Friday, August 20, 2010

நேசப்பரிபாஷை..!


கடல்மேல் பறவையாகும் வானம்!

போன்றதொரு நேசப்பரிபாஷையினை
விழிகளிரண்டிலும் அழுந்தப் பிடித்தவளாய்..

என்னை மிக நெருக்கத்தில்
பருகச் சொல்லிக் கெஞ்சுகிறாள் !

அப்பொழுதும் என்னை நான்
மிகப்பத்திரமாக மௌனமாகவே
தொலைத்துக் கொண்டிருந்தேன்..!

காய்ந்த அந்த ஒற்றைரோஜா இதழ்கள்
மழையின் ஈசல் போல் 
அவளது மென்விரல்களில்
தன்னைச் செத்துக்கொண்டிருந்தது..

அப்பொழுதும் மௌனமாகவே வைத்திருந்தேன்
என்னை நான்..!

பிரிவின்..
கையடங்காக் குருதியினை... 

ஒரு முத்தத்தில்..

எரித்துவிடத் தயாரானவாளாகி,  
எனது வன்விரல்களை
மெல்லப் பற்றிக் கொண்டு
அழ.. அழ.. அழுதேவிடுகிறாள்...

நான் பெருமழையாகி
அவளை இறுகக் கட்டிக்கொள்கிறேன்..

பின் ஒருவானவில்லின் மேல்
இருவரும் கைகோர்த்து நடக்கின்றோம் !!

வண்ணத்துப்பூச்சிகளும்..
காதலும் ( "காதலென்ற ஒற்றை வார்த்தையில் அடங்கிவிடுவதல்ல அது!" )
எங்களுக்கானது.. எங்களுக்கானதே..!   


நன்றி உயிரோசை..   

Tuesday, August 10, 2010

நிலாவிளக்கும் மௌனஇரவும்..!



மழைநேரத்துக் குடைக்கும்
வெயில்மதிய நேரத்துக் குடைக்கும்

இடையானதொரு மெல்லிய ஊடலாய், 

தயங்கித் தயங்கி.. 

செதிலுரிகிறது வார்த்தைகள்,
பரிசுத்தமான கூடலுக்கு ! 

பிறிதொரு பரிச்சயப் பொழுதில்..
 
நிர்வாணம்
உச்சிமுகர் சொல்லாடலில் தழைக்கும்,
 
இந்நொடிவரை யாதொரு பிசிபிசுப்புமின்றி
மருகி அசைகிறதொரு நிலாவிளக்கு !

தயங்கித் தீர்ந்த கற்பனைக்கடலில்

தங்கமீன்நிற இரு பறவைகளின்
வெட்க மௌனங்களும்
முழுமையாய் இசைக்கத் துவங்க, 

அப்பேரலையின் வெளியெங்கும்
இயல்பானதொரு படுக்கையறைக் காட்சி ! 

எங்கோ ஒரு படுக்கை புணர்ச்சி கழிந்து
புன்னைகையோடு விடுபடலாம். 


நன்றி உயிரோசை..    

Monday, August 2, 2010

அரேபிய ராசாக்கள் 13..


மழைபோல் பெய்யும் வெயில்,
எழுத எழுத எழுதிவிடு
வரியைப் போலல்ல வாழ்வு.

மலரென விரியும் இருள்,
பிழையாயினும்
வக்கற்று எரிகிறது
இளம் மூங்கில்..

மெல்லப் பரவும் காற்றின் திசையில்

ஒற்றைச் சிறகின் நிழல்,
புனைவிரவின் ஈர நெடி.

ஒரு அரேபியா
ஒரு பாலை
ஒரு கானல்
ஒரு நிஜம்.

யாசிப்பு யோசனைக்கு மறுதலித்தும்,
ஒலி என்பதைக் காட்டிலும்
இசையெனச் சொல்லிவிடுவது
ஆகச்சிறந்தது.


நன்றி உயிரோசை..