Showing posts with label வல்லினம். Show all posts
Showing posts with label வல்லினம். Show all posts

Saturday, February 16, 2013

ஆராதனா எனும் பேய் 38



38.

இருண்ட மழையின் சொட்டுகள்
படர்ந்து ஆடும் பைத்திய அகத்தில்
சுடர் பெருகும் இச்சாமம் ஒழிய,
நீ விட்டுப்போன நிலத்தை
தற்சமயம்
பதிமூன்றாவது மாத்திரையோடு
விழுங்கிக் கொண்டிருக்கிறேன் ஆராதனா
 
ஜன்னல் கதவுகளை அடைத்தாயிற்று
கண்கள் உருள்கிறது..

சொல்ல மறந்துவிட்டேன் ஆராதனா
நாளை
"ஸ்போர்ட்ஸ்டேய்"க்கு அழைத்திருக்கிறாள்
ஆறு வயது நம் மகிழ்மொழி
உறங்கும் முன் அவளுக்கு
அம்மா, சாமி கதை சொல்லியிருந்தேன்
இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம்
(உன்னை,உன்னுடைய முத்தமும்..)

***


39.
முன்பொரு
பெருமழைக் காலம் ஒன்றின்
அந்தி சாயும்வேளையின் பட்டர்பிளைக்கு
நான் முழுதும் ஒப்புக்கொடுத்த என்னை
மீட்டெடுக்கும் போலுள்ள உன் அருகிருப்பினை
வரையத் துவங்கியிருக்கும்
இந்த கலர் இரவில்

சலனமற்றிருந்த எனது பெருநதி நீந்திச் செழிப்பது
கண்டும் ஏன்

மௌனக் கானகத்தின் பச்சையத்தில்
நீயொரு
சிறு பிள்ளையாய் குதித்துக் குதித்து
விளாயாட்டுக் காட்டுகிறாய்
ஆராதனா!

***


40.
கூடடையா தாய்ப்பறவையின்
அலகில் விசும்பும்
குஞ்சுப் பறவையின் பெருகும் பசியாய்
வளரும் காத்திருப்பினில்
மரித்து மரித்துப் புசிக்கிறேன் பெண்ணே
என்னை நானே
என்னை நானே

தொலைவில் தெரியும் கடல்நிலவாய்
அருகில்வரும் அது நீயா?
அது நீயா?
ஆராதனா அது நீயா??

***

http://www.vallinam.com.my/issue49/poem1.html








ஆக




சிறு தொட்டிச்செடியில்
ஒழிந்து கொண்டிருந்தது
எனக்கான ஈரம்

ஒரு பெரும் பூந்தோட்டமே
நிறுவ
முயன்று கொண்டிருக்கிறாய்
நீ

நன்றி வல்லினம்


இன்னும் சொல்வோமேயானால்




உடல் அவிழ்த்துக் கொண்டிருந்தேன்
கொடுநாவின் வாள் கொண்டு

மனம் இறுக்கிக்கொண்டிருக்கிறாய்
தேன் உமிழும் வன்மம்
தொட்டு

நன்றி வல்லினம்




மெல்ல வளரும் பேராகாயம்




காற்றின் திசையெங்கும்
மின்னி மின்னிக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்கள்

வியர்வை நுரைத்த நமது உள்ளாடைகளில்
வழிகிறது
நீந்துதலுக்கான ஸ்டார் குறிப்புகள்

வியாபித்தலின்
பசையறிந்து
சலனமற்றதொரு எளிய அன்பு

நன்றி வல்லினம்


மழையெனச் சொட்டும் நிலா மிதக்கும் கடல்




அசைய மறுத்து மிளிரும் முகம்
பைத்தியம் பசிக்கிறது
வாழும் கோடை முன்
என் நீ

பிரிவென்பது பெரும் கோடை
பிரிவென்பது சுனையொத்த அன்பு

பிரிவின் சுவடு அறியுமோ
அறியாதோ
மரண வீட்டில் தீரா மழை

நன்றி வல்லினம்


Friday, December 7, 2012

ஆராதனா எனும் பேய் 16




16.
பெருமழைக்காலத்து வண்ணத்துப்பூச்சியாய் 
என்னுள் படபடத்துக் கொண்டிருக்கிறாய் 
ஆராதனா..

நீ நிரம்பிய தனிமையோடு நான் உலவும் 
இம்மணல் வெளியெங்கும் 
வரைந்து வைத்திருக்கிறேன்
நிழல் தாகமாய் உன்னை 
ஆராதனா..

கடல்களுக்குமேலே நூல் பிடித்தாற்போல் 
பறக்கும் நமது வானம்
சொட்டிக் கொண்டிருக்கும்
இப்பெரும்பசியில் நர்த்தனம் செய்வதில்தான் 
எத்தனை ஆத்மார்த்தமாக உள்ளது
ஆராதனா..

