Saturday, September 28, 2013

உங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை





ஒரே ஒரு நட்சத்திரம்
அதுவும் பொன் நட்சத்திரம்
இங்கே இங்கே
இதே அறையில் என்னுடன் தானிருந்தது

தேடிக்கொண்டிருக்கிறேன்..

துல்லியமாக சொல்வதற்கில்லை
ரணம். 

***




தெருமுக்குப் பைத்தியக்காரக் கிழவனை
ஞாபகப்படுத்தும்
கவிதையை
நான் எழுதவே போவதில்லை.

***





வண்ணத்துப்பூச்சியின்
பகலொன்றில்
சிலுவையின் பாரமென இலைமீது பனித்துளி

***




பற்கள் தளிர்விடா குழந்தையைப்போல சுண்டு கொண்டு கவ்விப் பிசைந்த உனது இளமுலைகளின் அடிநாதம் நினைவுஇடிக்கில் விசும்ப அனற்காற்றாய் இந்த இரவு ஒரு கவிதையை எழுதிச்செல்கிறது. மலையுச்சி மௌனமாய் ஒரு சிறுகீறல். பசி பசியைத் தின்னும் உன் எழில்உருவை கண்கள் வீங்க முகர்ந்துவிட்டு நான் உறங்கிப்போவேனோ? அல்லது, மூடிய இமைகள் மூடியபடியே எப்பொழுதுக்குமாய் திணற அருகமர்ந்து பெருங்குரலோங்கி அழுவாயோ நீ? 

அறம்




அடுப்படிக்குள் ஒழிந்துகொண்டிருக்கும்
பூனைக்கு இருக்கும் இதயம்
யாருக்கு கவலை? என்ற கவிதையில்
ஆயிரத்தெட்டுப் பிழை இருந்தபோதும்
கண்ணீர் சொட்டும் என்னை
ஏன் வெறுக்க வேண்டும்
என்ற கேள்வி
நீ கேட்கிறாய்.

நல்லது..

மேலும்,
ஒரு நதியின் உடலில்
ஏன் இவ்வளவு நட்சத்திரங்கள்?

புன்னகையா பதில்
அல்லது
கண்ணீரா பதில்

அறம்.

காற்றில் உடையும் அழுகையின் குரல்





மிருதுளா
தன் சின்னச் சின்னப் பாதங்களால்
வீடு நிறைய அங்குமிங்கும்
ஓடிக்கொண்டிருக்கிறாள்

வீங்கிய மௌனத்தின் விஷப்பற்கள் திறந்து
முடிவாகச் சொல்லிவிட்டாள்
வித்யா

கண்ணாடியில் மண்புழு ஊர்வதென
பிரதியிட்டப் பார்வையுடன் அமர்ந்திருந்தான்
பிரவீன்

சின்னச் சின்னப் பாதங்கள் உருண்டு
வெறுமனே குரலாகி உதிர்ந்தது
பெருவெளியெங்கும் அழுகையின் கேவல்

நீ தான் சாத்தான்..
நீ தான் துர்தேவதை...
என மாற்றி மாற்றி விரல்நீட்டிக்கொண்டிருந்தார்கள்  
காலத்தின் கதாப்பாத்திரங்கள்


குழந்தை தானாகவே முத்தம் கொடுக்கிறது





கிழக்கின் திசையிலிருந்து எழும்பிய பறவை
வானை அளக்கமுடியாதபடி
அதற்கும் அப்பால் அதற்கும் அப்பால் என..

தெய்வத்தின் கருணை
துயரத்திற்கு
தன்னை மூடிக்கொண்டிருப்பது  
சுகம்.

கவனித்தீர்களா?
அவ்வளவு வேலைப்பாடுடைய அரங்கத்தில்
சிறியதாய் மிகச் சிறியதாய்
வந்து நிற்கிறது
மரணம்

வேதனை






புல்லாங்குழல் வேண்டுமே வேண்டுமாம்
மகள் உதயமொழி
அழுகிறாள்

உன் மூன்று நாள் உதிரம்
வெயில்மீதேறி மிதக்கும் என் துடிப்பு,
வலிக்கிறது வலிக்கிறது வலிக்கிறது...

இது மழை இரவு
இது கோடை பகல்
இது பிழை
இது வன்மம்

“ நான் ஏன் நீயாகப் பிறக்கவில்லை “

நெஞ்சடைத்துச் சாகிறான்
இதயத்தை வரைந்து காட்டுபவன்

புல்லாங்குழல் இசைக்கப்படுகிறது.

உதயமொழி சிரிக்கிறாள் பார்
என் உதிரமே!  

Sunday, September 15, 2013

மிரட்சி





சிறு இலை நான்
பனித்துளி
அவள் கண்ணீர்

என்ன ஆகும்
பாறைமீது பாறை.

தொலைவுக்கு அப்பால்
ஓடிவரும்
எறும்பிற்கு
ஏன் இத்தனைக் கால்கள்?

அலறல்





தீரவே தீராதப் பசியுடன்
பிம்பங்களைப் பெருக்கும் கண்ணாடியாய்
நம் வக்கற்ற ப்ரியத்தின்
வாள்முனையில் முட்டும் எண்ணிலா முகங்கள்
முகங்களே அல்ல.

எனக்கு நானே கதற கதற கழுத்தறுத்து
ரத்தம் பீறிடும் கனவிலிருந்து
விழும்
கண்களைத் தாங்கி
சுடர்விட்டு அலறும் நம் மனமைதானத்தின் பெருந்தாபம்
குளிர்.