“ஓவென” தேம்பித் தேம்பி
அழுதுகொண்டிருக்கும் அவளுக்கு
யாராவது கொஞ்சம் உணவளியுங்கள் ப்ளீஸ்
தனிமையின்
பரிபூரண நிர்வாணத்தின் மீதேறி
ஒய்யாரமாகச் சிரிக்கும் கண்ணாடியை
அறை முழுவதும் சிதறவிட்டிருக்கிறேன்
தனக்குத்தானே
மணிக்கட்டு நரம்பு அறுத்து
தளர்ந்துக் கிடப்பவனின் இதயம்
அவள் வந்து சேர்வதற்குள்
நின்று போயிருக்ககூடும்
பரிசீலனையேயின்றி
புத்தம்புதிய வெள்ளைநிற கைத்துண்டில்
எனது எல்லா அடையாளங்களையும் கொட்டி
திமிர திமிர எரித்துவிட்டிருந்தேன்
சாம்பலை நுகர்ந்து
வியாபிக்கும் ப்ரியத்தின் நறுமணத்திற்கு
“உச்” கொட்டியபடி நீங்கள் கடந்துபோகும்
சொற்ப நேரத்திற்கு முன்
அறையிலிருந்து காலிசெய்தாக வேண்டும்
கிரேன் உயரத்திற்கு நீண்டுகொண்டிருக்கும்
என்னுருவத்தை
No comments:
Post a Comment