Sunday, February 28, 2010

துளி விஷத்திற்கான விலையொன்றும் அதிகமில்லை..



பூக்கள் கல்லறைகளுக்கெனவும்
பூத்துக்குலுங்குகின்றன
அஸ்தம வானங்களில்..

முன்னோக்கி உந்த
வாய்ப்பு மறுதலிக்கப்பட்ட வண்ணம்
சிவந்த ஒளிமுன்
சாலையில் துவங்கிய
அலுவலக காலை,
முன்னெப்பொழுதும் போலில்லாது
பேசி தீர்ப்பதற்கென
அவர்கள் பரிமாறிய சொற்வீசல்கள்
இன்னொரு அவர்களுக்கொன்றும்
புதியதாய் அமைந்துவிடுவதில்லை..

நேற்றைய ஷாலினியின் ரெட் டாப்சும்
இன்றைய கிஷோரின்  புளூ ஜீன்ஸுக்குமாய்
வழக்கத்தை புறந்தள்ளி
சுவாரசியமாய் நகர்கிறது நண்பகல்..

பல பகல்கள்..
இன்னும் தெரிந்திருப்பதில்லை,
சிறுதுளி விஷமொன்றின் காத்திருப்பில்..
மறுதலிக்கப்பட்ட காதல்களும்,
அவைகளுக்குப்பின்னால்
கிஷோரும் ஷாலினியும் போல
பலபெயர்களும் கசிந்து கொண்டேயிருக்குமென!!

பூக்கள்..
கல்லறைகளுக்குமென,
மெல்ல நகர்கிறானொருவன்.



http://www.thinnai.com/?module=displaystory&story_id=31002273&format=html

நன்றி திண்ணை..

Wednesday, February 24, 2010

காரணங்களற்ற புரிதல்கள்..


காற்றைப் புறந்தள்ளி நகர்ந்தோடும்
துண்டு பேப்பரொன்றின் பின்பாக
விழாமல், வீதியில் குழந்தைகளிரண்டு..
சாக்கடைக்கு கொஞ்சம் முன்பு
நீலச்சட்டை பையன் முந்திகொண்டான்,
பச்சைபாவாடை தங்கச்சி அழுமுன்
ரஜினிகாந்த் சிரிப்பு மூட்டினார் , அண்ணனுக்கு
சிவாஜியின் கட்டபொம்மன் தலைதான் வேணுமாம்..

ஒற்றுகேட்டு கொண்டிருப்பவன் சொல்கிறான்,
மாடிவீட்டு பிள்ளைகளுக்கு
ரஜினியின் பிய்ந்த உதடுகளையும்
சிவாஜியின் தலைதுண்டுகளையும்
கம்ப்யுட்டர் கேம்ஸ்ல
ஒட்டி விளையாடத்தான் பிடிக்குமாம் !


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4117:2010-02-24-03-56-38&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று..

Monday, February 22, 2010

அரேபிய ராசாக்கள்..1X


படிக்கட்டுகளிலொன்று
கைத்தட்டி வரவேற்க
தலைமாட்டில் தவமிருக்க..

என்பிரிவு பற்றி
பெருந்துயர் செய்த
செல்லநாய் , ஈன்ற குட்டிக்கு
நான் பாலூட்ட காத்திருக்க..

பின்முற்றத்து தோட்டத்தில்
நான்நட்ட செம்பருத்தி செடியில்
மகரந்தம் கொண்டாடும்
வண்ணத்துப்பூச்சிகளிலொன்று
கன்னம் நிரம்ப
மகிழ்ச்சியின் நிறம்பூச யாசிக்க..

அடைத்துக்கிடக்கும் , எனது
அப்படுக்கை அறையில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
எனக்கு பிடித்த புகைப்படங்கள்
கண்கள் விரிய எனைதேடுகிறதாம்..
குருவியொன்று கீச் கீச் சப்தமிடுகிறது..

எல்லா இரவுகளும்
ஒரேமாதிரி காத்திருப்பதில்லை
அரேபிய ராசாக்கள் .


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2554

நன்றி யிர்மை..

Sunday, February 21, 2010

வழிதப்பிய கனவுகள்..!


இருகைகளையும் விரித்து
ஓவென வாய்பிளந்து
இரைகிறது தன்னை
பரந்து விரிந்த வனம்..!

தத்தளிப்பில்
யானையொன்றும்..
எறும்பொன்றும்..
படுகுழி நிரம்ப வெள்ளம்..!

அம்மணமாய்..
ஆதாம் ஏவாள் தலைமுறைவாசிகள்
இரைதேடி , வழிபோக்கர்களென ..!

யானை முதுகிலேறி
பொந்திற்கோடும் எறும்பு
சற்றுமுன் சமைத்து உண்ணப்பட்டது..!
மற்றும் ,
யானைதின்று தன்தாகம்
தீர்க்கிறது படுகுழி..!

பகலை நுண்ணியமாய் பிரித்து
இரவின் விரிப்பில் விரவி
வெட்டி வீழ்த்தப்படுகிறது போர்முனை ,
வெறிக்க வெறிக்க
வழிதப்பிய கனவுகள்..!..


http://www.thinnai.com/?module=displaystory&story_id=310022011&format=html

நன்றி திண்ணை..

Tuesday, February 16, 2010

மழலை பாஷைகள்


அம்மா பிடிக்குமா..
அப்போ அப்பாவையும் பிடிக்குமா..
என்னது.. இம்மாதிரி கேட்பவர்களையுமா.....
சின்ன குழந்தைகளின்,
உதட்டசைவிற்கும்
கையசைப்பிற்கும்
உங்களிடமேதேனும் விசாரிப்புகளிருந்தால்
தந்துவிட்டு போங்களேன்..


