Saturday, February 16, 2013

ஆராதனா எனும் பேய் 38



38.

இருண்ட மழையின் சொட்டுகள்
படர்ந்து ஆடும் பைத்திய அகத்தில்
சுடர் பெருகும் இச்சாமம் ஒழிய,
நீ விட்டுப்போன நிலத்தை
தற்சமயம்
பதிமூன்றாவது மாத்திரையோடு
விழுங்கிக் கொண்டிருக்கிறேன் ஆராதனா
 
ஜன்னல் கதவுகளை அடைத்தாயிற்று
கண்கள் உருள்கிறது..

சொல்ல மறந்துவிட்டேன் ஆராதனா
நாளை
"ஸ்போர்ட்ஸ்டேய்"க்கு அழைத்திருக்கிறாள்
ஆறு வயது நம் மகிழ்மொழி
உறங்கும் முன் அவளுக்கு
அம்மா, சாமி கதை சொல்லியிருந்தேன்
இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம்
(உன்னை,உன்னுடைய முத்தமும்..)

***


39.
முன்பொரு
பெருமழைக் காலம் ஒன்றின்
அந்தி சாயும்வேளையின் பட்டர்பிளைக்கு
நான் முழுதும் ஒப்புக்கொடுத்த என்னை
மீட்டெடுக்கும் போலுள்ள உன் அருகிருப்பினை
வரையத் துவங்கியிருக்கும்
இந்த கலர் இரவில்

சலனமற்றிருந்த எனது பெருநதி நீந்திச் செழிப்பது
கண்டும் ஏன்

மௌனக் கானகத்தின் பச்சையத்தில்
நீயொரு
சிறு பிள்ளையாய் குதித்துக் குதித்து
விளாயாட்டுக் காட்டுகிறாய்
ஆராதனா!

***


40.
கூடடையா தாய்ப்பறவையின்
அலகில் விசும்பும்
குஞ்சுப் பறவையின் பெருகும் பசியாய்
வளரும் காத்திருப்பினில்
மரித்து மரித்துப் புசிக்கிறேன் பெண்ணே
என்னை நானே
என்னை நானே

தொலைவில் தெரியும் கடல்நிலவாய்
அருகில்வரும் அது நீயா?
அது நீயா?
ஆராதனா அது நீயா??

***

http://www.vallinam.com.my/issue49/poem1.html








1 comment:

வே.நடனசபாபதி said...

தங்களது வலைப்பதிவை இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_7.html ) வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். காண்க.