Showing posts with label ஆராதனா. Show all posts
Showing posts with label ஆராதனா. Show all posts
Sunday, September 15, 2013
ஆராதனா எனும் பேய் 52
“ பூமாலை கோர்க்கும் குரங்கினை அடைந்தவள் கண்களில்
பிரகாசத்துயில் பரப்பும் ப்ரியக்குழந்தை
அழகிய பேரழகிய ஸ்பரிசத் தூறலை வனைந்து வனைந்து அசைகிறது “ என கிறுக்குத்தனமாக சனநெருக்கடி மிகுந்த அங்காடித்தெருவின் நட்டநடுவில் நின்றுகொண்டு, நீ அழுந்தக் கவ்விப்பிணைத்த உதடுகளில் சொல்லிப் பார்க்கிறேன் ஆராதனா.
நெடுநாளாக உனக்குப் பரிசளிக்க எண்ணி விடுபட்ட கொலுசுஜோடியை ஏறக்குறைய அலைந்து அலசி இறுதியில் தங்கத்தில் மணிகள் நிறைந்த ஒரு ஜோடியை வாங்கியாகிவிட்டது. மிகவும் பிடித்திருக்கிறது. உனக்கும் நிச்சயம் பிடிக்கும் ஆராதனா. ஆம், அந்த முத்தத்தின் ரீங்காரம் என்உயிர்க்கூட்டில் இடைவிடாது ஜெல்லிமீனைப்போல நெளிந்து நெளிந்து நெளிகிறது என் பெண்ணே. உன் சிறு வட்டவடிவ தங்கநிற முகத்தின் தாடையிலுள்ள, எந்நேரமும் சிறுமி வானதியின் கரங்களில் தவழும் கலர்பென்சிலின் ஒல்லி முனையளவிலான மச்சம் பிறகு எப்பொழுதாவது நான் எங்கே என்று உன்னிடம் நலம் விசாரித்ததா ஆராதனா?
நினைவில் அழிகிறேன் என்று எங்கோ வாசித்த அனுபவம் என்னிடம் எப்பொழுது நிரந்தரமாகக் குடியேறியது? தங்கிப்போனது? உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது ஆராதனா...
நிலம் குடிக்க சரசரத்து அந்தக் கிளிப்பச்சைநிறப் புடவையில் நீ மெல்ல அசைவது போல நடந்து என்னை நெருங்கியபோது கிளையின் சிற்றசைவில் மொத்தமாக சிறகடித்துப் பரபரக்கும் பறவைகளைப் போல அத்தனைப் படபடப்புக் காட்டியது என் குட்டி இதயம்! ( முதல் சுகவலி ஆராதானா) கூடவே..அதுவரை ரயில்வண்டியென நீண்டு வளர்ந்திருந்த என் தனிமைக்கழுகின் வற்றாத செவ்வெயில் நான் இமை மூடித் திறந்த நாழிகைக்குள் இனி எப்பொழுதும் திரும்பமுடியாத தூரத்திற்குள் சென்று தன்னை விடுவித்துக்கொண்டது ஆராதனா.
நன்றிகள் உரித்தாகுக உனக்கு ஆராதனா...
எனது தீரா ப்ரியங்கள் உரித்தாகுக உனக்கு ஆராதனா...
ஆராதனா.. ஆராதனா...
உன் பெயர் விழுங்கி உன் பெயர் விழுங்கி என்னைத் தேடுகிறேன் உன் பச்சை வனாந்தரத்தின் முழுக்க நின்றுகொண்டு...
வெட்கமும் கூச்சமுமாக இருக்கிறது ஆராதனா, இருந்தாலும் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. உங்களது ஒல்லியான சதைப்பிடிப்பற்ற அந்த உருவம் அவ்வளவு அழகாக இருக்கிறது. நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் ஆராதனா. ( எழுதிவிட்டு சந்தோசமாகச் சிரிக்கிறேன் )
நிலவு காட்டி சோறூட்டும் தாய்இடுப்பு நிறைய வளர்ந்திருக்கும் குழந்தையின் பன்னீர்சிரிப்பாய் சூழல் வாய்க்கும் ஒரு தருணத்தில் உன்னைச் சந்தித்திருப்பேன் மீண்டும். காத்திரு.
காலப்பிரக்ஞையில் நொண்டும் இந்நொடியில் தேர்ந்த மெஜீசியனின் அசைவுகளுக்கு உடல் உடையும் ஒருவனாக நான் தீரமாட்டேனா ஆராதனா?! புதைகடல் அமிழ்ந்த இம்மூச்சு வரம்.
முத்தங்கள் உனக்கு...
உன்னைப் பார்க்கவேண்டும் போல இருக்கிறது ஆராதனா.
