி புத்தி ஸ்வாதீனம் அற்றுப்போனது இப்படித்தான்




குகையினுள் அமர்ந்திருந்தேன்
எங்கிருந்தோ வந்தாய்
வெளிச்சம் வேண்டி சிறிது தீ பற்றவைத்தாய்
இதமாயிருந்தது கதகதப்பு
இந்நாள்வரை தான்மட்டுமே இவ்வனத்தினுள்
வாழ்ந்துக்கொண்டிருப்பவனென நினைத்திருந்தேன் என்றேன்
கோபத்தின் சாயலுடன்

உனக்குத் தெரியுமா
நீ இங்கு வந்தடைந்தது
ஒருஉக்கிரமான கோடை நாளென்கிறாய்
மேலும்
நீ உள்நுழைய வாசலைத் திறந்தவளே
தான்தானென்கிறாய்
எந்தச் சலனமுமின்றி
எந்தக் கௌரவமும் இன்றி
நெடுநாளாய் இங்கிருக்கும் ராணியாகிய நீ

கதகதப்பும் வெளிச்சமும் புணர்ந்து சுடர்ந்திருந்த தீ
பெரும் பிரகாசத்துடன்
வனம் முழுதும் ததும்பியது

என்னை அது ராஜாவுக்குரிய அலங்காரத்துடன்
கொண்டாட்டத்துடன்
கர்வத்துடன்
நதி குளிக்கக் கரம்பிடித்து அழைத்துச் சென்றது
சுழலில் சிக்கி மரித்த ராஜாவின் சடலம் தேடி
ஏழேழு ஜென்மமாய் அலையும் வனத்தின் மீதுதான்
இப்பொழுது புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்
நீங்கள்

***

நன்றி கல்கி இதழ் ( 21/ஏப்ரல்/2013 )



Friday, January 25, 2013

அதிர்வு



பெயரிடாப் பறவைகள் இரண்டின்
வீட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது
மழை நனைந்த நமது காலம்

சலசலத்து ஓடும் இம்மணல்நதியில்
கொஞ்சம் உயிர் அள்ளிப்பருக
வந்தேன் என்கிறாய்

என்னிடமிருந்த எல்லா ஆயுதங்களையும்
தூக்கி வீசிவிட்டு
அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டேன் உன்னை

நன்றி கல்கி இதழ் (06/01/2013)



Thursday, January 10, 2013

கதறல்





ஏலியனொன்று உன் வீட்டுக்கதவைத் தட்டுகிறது
அகாலம் என்றும் பாராது

மழை பிசாசு நீயென்பது
அதுஅறிந்திருக்க வாய்ப்பில்லைதான்,
உன் பின்னங்கால்வரை பூத்திருக்கும்
கூந்தல் விரித்து ஆடு

அன்பின் ஆலாபனைக் கண்டு பைத்தியம் பிடித்து
மரித்துப் போகட்டும் அது

*

நன்றி கல்கி இதழ் (06/01/2013)




Thursday, December 6, 2012

அரேபிய ராசாக்கள் 26





26.
பேசும் பொம்மைகள் வாங்கி வருவதாக 
கடல்களுக்கு அப்பாலிருந்து கொஞ்சியவனிடம் 
மழைக் கிழமையின் ஈரத்தை தெளிக்கிறாள் 
அனன்யா 

தனது முறையில் வழக்கமாய் 
கோடையை சிலாகித்துத் தேயும் 
அனன்யா அம்மா 
எப்பொழுதும் போலல்லாத மௌனியாகிறாள் 

கொஞ்சம் கொஞ்சமாய் 
விடுதலையை இரைஞ்சத் துவங்கியபடி 
பெருங்கானல் படரும் உடைந்த உதடுகளோடு 
அணைக்கப்படுகிறது ஈரப் பார்வைகளுடைய 
விளக்கு

***

27.
ஈரத்தின் கதகதப்பு அள்ளும் வாஞ்சையுடனான 
சப்தம் அற்ற உன் மென்பார்வை 
சிதறிக் கிடக்கும் ஈச்சம்பழ மணத்தில்
அடர்துயர் மோதி துரத்தப்படுகிறேன்
 
மூச்சிரைக்க 
முத்தத்தின் கட்டாயம் 
அல்லது
நிஜத்தின் புனிதத்தில் சரிய விழைகிறேன் 

உனது தொலைகுரல் மீள்கையில் 
நினைவில் வற்றாத நதி மீது 
சிறு பிள்ளையின் மழையென
பூமிக்கும் வானத்துக்குமாய் துள்ளித் துள்ளிக் குதிக்கும் 
எனது முழுநீள வர்ணக் கடல் 

***

28.
கிழிபடும் கிழமைகளருகே நின்று 
விடுதலையை வாசித்துக் காட்டுதல்
கூடும் கிழமையில் 

பொருட்களின் பட்டியலை வாசித்துவிட்டு 
அமைதியாக நகரலாம் 
ஈட்டுதலின் பொருட்டு தவித்து இருத்தலென்ன 
அத்தனை சுலபமாவென

***

நன்றி கல்கி 

Thursday, August 30, 2012

அசுத்த சமாதானம்






பிள்ளை மொழி பேசுபவளின்
உதடுகளில்
ஒரு பொழுதும் அல்லாத
பனி நடுக்கமாய் 
பிரிவின் உடைந்த உடைந்த சொற்கள்

இறுதியாக
பிறிதொரு பொழுதில் சந்திக்கலாம் என்கிறாள், 
அசுத்த சமாதானம்
ஞாபகப் பிழையாய்
உயிர் உண்ணும் என்கிறேன்

கேவல்கள் 
ஸ்பரிசத்தின் இசையாய்
நேசத்துள் உருள்கிறது!

***

நன்றி கல்கி மற்றும் வெயில்நதி சிற்றிதழ்