Friday, July 30, 2010

அரேபிய ராசாக்கள் - பிரிவு அறிவித்தல்..




நிசப்தத்தின் நிசப்தம்..!

அன்று நான் வழியனுப்பப் பட்டேன்.. அதனை, டாட்டா காட்டி அனுப்பினார்கள் என்றுகூட பிள்ளைத் தமிழில் சொல்லலாம்.. உயர உயர பறக்கப் பறக்க.. என்னை, என் இயல்வாழ்வைத் தாழ்த்திக் கொண்டிருந்தது விமானம்.. இதுதான் ஒரு ஆழ்ந்த நம்பும்படியான பொய் என்பேன் பிற்பொழுதில் அரேபியக்கதை கேட்கும் பாரபட்சமற்ற யாவரிடமும்..


ஆகும் நொடியில், வெயில் அடித்து மழை ஓய்ந்த மனநிலையில், இப்பெரும் அரேபியாவின் கொடுமணல் குன்றின் மீது ஒருநாளைக் கடக்கும் ஒவ்வொரு நொடியையும் கடத்திக் கொண்டிருக்கிறேன்..


பணியெடுக்கும் ஒட்டகப் பாலையில், என்றோ அன்று வெறுமையின் அர்த்தம் தாங்காது, கொதி வெயிலில் நனைந்த பைப்பின் மீது வெல்டிங் ராட் உபயோகப்படுத்தி கிறுக்கிய என் பெயருடன் கூடிய நண்பர்கள் இனிசியலை.. கண்டு கொண்டிருக்கும் வானத்தை தீர்க்குமுன், ஒரே ஒருமுறை கண் ஒத்தியெடுக்கவல்லாத ஆசையோடு ஞாபகங்கள் மருகுகிறது கசக்கிப் பிசைந்து இதயக் கூட்டினை..


எழுதுவதை நிறுத்திவிட்டுப் பார்க்கிறேன்.. உயிர் உருக உருக உருகுவதை..!


யானைப்பாகன் பழக்கி வைத்திருக்கும் ஒரு யானையைப் போன்று சொன்னதைச் செய்யும் மனமாக இருந்த மனசு, சொல்லச் சொல்லக் கேட்காது அடம்பிடிக்கும் மழலைப் பிள்ளையாக.. என் செய்வேன் என்னை ??


மொழிப் பெயர்த்தலும் மௌனச் சொல்லாக உருப்பெயர்வதை, எந்தப் பூட்டுக் கொண்டும் அடைக்க துணிவற்று.. செத்து செத்துப் பயில்கிறது இதுவன்றோ என்னை நான் இருத்திக் கொண்ட இருத்தலென..!


மிகுப் பேரமைதியாக சொல்லப்போனால், தாயை விட்டுப் பிரிந்த வளர்பறவைக்கு உயிர்வாழ எது தேவையென சுலபத்தில் பிரித்தறியாத் தருணம் போல அவிழ்க்கிறேன் என்னை என்னிலிருந்து..!


கடந்துபோன நானூற்று எழுபத்தைந்து நாட்களில் இல்லாத வெறுமை அறையெங்கும்.. இம்மண்ணை விட்டு நகர்ந்தாலும் ஒரு போதும் தீரா வாசமாகத்தான் இருக்கப் போகிறது அரேபிய ஞாபகங்கள் மனசின் அழியாப் பாகங்களில்.. நிஜம் இதுவோ அல்லது வெறும் பிரம்மையோ! என்னை நானே கேட்டுக் கொள்ளத் தவிக்கிறேன்.. பிறகு தவிர்க்கிறேன்.. இந்த நிசப்தத்தின் நிசப்தம் அலுவலகத்தின் கடைசிக் கணக்கு முடித்தலின் பேரமைதியைக் காட்டிலும் அதிக வலியோடு அமிழ்கிறது..

கொப்பளித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு கேள்வி உயிர்ப்பெறுகிறது.. நான் மட்டும்தான் பைத்தியக்காரனா இல்லை என்னை மட்டும்தான் இப்பைத்தியம் பிடித்து ஆட்டுகிறதா?? சமயங்களில், சிறு குழந்தைகள் அம்மாவின் தீட்டுப்பற்றி தெரிந்துகொள்ள விருப்பப் படுவதைப் போலொரு சூழலோ யென்று.. கேள்விக்கு கேள்வி கொண்டே பதிலும் சொல்லப் பிரியப் படுபவனாகிறேன்..!