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3609:2010-02-16-08-15-50&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று..

Saturday, February 13, 2010

மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு..!


புன்னகைத்து திரும்பியவேளை
கைபற்றி குலுக்குவாளென நானும்
அழுத்தமான முத்தமொன்று
பதியவிடுவேனென்று அவளும்
யோசித்திருக்கலாம்..!

எல்லாமும் ...
காற்றின் ரீங்காரத்தில்
கசிந்து கொண்டிருக்கிறதென
எதுவுமே நிகழாத
விடைபெறுதலொன்று
மறுசந்திப்புக்கான ஆதியாய்..!

ஒளிந்திருக்கும் காதல் ,
காதல் கவிதையென
பிரகடனப்பட ..
அவளொருவள் அனுமானித்தாலே
திருப்தியென்ற பாசாங்குடன் ,
வார்த்தைகளற்று நீள்கிறது..

வண்ணத்துப்பூச்சியும்
சிறகுகளைசைக்கும் சிறுமியும்
முந்திகொண்டனர் எனக்கென..!


http://www.thinnai.com/?cmd=displaystory&story_id=809082827&format=html

நன்றி திண்ணை..

Wednesday, February 10, 2010

எதற்கேனும்..


அலட்சியமற்ற
இரு சக்கரமொன்றின்
டயர்கள் முகர்ந்த
நாய்குட்டியொன்றின்
இரத்தம்
நுகர்ந்த நாசித்துளை
எதற்கேனும் எழுதி தீர்த்திருக்கலாம்
சாவுகவிதையொன்றை இந்நொடி .

கவன ஈர்ப்பற்ற
நாய்குட்டி கதையெழுதும்
விரல்களின் நகங்கள்
கண்ணீர் பீய்ச்சியடிக்கும் இவ்வேளை..
எதிர்பக்கமாய்
பிறிதொரு நாய்குட்டிக்கு
பிறிதொருவன் வழிவிடுவதையும்
சொல்லியே ஆகவேண்டும் ..!


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2483

நன்றி யிர்மை..

Tuesday, February 9, 2010

கையிருப்பு ..


ஒருபோல அமைவதில்லை
எல்லா பகல்களும்..

தெருவோர சிறுவனொருவனின்
கிழிந்த சட்டைபை
ஞாபகபடுத்துவதில்லை என்னை..

பூக்காரசிறுமியின் பூக்கள்
அழகுபடுத்த போவதில்லை
அப்பூக்கார சிறுமியை ஒருபொழுதும்..

அவளைப் பற்றிய பாடலொன்று
கேட்டுவிட முயற்சிப்பதில்லை
எல்லா பேனாமுனைகளும்..

அவன் வீசியெறிந்த நட்பு
காகிதம் கிழிக்க தயங்குவதில்லை..

காரணமற்ற கனவுகளை யெழுத
வாய்ப்பதில்லை வாய்ப்புகள்..

எல்லா இரவுகளும்
ஒருபோல அமைவதில்லை..


http://www.thinnai.com/?cmd=displaystory&story_id=310020614&format=html


நன்றி திண்ணை..

Saturday, February 6, 2010

இலையுதிர் காலம்..


செய்தொழிந்த காலம்
தவறடிபட்டு சரிய,
மீண்டுமொரு
மின்னல் பற்றி
இயங்க - இயக்க
மனப்படவில்லை மாயங்கள் !!

அன்றிரு பறவைகள்
எச்சமிட்ட மரம் ,
இலைகள் கசக்கி
வெற்றுவேர்களுடன்
காயப்பட்ட சுற்றமாகி ..

இந்நாளின் கடிகாரங்கள்,
காலத்தை
வாழ்வின் திசை திருப்பிவிட்டு..
அதிகப்பிரசங்கக் காதலை
கானல்நீரென்ற
பாலையின் பாடுபொருளாக்கி,
கவிதையொன்றிற்கென
மீட்டுகிறது என்னை..!


http://keetru.com/index.php?option=com_content&view=article&id=3176:2010-02-06-06-47-19&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று..

Monday, February 1, 2010

தூசிநெளிந்த டைரி பக்கங்களிலிருந்து..!


பிரிதொரு மகரந்தப் புல்வெளி
பிரிதொரு நெருக்கமான இருக்கை
மற்றுமொரு தலையசைவு
மற்றுமொரு சந்திப்புக்கென.....
இச்சந்திப்பின் ஓராயிரம் அரவணைப்புகள்..

எத்தனையோ பகிர்தல்
எத்தயக்கமுமின்றி..
காதலுக்கு மட்டும் மௌனம்
பரிசளிக்கப்படுகின்றது
எக்காரணமுமின்றி..!

நீயும் சொல்வதில்லை ..
நானும் சொல்லப்போவதில்லையென்றே
அனிச்சையாய் பரிமாறப்படும் காதல்..
அன்றைய சந்திப்பிற்கான வெட்கங்களை
நமது தலையணை கீழே
சேகரிக்கத் துவங்கிவிடுவோம்
யாவரும் அறியாது
இவ்விரவு முதற்கொண்டு,
இப்படியாக முடிந்திருந்ததொரு காதல்கவிதை ..!


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2990:2010-02-01-05-53-09&catid=2:poems&Itemid=88


நன்றி கீற்று..