***  

17.
ஆராதனா, 
அன்றொரு நாள் முத்தமிட்ட 
உன் தெளிர்ந்த முதுகினை 
ஞாபகத்தில் குறு குறுக்கிறது 
கையகப்பட்ட இச்சிறுஇலை

எனது தொலைதேச நதியில் பெய்து கொண்டிருக்கும் 
உனது மழையில் 
வாதையின் ஸ்பரிசம் தளும்ப 
மீண்டும் தொப்பூல்கொடி அறுந்து விழுகிறேன் 
அழுகையும் சிரிப்புமாய்ஆராதனா

***

18.
நீண்ட நீண்ட இரவும் பகலுமாய் 
பிரிவு தின்று பிறழ்வில் அலையும் 
என் நமதுமனசை 
மேகம் அவிழும் முதல் மழையாய் விடுவிப்பாயா
ஆராதனா

***



Saturday, October 20, 2012

மனிதர்கள்







எத்தனைவிதமான மனிதர்கள்
எத்தனைவிதமான வெளிப்பாடுகள்
எத்தனைவிதமான அந்தரங்கங்கள்
எத்தனைவிதமான நம்பிக்கைகள்
எத்தனைவிதமான ஏமாற்றங்கள்
எத்தனைவிதமான நிர்ப்பந்தங்கள்

எனக்கு அசூசையையாக இருக்கிறது
மேலும்
எனக்குப் பயமாக இருக்கிறது

எந்தவிதமான மனிதன் நான்

நன்றி வல்லினம்


நிகழ்வுகள்



ஒருஊரில்
என்று துவங்கும்
ஒவ்வொரு கதையிலும்
ஒரு கதை
இருந்து கொண்டுதானிருக்கிறது
உண்மைகளை உசுப்பிப் பிடித்தவாறு !

நன்றி வல்லினம்

பெயர்அறியாப் பறவையொன்றின் சிறகுகளில்






நீயற்ற வனத்தில்
ஏதுமற்ற மழையாய் உதிர்ந்து விழும்
துயரப் பாடலென நான் மிதக்கிறேன்

பெயர்அறியாப் பறவையொன்றின் சிறகுகளில்
உனக்கான இருப்பை பத்திரப்படுத்துவதில்
மும்முறமாய் கவனித்துக் கொண்டிருக்கிறது
எனது பெருங்கோடை

ஒரு கரமைதுனத்தின் கடைசிக் கணமென
உடைபடும் மௌனபலூனின் நாள்
பெருமழையின் முதல் துளியென
இறுகத்தழுவும் கரங்கள்

ராட்சஸப் பாறையாய் வியாபித்திருந்த
பிரிவு அறிந்த தீராக்காதலின்
ஒற்றை வெளிச்சத்திலிருந்து
அழுந்தமுத்தம் ஒன்று மெல்ல கீழிறங்கும்

துயர் பற்றி எரியும் வனம்
திரும்பும்
வேட்கையின் பெருநதி அணைத்து

நன்றி வல்லினம்


Monday, September 3, 2012

பசி தீர விரல்கள் வேண்டுமாம்






தலையைக் கழற்றி வைத்துவிட்டு
நடக்கத் துவங்கினேன்
முண்டமாகிய உலகு
கால்களைத் தாங்கிப் பிடிக்கிறது

நன்றி வல்லினம்.காம்


பெருந்துயரத்தின் வாடை






கேவலின் கொடுந்தீயில்
உயிரே
ஒருஐஸ் துண்டின் தன்மையில்
மீதகாலம்
மூச்சு முட்டுகிறது
உரையாடலில் வார்த்தைகளில்லை
பெருந்துயரத்தின் வாடை

நன்றி வல்லினம்.காம்


ஆமென்






ஒரு நல்ல கவிதைக்கும்
ஒரு மோசமான கவிதைக்கும்
உள்ள வெளியில்
நம்மைக்
கொலையும் தற்கொலையும் செய்கிறேன்
ஆமென்!

நன்றி வல்லினம்.காம்


வெளியேற்றத்திலிருந்து துவங்குகிறது உட்புகுதல்






தயங்கித் தயங்கி கூடுடைத்தல் பற்றி
சிந்தனை செய்து கொண்டிருந்தேன்

நாய்களும் எறும்புகளும்
அடிக்கடி புகுந்து கொள்கிறது
என் கனவு வீட்டிற்குள்
சித்திரக்குறிப்புகளாய்

நன்றி வல்லினம்.காம்


Wednesday, August 1, 2012

ஆக..



முழுமையாகக் கைவிடப்பட்டவன்
என்று உணரும் கணம்
நீங்கள் தூக்கிச் செல்லும் படியான கனத்தில்
இருக்கப் போவதில்லை

ஒரு சாதாரணக் கவிதையின்
எல்லா அம்சங்களையும் உடைத்து
ஒரு கவிதை வேண்டும் என்கிறார்கள்

நான்
புறக்கணிப்புகளையும்
நிராகரிப்புகளையும்
அவமானங்களையும்
பற்றியே சதா புலம்பிக் கொண்டிருக்கிறேன்

நன்றி வல்லினம்.காம்



Monday, July 2, 2012

உயிரோடு வாழ்தல்!



இந்நீளவானம்
ஒரு துண்டு நிலவு
ஆகையில்,
வெட்கமெனும் உயிர் நதியாய்
துளிர்க்கிறது சுனை!

நன்றி வல்லினம்.காம்