ஒரு முழுநாளின் நொடிகள் மிதம் மிஞ்சித் தீரும் பொழுதுதனில் தாள தாளப் பறக்கும் விமானத்தில் நான் உயர உயர பறப்பேனோ..? நம்பிக்கையின் கீற்று நட்சத்திரங்களைவிட பிரகாசமாக.. அது போதும் அது மட்டுமே போதுமெனக்கு.. கூச்சமென்ன வேண்டிக் கிடக்கு கூச்சம்.. எழுது, இன்னும் எழுது எழுதென்று பின்தொடரும் நிழலின் ஒலி சன்னமாகக் கேட்பதை உணர முடிகிறது..


முன்பு இதே மாதிரியான, என்னைப் போன்றே.. விலாசம் இடாது கடிதம் எழுதி, எழுதிக் கிழித்திருக்கிராறாம் அவர்.. அப்படி என்னப் பெரிதாக முடித்திருக்கிறேன் , வெறும்..வெறும்.. நானூற்று எழுபத்தைந்தே நாட்கள் , அதுவும் திருமணம் முடிக்காத இளைஞன்.. எதிர் அறை நண்பருக்கோ என்னைப் போலொரு மகன், என் தங்கையைப் போலொரு மகள்.. என்னைப் போன்றே விலாசம் இடாது கடிதம் எழுதி பல நான்கு முறை எழுதிக் கிழித்தாராம்.. எரிசாராயத்தின் உச்ச போதையிலும் பகிர்ந்து கொண்டே படுக்கப் போனார்..நான் என்ன அப்படிப் பெரிதாக...


உலகம் பெரிது .. காலம் வலியது.. சிறியோன் நான்..இன்னும் எத்தனையோ வாழ வேண்டும்...
கடல் தாண்டி, கடலைக் காட்டிலும் பேரன்பு சூழ்ந்த இருப்பினையே எனக்கு வழித்திருக்கிறீர்கள் உங்களில் யாவரும்.. கடவுள் என்றுமே எனக்காகப் பிரார்த்திப்பார்..!


முழுநாள் நிர்வாணமாய் யொதுங்கிய அறைக் கதவினை டம் டம்மெனத் தட்டுகிறார்கள்.. விமானம் தாள தாளப் பறக்கும்... நான் ஓங்கி ஓங்கி விரிவேன்..


அன்பின் இனியது
அன்பன்றி வேறேதும் உண்டோ.!


ஹாய் அம்மா
ஹாய் அப்பா
ஹாய் தங்கச்சி
ஹாய்டா டேய் உங்க ஆளு சௌக்கியமா ? லெட்டர் கொடுத்துட்டியா.. இல்ல இன்னும் அதே...??


( அவனது 2010 டைரிக் குறிப்பிலிருந்து.. )



Monday, July 26, 2010

வன்புணர்ச்சிக்கு உத்தேசம்..

ஆசிரியர் மனுஷ்ய புத்திரனுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்..  நூறாவது இதழாக இவ்வார உயிரோசை..!





ஆயாசமாய் பகலை அள்ளிவிழுங்குமாறுயிருந்த சூரியன்

குறிப்பிட்டதொரு குறிப்புணர்த்துவதாக சிலாகித்து, 

பின்அதில் தொடர.. எதன்பொருட்டோ லயிப்பற்று, 

காற்றசைக்கும் மரஇலையின் திசையில்
வெகுதொலை பறப்பதாயொரு முடிவுக்குவந்து..

பின்தொடர் பறவையொன்றின் இறகில்

இரவைக் கொண்டுவரும் நிலவின் நுனிமூக்கில்
கிட்டாதிருந்த கவிதைக்கான
வார்த்தைகளேதும் சொட்டிவிடாதா..

யென்றவொரு கொதியோடு

மனம்புரளும் கொள்ளாத இருப்பில்,

மனங்கொத்திமீனாக வந்துவிடுகிறது
புட்டிவரை கூந்தலுடைய அப்பிசாசின்

உயிர் உறிஞ்சும் கண்கள் !!


நன்றி உயிரோசை..

Saturday, July 24, 2010

அலமாரிப் பக்கங்கள்..