Sunday, September 1, 2013
ஆராதனா எனும் பேய் 51
அகோரப் பசியெடுத்து நிற்கும் என்னை
விழுங்கப் போகும் முன்
உன்னிடம் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான் ஆராதனா..
புணர்ச்சிக்குப் பிறகு
மார்காம்புகள் வலிக்கிறதென்ற
மேலும் கூடதலான காதலை
என்னிடம் சொல்லி முத்தமிடாதே
வாழ்தல் விடுத்து மரணத்தில் ஒழுகிவிடுவேன் நான்
இல்லை இல்லை என்று சொல்லி நெருங்கி அணைக்கும்
உன்னை
எந்த தொட்டிலில் தாலாட்டுவது
Sunday, July 14, 2013
ஆராதனா எனும் பேய் 50
எங்கு திரும்பினாலும்
உனது முத்தமிடப்பட்டக் கண்கள்
பிரிவு என்பது வறுமை
பிரிவு என்பது பயம்
பிரிவு என்பது கண்ணீர்
பிரிவு என்பது வலி
ஆராதனா
ஜன்னல் தீண்டி விரல் அசைக்கும் மழையிடம்
நெஞ்சுக்கூடு விம்மச் சொல்லிக்கொள்கிறேன்
உனது முத்தமிடப்பட்டக் கண்கள்
எனது தானென்பதை
ஆராதனா உனது முத்தமிடப்பட்டக் கண்கள்
எங்கு திரும்பினாலும்
பிரிவு என்பது காதல்
பிரிவு என்பது காதல்
Sunday, June 16, 2013
Thursday, May 16, 2013
ஆராதனா எனும் பேய் 48
அரங்கு நிறைந்த கைத்தட்டல்கள்
எனக்கு நானே எழுதிக்கொண்டிருக்கும்
வாழ்க்கைக்குத் தான்
அவ்வளவு மென்மையான இசையுடன்
எவ்வளவு ஆத்மார்த்தமாக நெருங்குகிறாள்
ஆராதனா
இவளை யாருக்குத் தான்
பிடிக்காது?
முகமூடிக்குள் தேம்பி அழும்
கோமாளி
கழற்றி எறிகிறான்
தன் நம்பிக்கையற்ற உடலை
ஆனால்
அவள் என்னை மட்டும் காதலிக்கிறாள்.
Wednesday, May 8, 2013
Saturday, April 27, 2013
ஆராதனா எனும் பேய் 42
இந்த மழையும்
இந்த நாளும்
தொடர்ந்திருத்தல்
நானில்லாதபோதும் சாத்தியப்படத்தான்
இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் எனக்குத் தெரியவில்லை
குமிழ்கள் காற்றில் அறைபடுவதென
உதிர்ந்துக்கொண்டிருக்கும்
லப்டப் லப்டப் இதயஒலியின் இறுதி
கண்ணில் நீர் வழிந்த
உனது போன நிமிடமே
உடைந்து போய்விட்டது
ஆராதனா
ஒரு வறட்டுப் புன்னகையோடு
எழுந்து போகலாம்
வந்தவர்கள்
தாழக்கிடக்கும் உனது சேலையை
இடுப்பில் தூக்கி
முடிந்துவிட்டு
தண்ணீர் விட்டுக் கழுவு
பூக்கள் சிதறிக் கிடக்கும்
வரவேற்பறையை.
Friday, March 22, 2013
Saturday, February 16, 2013
ஆராதனா எனும் பேய் 38
38.
இருண்ட மழையின் சொட்டுகள்
படர்ந்து ஆடும் பைத்திய அகத்தில்
சுடர் பெருகும் இச்சாமம் ஒழிய,
நீ விட்டுப்போன நிலத்தை
தற்சமயம்
பதிமூன்றாவது மாத்திரையோடு
விழுங்கிக் கொண்டிருக்கிறேன் ஆராதனா
ஜன்னல் கதவுகளை அடைத்தாயிற்று
கண்கள் உருள்கிறது..
சொல்ல மறந்துவிட்டேன் ஆராதனா
நாளை
"ஸ்போர்ட்ஸ்டேய்"க்கு அழைத்திருக்கிறாள்
ஆறு வயது நம் மகிழ்மொழி
உறங்கும் முன் அவளுக்கு
அம்மா, சாமி கதை சொல்லியிருந்தேன்
இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம்
(உன்னை,உன்னுடைய முத்தமும்..)
***
39.
முன்பொரு
பெருமழைக் காலம் ஒன்றின்
அந்தி சாயும்வேளையின் பட்டர்பிளைக்கு
நான் முழுதும் ஒப்புக்கொடுத்த என்னை
மீட்டெடுக்கும் போலுள்ள உன் அருகிருப்பினை
வரையத் துவங்கியிருக்கும்
இந்த கலர் இரவில்
சலனமற்றிருந்த எனது பெருநதி நீந்திச் செழிப்பது
கண்டும் ஏன்
மௌனக் கானகத்தின் பச்சையத்தில்
நீயொரு
சிறு பிள்ளையாய் குதித்துக் குதித்து
விளாயாட்டுக் காட்டுகிறாய்
ஆராதனா!
