Monday, August 5, 2013

எங்களைத் தேடாதீர்கள்



அளவுக்கு அதிகமாய் மயிர் அப்பிய தளர்ந்த முகத்தை எங்காவது கண்டால் கடந்து போகாதீர்கள், அது என்னுடையது தான்.
அளவு என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும் ஆகையால் குழப்பம் வேண்டாம், அந்த முகத்தின் கண்களில் நீங்கள் இதுவரை கண்டிறாத சோகம் எப்பொழுதும் வியர்த்துக்கொண்டிருக்கும். கைப்பற்றிக்கொள்ள அந்த அடையாளமும் உங்களுக்கு அவ்வளவு லாவகம் இருப்பதற்கு இல்லை, தளர்ந்த முகத்தின் உதடுகளில் ஒரு பெண்ணின் ஆலாபனை அழுந்தப் பொதிந்திருக்கிறது. குருதி நிறமும் நட்சத்திர வடிவமும் இணைந்தாற்போல ஒரு மச்சம் வலது புருவத்தின் ஓரத்தில் மகோன்னதமாய் அதனை ரசித்துக்கொண்டிருக்கும்..
பாருங்கள்,
அடையாளம் கண்டுகொண்டுவிட்டீர்களா?
கண் விழிக்காத நாய்குட்டியைத் தூக்குவதென இரண்டு உள்ளங்கைகளையும் குவித்திணைத்து அந்த முகத்தை எடுங்கள். நான் எங்கே எனத் தேடுகிறீர்களா?
வேண்டாம். உங்களுக்கு அந்த அளவுக்கானத் திடம் நான்தான் தரவேண்டும்.

அந்த முகத்தை நீங்களே அணிந்து கொள்ளுங்கள். அணிந்துவிட்டீர்களா?

அங்கிருந்து வெளியேறி அடிவானத்தில் பறக்கின்ற அப்பெண்ணின் ஆலாபனை என்னை நெருங்குகின்றது.

இனி
உங்கள் காதலியை
உங்கள் பரிசுத்த அன்பை
உங்கள் பரிசுத்த இருப்பை
தேடிப்புறப்படுங்கள்    


No comments: