ஒரு திரையென
நீ வீசிய
நீல விண்ணின்
அந்திமப்
புழுதியின் பாரம் தாங்காது
திரும்பி
வருகிறேன்
புனே மாநகரத்தின்
பதினெட்டு
அடுக்கு அப்பார்ட்மென்டின்
மேல்தளத்திலிருந்து
குதிக்கிறாய் நீ
(அது ஓர்
கள்ளஆட்டம்)
CARING என்ற முகம்
பழுத்த அபத்தம் தொட்டு
அழுகிறாய்
கூச்சலிடுகிறாய்
கோபிக்கிறாய்
கண்ணைத்
துடைத்துக் கொள்கிறாய்
சண்டையிடுகிறாய்
புன்னகைக்கிறாய்
அழுகிறாய்...
எதுவும் பேசாது
எழுந்து
டீக்கடைக்குச் செல்கிறேன்
தேநீர்
குடிக்கிறேன், சிகரெட் பற்ற
வைக்கிறேன்
திரும்பி
வருகிறேன்
திரையின்
பாரம் தாங்காது
வாசற்படியில்
கால் தடுக்கி
பின்னந்தலையில்
அடிபட்டுச் செத்துப்போகிறேன்.
பின்வருகிற ஒரு
அந்தியில்
திரையை
விலக்கிவிட்டு
ஸ்கூட்டியை
உதைக்கிறாய்..
அது
பியூட்டி
ஃபார்லருக்குச் செல்கிறது
No comments:
Post a Comment