***
40.
கூடடையா தாய்ப்பறவையின்
அலகில் விசும்பும்
குஞ்சுப் பறவையின் பெருகும் பசியாய்
வளரும் காத்திருப்பினில்
மரித்து மரித்துப் புசிக்கிறேன் பெண்ணே
என்னை நானே
என்னை நானே
தொலைவில் தெரியும் கடல்நிலவாய்
அருகில்வரும் அது நீயா?
அது நீயா?
ஆராதனா அது நீயா??
***
http://www.vallinam.com.my/issue49/poem1.html
ஆராதனா எனும் பேய் 37
வம்படியாக
ரயில் காமித்துத் தருவதாக
கூட்டிப்போன அப்பாவிடம்
ரயில் வாங்கித் தரச்சொல்லிக் குறுகுறுப்பூட்டிய
நினைவென
புதியதாய் அருவிக்குத்
தலை காமித்த சிறுமியின் மனமென
நண்பன் சுபாஸ்உடன்
விலாங்குமீன் பிடித்துப் பொறித்து ருசித்த நள்ளிரவென
இன்னும் இன்னும் சில அந்தரங்கங்களையும்..
இப்படி இப்படி எது ஏதோ ஞாபகத்தில் துள்ளுகிறது
எனக்கு
ஒரு நீண்ட உரையாடலின் முடிவில்
"என்னை இழந்தால் நாடுஇழந்த மகாராணியாம் அவள்"
என்று சன்னமான குரலில் புன்னகைத்துவிட்டு
மார் நிறைய முத்த காய்ச்சலோடு
செல்கிறாள் ஆராதனா
ஆராதனா எனும் பேய் 36
அப்-பேரழகிய துபாய் யின்
ஒரு வெயிற்கால நள்ளிரவில்
அதன் இயல்பு மாறாது ஓடிக்கொண்டிருந்தது மெட்ரோ ட்ரெயின்..
அதனுள்
நூற்றாண்டுகள் சென்றாகி விட்டது
நாம் பறந்து கொண்டிருக்கிறோம்
சிறகுகள் விரிய விரிய
மேலும்
இறகுகள் படர்த்தும் மொழி சுடர்
அன்பினது யாசிப்பிற்கு
நானும்
நீயாகிய ஆராதனாவும்
இறுதியிலும் இறுதியான
பலி
அல்லது
நேற்றைய குளிர் அந்தி
கர்நாடகா சிமோகாவில் ஆரத்தழுவிய
நமது உதடுகள்
சிரித்த
அத்-துயர இசை!
ஆராதனா எனும் பேய் 34
பிளந்திருக்கும் மார்புகள் அவ்வளவு வெளிச்சத்துடன்
மூர்ச்சையாகித் தொட்டுணரும்
நான்
விண்-பற்றி எரிகிறது முத்தங்கள்
முத்தங்கள்...
எம்பினாலும்;
யோனியும் குறியும்
எத்தனை எத்தனை எம்பினாலும்..
எத்தனை எத்தனை எம்பினாலும்..
சுற்றும்..
சூழும்..
வியாபிக்கும்..
நம் உலகத்தில்
அவர்கள் வியர்க்கும் கெட்டசொப்பனத்தில்
நாம் உரக்க உரக்க காதலையே
ஒலித்து (அ ) ஒளித்து,
விடுகதையென விடாமல் துரத்திக்கொண்டிருக்கிறது
கவிதையைப் போலல்லாததொரு
நாம்..
ஆம்; நாம்.
Sunday, February 3, 2013
Tuesday, January 29, 2013
ஆராதனா எனும் பேய் 32
உனது தலைமயிரைப் போன்றதென
வேறொன்றுமில்லை
என்னைப் பரவசமடையச் செய்ய
என்றொரு முறை
மன்னிக்க
பல நூறு முறை உன்னிடம் சொல்லியதாய்ச் சொல்கிறாய்..
தெரியுமா ஆராதனா உனக்கு
நீ என்னைக் கட்டி வைத்திருக்கும் இப்பெருங்காட்டில்
மழைக்காலமென்று தனியாக ஏதுமில்லை
வெயிலின் மரணத்தைப் பற்றி
நீ யாரிடம் சொல்லத் துவங்கினாலும்
வியர்க்கவே செய்யும்
கூர்ந்து யோசி ஆராதனா
சரி சரி
விடு
அதோ உன் குழந்தைக்கு
இந்தப் பைத்தியக்காரனை அறிமுகப்படுத்தி வை!
Subscribe to:
Posts (Atom)










.jpg)



.jpg)
.jpg)

