26.
பேசும் பொம்மைகள் வாங்கி வருவதாக
கடல்களுக்கு அப்பாலிருந்து கொஞ்சியவனிடம்
மழைக் கிழமையின் ஈரத்தை தெளிக்கிறாள்
அனன்யா
தனது முறையில் வழக்கமாய்
கோடையை சிலாகித்துத் தேயும்
அனன்யா அம்மா
எப்பொழுதும் போலல்லாத மௌனியாகிறாள்
கொஞ்சம் கொஞ்சமாய்
விடுதலையை இரைஞ்சத் துவங்கியபடி
பெருங்கானல் படரும் உடைந்த உதடுகளோடு
அணைக்கப்படுகிறது ஈரப் பார்வைகளுடைய
விளக்கு
***
27.
ஈரத்தின் கதகதப்பு அள்ளும் வாஞ்சையுடனான
சப்தம் அற்ற உன் மென்பார்வை
சிதறிக் கிடக்கும் ஈச்சம்பழ மணத்தில்
அடர்துயர் மோதி துரத்தப்படுகிறேன்
மூச்சிரைக்க
முத்தத்தின் கட்டாயம்
அல்லது
நிஜத்தின் புனிதத்தில் சரிய விழைகிறேன்
உனது தொலைகுரல் மீள்கையில்
நினைவில் வற்றாத நதி மீது
சிறு பிள்ளையின் மழையென
பூமிக்கும் வானத்துக்குமாய் துள்ளித் துள்ளிக் குதிக்கும்
எனது முழுநீள வர்ணக் கடல்
***
28.
கிழிபடும் கிழமைகளருகே நின்று
விடுதலையை வாசித்துக் காட்டுதல்
கூடும் கிழமையில்
பொருட்களின் பட்டியலை வாசித்துவிட்டு
அமைதியாக நகரலாம்
ஈட்டுதலின் பொருட்டு தவித்து இருத்தலென்ன
அத்தனை சுலபமாவென
***
நன்றி கல்கி
No comments:
Post a Comment