கடைசி உரையாடலின் மௌனங்கள்
பழையடைரியை வாசித்துக்கொண்டிருக்கிறது..
யாதொரு முன்முடிவகளுமற்று..

சமயங்களில்
மறுசந்திப்பிற்கான உத்தியெனவும்
ஓர் உறவு மருகுகிறது
மௌனங்களின் கூர்ப்பக்கங்களில்..

ஒரு தேநீர் மாலையும்
இரு காலி இருக்கைகளும்
நமக்கான முடிவில்,
முந்தைய நமது பிரிவுநாட்களை
யொத்த அதே ஈடுபாட்டின்
நகம் கடித்தலோடு.!

Thursday, July 22, 2010

அரேபிய ராசாக்கள் 12..



கூழாங்கற்கள் தடாகத்தில்
பிறிதொரு கால்களை யோசித்ததாக
குனிந்து முள்ளெடுத்து அதையோரமாய்
விட்டுச்செல்கின்றதொரு கை!

தொலை பயணங்களுக்கு..
காரணங்களென்னவாக யிருக்கமென்ற
யாசிப்பிலொரு கை
எதையோ விட்டுச்செல்வதாய்
நீள்கிறது இலக்கின்றி என் கணம் !

ஒருவன் வண்ணம் தெளிக்கின்றான்,
இன்னுமொருவன் அதை பற்றிக்கொள்கின்றான்,
இப்படியாகத்தான் சுழற்சியில் வாழ்வு..!


நன்றி வார்ப்பு..

Monday, July 19, 2010

பட்டாம்பூச்சியின் சிறகு உதிர்க்கும் வர்ணநிழல்..



புழுக்கள் ஊரும் சதையென
நெளியத் துவங்கும் இரவின் முகமெங்கும்
ஒரு பைத்தியக்காரப் பட்டாம்பூச்சியினைப் போல
பறக்கத் துவங்கிய அந்த மாயநொடியில்
தனிமை உண்பவன் எழுதப்படுகிறான்
புனைவைப் புசித்து ..

புரிதலின் செய்கைகள்
விழுந்து நொறுங்கிய பீங்கான் சீசாவாகி
தின்னத் தருகிறது மனமீன்களை
படுக்கை அறையில் விழுந்து கிடக்கும்
அடர்மௌன நிழலுக்கு.. 

ஒரு tumbler கடலும்

உள்ளங்கை size நிலவுத்துண்டும்

இதழ் விரியத்துடிக்கும் roseபூவும் 
உங்களுக்கென உமிழத் துவங்குகிறதது
மனமீன்களைக் கொத்தி தின்ற நிழல்!
      
உங்களில் யாவரும் பருகி
அன்பைக் கொண்டாடுங்கள்.. 
அன்பின் கட்டடங்கா போதையில் மிளிருங்கள்..

என் தனிமை எனக்குப்
போதுமானது. 


நன்றி உயிரோசை..

Saturday, July 17, 2010

முன்முடிவுகளைக் கைப்பையில் ஒளித்துவைத்திருத்தல் உகந்ததல்ல...




மனதை திடப்படுத்திக் கொண்டு
நகரத் துவங்கியது மழை.
தவளைகள் பரிகாசிக்க ,
நட்சத்திரங்களென
வாய்நிறைய அள்ளிவந்தது வானம்
அது விதண்டாவாதங்களின்
வெற்றுக்கூடுகளென அறியாது..!

மழை நகர்ந்து
வெகுதொலை கடந்தும்
தவளைகளும், வானமும்
பார்வை பரிசோதிப்பற்று
முட்டியவாறேப் பிய்த்துக் கொண்டிருந்தன
சாக்கடைக் கதவினை
மழையென உருவகித்து..

பின்னொரு பொழுதில்
மழைபெய்யத் துவங்கியது
மழையாகவே..!
தவளைகள்
யாதொரு அறிவிப்புமின்றி
காணாது போயிருந்தன...

Wednesday, July 14, 2010

யாதுமாகி...



ஒரு காதலை
கவிதையிலெழுத வேண்டுமென்ற
அவனுக்கு
இடையூறாகயிருந்தது
ஒரு நட்பு!

ஒரு நட்பை
வாசித்துக்காட்ட வேண்டுமென்ற
அவளுக்கு
இடையூறாக இருந்தது
ஒரு காதல்!


நன்றி கீற்று..

