Tuesday, November 22, 2011

இயலாமை






அன்பு ததும்ப அழைப்பதாய் அழைக்கிறாய்
வரவேற்பறையில் அமர்ந்து விவாதிப்போமென்கிறாய்
ஒரே ஒரு நாற்காலியே அங்கு போடப்பட்டிருக்கிறது
அமர்ந்து கொள்கிறாய்
குவளை நிறைய அவமானத்தை தருகிறாய்
தேநீரெனப் பருகச் சொல்லுகிறாய்
நீ மட்டுமே பேசிக்கொண்டிருகிறாய்
'ம்' சொல் என்கிறாய்
நல்லது என்கிறேன்
குரூரமாய் புன்னகைக்கிறாய்
நடந்தவைகளை மறந்து விடுமாறு கட்டளையிடுகிறாய்
நடந்து கொண்டிருப்பவைகளின் குற்றவுணர்ச்சி ஏதுமின்றி
பின் வெளியேறுமாறு உக்கிரமாய் கண்ணசைக்கிறாய்
இறைந்து கிடக்கும் அவமானத்தின் நிழலை இறுக வாரி
கழுத்து திருகி கொன்று விடலாமென குனிகிறேன்
உனது முதலாளித்துவம்
எனது முதுகில் ஓங்கி ஒரு போடு போடுகிறது.


நன்றி உயிரோசை..


Monday, November 14, 2011

திரும்புதல்




உனது எல்லா விடுபடுதலிலும்
எனது பெருங்காதலே
மீச்சிறுபுள்ளியென
ஆகச்சிறந்த கவிதையொன்றை
விமரிசையாகக் கொண்டாடுகிறாள்
நம் இருவருக்குமான தோழி.


நன்றி உயிரோசை..

Monday, October 24, 2011

அவர்கள்







உன் இருள் நிழலில்
மின்னிப் பறக்கிறது
என் தூய ஆவி.

இருப்பது போல்
இல்லாமலிருத்தலில்
இருந்ததை விட
அத்தனை வெளிச்சம்
அத்தனை அடர்த்தி
அத்தனை மென்மை.

கானகம் நுழைந்து
காணாமல் போவதும்
திரும்பி வருதலென்பதும்
ஒரே மாதிரியான நிகழ்வே
அல்லது
"அல்லது" அல்லதாகவே இருக்கட்டும்.

நீ சொல்வது போல்
நான் அந்நதியென
இல்லையெனினும்
நாளைய மழையின்
முதல் துளியாகவே
பிரிகிறேன்.

பச்சைப் புற்களின் நடுவே
நல்ல பாம்பொன்று
சுருண்டு கிடக்கிறது.
நான் அதை நீ என்கிறேன்.
நீ அதை நான் என்கிறாய்.

அது அதுவேயில்லை
வேறொன்றென சொல்லிப் போகிறார்கள்
கடக்கும் இவர்கள்.





நன்றி உயிரோசை..


 

Friday, September 16, 2011

நிலைப்பாடு




சொற்களின் காட்டுக்குள்
பெருந்தீயாகப் பரவுகிறாய்
உனது இருபெனும் மாயையினை
நிலைப்படுத்த.

பின்னொரு பொழுதினில்
தனிமையின் பெருங்கடலை
ஓவியமாக்க முயற்சிக்கிறாய்
எரியும் ஒற்றை அகல் வரைந்து.

முன்னெப்பொழுதோ
பெய்யாதிருந்த  மழை
ருத்ரதாண்டவமென
தீபத்தை குரூரமாக விழுங்கிப்போகும்
இவ்வேளையினில்

மேலும்
அவனைப் பற்றி விரிவாக
உரையாட ஏதுமில்லை.


நன்றி உயிரோசை..

Wednesday, July 13, 2011

பிறகு




தற்கொலை செய்து
இரு தினங்களுக்குப் பிறகு
மிக அழகாக ஒப்பனை செய்துகொண்டு
ஒரு மெல்லிய புன்னகையோடு
வந்தமர்கிறாள் அபர்ணா.

அந்த அபத்த கனவையும்
அந்த வதையுள்ள ஏமாற்றங்களையும்
அந்த முகமூடி மனிதர்களையும்
அந்த துரோக ஊசியின் கூர்முனையையும்
அந்த நம்பிக்கையின் உடைந்த சில்லுகளையும்
அத்தனை நிதானமாகப் பேசத்துவங்குகிறாள்.

பிறகு இருவருக்குமாக
நல்ல சுவையுடைய தேநீரை
தயார் செய்கிறாள்.

நான் என் கனவின் ஓட்டைகளை
சரி செய்வது பற்றி
தீவிரமாக எண்ணத் துவங்குகிறேன்.

