Showing posts with label நவீனவிருட்சம். Show all posts
Showing posts with label நவீனவிருட்சம். Show all posts

Monday, August 5, 2013

இளஞ்சிவப்புச் சூரியனின் அலாதி ப்ரியம்



"அடப்பைத்தியமே" யென
கால்களை
முத்தமிட்டிருந்தது நுரை

கழுத்தில்
சங்கிலிப் பூட்டப்பட்ட
படிமநாயைப் பிடித்தவாறு
என்னைக் கடக்கிறார்
ஹேண்ட்ஸம் பீச் தாத்தா

நான் முறைத்து அமர்ந்திருந்த
கடல்
திரும்பி என்னை முறைத்துக்கொண்டிருக்கிறது

நீ
வருகிறாய்!

நன்றி நவீன விருட்சம்


நிரந்தரத்தின் தரிசனம்



அடைக்கப்பட்டக் குழாயிலிருந்து
ஒவ்வொருச் சொட்டாய்
நீர் தரைமோதி மேலெழும்பும்
சப்தமென
நம் இரவை கலைத்து அடுக்குகிறேன்

செவிலித்தாய் ஒத்த
ப்ரிய ரேகைகளின் வழி
எதிர்ப்பெதுவுமின்றி மிடறு மிடறாய்
தரிசிக்கிறாய் நீ !

தடதடத்த பின்னங்கழுத்து படபடப்பில்
தப்பிக்க முயன்ற எறும்பினை
வலிவலிக்காத வண்ணம் கைப்பற்றுகிறோம்
பின் மெதுவாக அசைவுறுகிறோம்

மிதந்து
நிமிரும்பொழுது
தற்காலிகமாக வெளியேறியிருந்தது எறும்பு


நன்றி நவீன விருட்சம்


Saturday, March 9, 2013

அலைதலின் முற்றுகை





கோவில் மதிற்சுவர் நரகல் மணம் கூசுவதொத்த
மனம் எனது

தவறவிட்ட
பிடித்தே ஆகவேண்டிய தொடர்வண்டியை
மழையும் வெயிலும்
துரத்திக் கொண்டிருக்கிறது

மேல்நோக்கி
கீழிறங்கி
அந்தரத்தில் மிதந்து அலையும்
இறகு ஒன்றினைத் தனதாக்க
நெஞ்சு விம்ம விம்ம
கைகளை நீள.. நீள... நீட்டுகிறேன்

ஓணான் அடிக்கும் குழந்தைகளை
யதேச்சையாய்க் கடக்கிறேன்

தொப்பலென
எனக்கான உனதான தாய்மடியில்
தலை வைத்து சாய்ந்து கொண்டேன்

***

நன்றி நவீன விருட்சம் 

Sunday, September 23, 2012

அரேபிய ராசாக்கள் 19






துணையிழந்த
நோய்மையுடனான முதியவனின்
பார்வையாய்
வ்டிந்து சொட்டுகிறது தனிமை,

ஒருபொழுதும்
உங்களது மழையுடன்
ஒப்புக்கு வராதீர்கள்

மணற்காட்டில் நிச்சயக்கப்பட்ட வெயில்
எங்கள் பெருவானம். 

***

நன்றி நவீன விருட்சம் 

Saturday, August 11, 2012

மேலும்






அன்பு செய்வதை விடுத்து
கொலை செய்தலை கையாள்தல்,

பூதாகரமான அன்பிற்கு
நீ என்னையும்
நான் உன்னையும்
அறிமுகப்படுத்தியதின்
முன்னமே
தன் தற்கொலை டைரியில்
பதிந்து வைத்திருந்ததின்
குறிப்பொன்றை
சற்று முன் வழியில் கண்ட
அதிகம் பரிச்சயமுள்ள
நிமிர்த்த முடியாத வாலுடைய
ஜீவன் ஒன்று சொல்லிப் போகிறது
தன் பாஷையில்

மேலும்
உன்னிலிருந்து
திரும்பிக்கொண்டிருக்கிறேன்
உன்னிற்கு


நன்றி நவீன விருட்சம் 


Monday, April 16, 2012

புதிர் விளையாட்டு!




கடவுள் சாத்தானாகப் பெயர்ந்த
ஒரு வெயில் மதியப்பெருவெளியின் கானகத்தில்
வரிப்புலியொன்றும்
புள்ளிமான் இனத்தினது இரண்டும் 
மிகுந்த வேட்கையிலிருந்தன

முதலாவது வாழ்வு பசிக்காகவும்
இரண்டாவது மரண பசிக்காகவும்

சாத்தான் முகம் மலர்த்தி தாடை வருடி
அசை உண்ட தருணம்
தாகம் உப்பிய பேராற்றங்கரை
காளிச்சிலைக்குள்
மெல்லப் புகுந்து ஒளிந்து கொண்டான்
கடவுள்!

நன்றி நவீன விருட்சம்

Sunday, April 1, 2012

புத்தனாவது சுலபமல்ல







முன் முடிவுகளெல்லாம்
குப்பையென மண்டிக் கிடக்கும்
மனக்குடுவையை சுத்தப்படுத்து முதலில்
அப்புறம் சுத்தப்படுத்தலாம்
புத்தன் முகத்தை!

உலகெனும் பெருங்கோப்பையில்
நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது யுக காலம்.

விருப்பத்தேர்வு உன்னிடமே விடப்பட்டுள்ளது,  
அதன் ஒரு சிறு கண நேரம்
அல்லது
ஒரு முழுயுகம் எடுத்துக்கொள்ளலாம் நீ.

கல் புத்தன்  
கடவுள் புத்தனாக
ஒரு ஒருத்தருக்கும் ஒவ்வொரு அவகாசம்
சுயமாய் தீர்மானிக்கப்படட்டும்.


நன்றி நவீனவிருட்சம்

Friday, March 16, 2012

வாழ்வாதாரம் என்றொன்றைத் தேடி..!




எனது நிழல் வரைந்துக் கொண்டிருக்கிறது இன்னும் என்னை..
எவ்வளவு பெரிய அபத்தக் குற்றச்சாடல்??

எழுதிப் புரியாத வாழ்வு
எழுதப் புரிதலென்பதில்  
உன்னைப் போலவே எனக்கும்
உடன்படிதலில் இல்லை பேரன்பே!

நன்றி நவீனவிருட்சம்