Monday, July 12, 2010

எழுத வாய்க்காத இரவொன்றில்..



சலனமற்றுக் கிடந்த தலையணையில்
சட்டென வந்திறங்கியது
எனக்கு மிகப்பிடித்த
ஒரு ரயில் பெட்டியும்
ஒரு மழை வண்டியும்..

கனவுகள் காண வலுவற்றிருந்த
எனது இரவுகள்
இக்கடைசி வானத்தைக்
கொண்டாடத்துவங்கியது,
தனிமைநாற்றம்

கடலில் விழுந்த நட்சத்திரங்களின் வாசமென

மாறிப்போனது..

ஒரு மிகுஆசுவாசம்
நான் ஒற்றையான அறையெங்கும்
மெல்லப் படர்ந்து
என்னைக் கட்டிக்கொண்டது..

இனி ,
ஒரு குழந்தையின் மென்சிரிப்பாக
ஒரு பதின்வயதுப் பெண்ணின் முதலுதிர சந்தோசமாக
முதல் குழந்தைக்குத் தாயான ஒரு பெண்ணின் முகமாக
தனதான பெண்ணின் மிகுஅன்பில் ஒரு ஆணின் வெட்கமாக
தைரியமாய்
சப்தமாய்
யாவரிடமும் தெரியப்படுத்தப்படும்..

எனது டைரி நிரம்புகிறது..

யாரும் என்னைத் தடுக்கப்போவதில்லை 
அறை எண் 7ல் நான் மட்டுமே

தற்கொலைக் குறிப்பெழுதுகிறேன்.!



நன்றி உயிரோசை..

Monday, July 5, 2010

கடந்து செல்லுதல்.


பால்யத்தைக் கடக்க எத்தனிக்கும்
பதின்வயதின் சட்டைப்பையெங்கும்
வண்ணத்துப்பூச்சிகளின் கூடாரம்..

சில சிறகு உதிர்ந்தவைகளாகவும்
சில உதிர உதிரப் பறப்பவைகளெனவும்..

ஒரு முழுவதுமான கையறுநிலையில்
பிரியத்தின் நிழல்கள்
செத்து செத்துக் கிடக்கின்றன
பொழிதலின் மழைச்சாலையெங்கும்..

இன்னும் மின்னிக் கொண்டுதானிருக்கின்றன
வானெங்கும் நட்சத்திரங்கள்
ரசிக்கத்தான் என்னிடம் நானில்லை.!

அரிதாகப்பூக்கும் ஒரு காட்டுப்பூவினைப் போலவோ
எறும்பு மிதக்கும் ஆற்றின் இலைபோலவோ
ஒரு சில சமயங்களில்
கடந்து கொண்டுதானிருக்கிறது
என்னை இந்த வாழ்வு.

நன்றி உயிரோசை..



 
வலைச்சரத்தில் எனது  எதற்கேனும்  ஐ! அறிமுகப் படுத்தியிருக்கிறார் மாமா பா.ரா..  நன்றியும், மகிழ்வும் மாமா :-)







Saturday, July 3, 2010

பரிச்சயமற்ற புனைவு.




இன்னும் எத்தனை நட்சத்திரவானுக்குப்
பின், அவளது சேகரித்த முத்தங்கள் மீளுமோ.

ஓராயாச எதிர்நோக்கலில்
குருவாளின் சொச்ச குருதியும்
கனவறை பருக,
கடல் குடிக்கும் உப்பாயுறைகிறது மீன். 

உடைந்த நிலா
ஆசைபௌர்ணமிக்கென வளர்வதாய்
மிகுலெகுவாய் விரல்நீட்டும் வானத்தில்
நிஜ நிழல்கள் இதுவரை எங்குமில்லை
யென்பது எத்தனை பேருக்குத் தெரியவருமோ.

வயதினை வயதே குடித்தலென்பது
நீர்தேங்கி யழுகிய வேரிலொட்டிய
மண் எனலாம், சற்று குரலைக் குறைத்து. 

அர்த்தமற்றதனிமைக்கு இளமை இரையாகிறது 
மரமில்லா ஒடிந்த கிளையென.

இரவோடு இரவாக
புகைமாண்ட அழுக்கு அறையில்
துவம்சமாகிறதொரு ஒற்றைக் காமமும்
உயிர் உருகும் காதலும் .