சலனமேதுமின்றி அவள்
என் விரல்களை கோர்த்தவாறு
தான் செத்துப் போயிருந்த தன் கனவை
சின்னச் சின்னத் துண்டுகளாக்கி
தேநீரோடு சேர்த்துப் பருகுகிறாள்.

நானும்
நானெனும் பிம்பமும்
கொஞ்சம் கொஞ்சமாக
உடைந்து சரிகிறோம்.

Monday, July 4, 2011

பெருவனம்







பெய்யாத மழையின் நிலமெங்கும்
பிரிவின் வாதை
என்கிறேன் நான்.
அது
அன்பின் வதை, 
பேய்மழையின் நிலமெங்கும் நீ
என்கிறாள் அவள்!


நன்றி உயிரோசை..


Monday, June 27, 2011

அரேபிய ராசாக்கள்.. 16









மீளத் திமிரும் கானலென
பாலையெங்கும் தவித்தலைகிறது
நீ இட்டனுப்பிய உப்பு முத்தம் !

சொற்களின் வனம் புகுந்த
ஆகாய நேசம்
கடலின் நட்சத்திர எதிரொளிக்கான
காத்திருத்தலில் !

வாழ்வின் பெருவெளியில் சிக்கிச்
சாயும் கறுநிற நிழல்களனைத்தும்
ஜனிக்கும் மரண பிம்பங்களாகவே
மொழி பெயர்க்கப்படுகிறது..!




நன்றி உயிரோசை..




















Monday, June 20, 2011

இயல்பின் நிழல்







ஒரு அபரிமிதமான நம்பிக்கை
உடைபடும்போது எழும் மன அழுத்தத்தின்
நம்பகத்தன்மையை தீர்க்கமாய் அகப்படுத்தியவாறு
தொடரும் இருப்பினில், 
சட்டென நுழைகிறாய்
ஆட்காட்டி விரலளவு அன்போடு !

சற்றும் எதிர்நோக்காதிருக்கையில்
இயல்பின் நிறத்தை தெளிக்கிறாய்
இருப்பின் நிழல் எங்கும்.

சாயுங்காலத்தில் நழுவிச் செல்லும்
சூரியனின் வலங்கை பிடித்து 
இரவை உதிர்க்கும் நிலவின் பெருமுகத்தில்
உன் பெயர் பதிக்க
நானோ அலைகிறேன்
இவ்வறண்ட வெளியெங்கும்.

புரிதலின் பெரிய குழப்பத்தினில்
கால் நனைத்துவிட்டு வா 
விரல்களை இறுகப் பற்றிக்கொள்வோம் ! 


நன்றி உயிரோசை..


Monday, June 6, 2011

காதலின் வேட்கையோடு







உடலிலிருந்து உதிர்ந்து விழுந்த

நிழலை இறுகப் பற்றி
மௌனம் கலைக்கிறது
முகில்களடர்ந்த இரவு..

உயர  உயரப் பறக்கவிடப்பட்ட
வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களை
தன்னிடத்து வைத்திருக்கும்
மெல்லிய சிறு சிறு விரல்களைப்போல,

மகிழ்வின் ஒப்பற்ற கடலில்
மெல்ல இறங்கும் இந்தப் பௌர்ணமி நிலா
ரகசியத்து இட்டுச்செல்கிறது
அன்பின் ஒப்பத்தை.!

கூட்டத்திலிருந்து
கைகள் அள்ளிய ஒற்றை நட்சத்திரம் ,
அவளுக்கென தருகிறேன்.

நிழலென உதிர்ந்தவள்
வெட்கத்தின் புதிர் புன்னகையோடு
கட்டிக்கொள்கிறாள்
இரவு நிறைய நிறைய.!


நன்றி உயிரோசை..


Monday, May 30, 2011

தோல்வியின் பெருவெளி !







அச்சொல் விழுந்தொடிந்த கணம், 
நதியென அலையும் நினைவின்
பல்லக்கில் ! 

முன்னெப்பொழுதுமில்லா
அடங்கா வெறுமையுடன்
வறுமை படர்ந்த விழிகளென
பனித்திருக்கிறது வெளிச்சம்.

பிரிவின் உடைந்த நாற்காலியில்
இருத்தல் மெல்ல நகர்கிறது
காற்றில் ஒரு சிறு இலையினையொத்து..

என் தீக்கனவில்
அவளின் புது வீட்டை
பழைய சாக்கடைப்
பின்தொடர்வதாய்
எழுதி வைக்கிறீர்கள் என்னை..!

தோல்வியின் வெளியெங்கும்
எனது ஒற்றைக் காதல்.


நன்றி உயிரோசை..