Tuesday, May 11, 2010

யதார்த்ததை உள்ளங்கையில் சொருகிவிடுதலென..



இத்தோடு..
முடியப்பெற்று விடுமெனதான்,
தகித்துக் கொண்டிருந்தது...
மௌன பீடம்.

சந்திப்புகளின் வாசமும்..
சிநேக கைகுட்டையும்,
எப்பொழுதுமே...
ஒரு நெருடலாகவே
அமிழ்ந்து விடுகிறது
எல்லோருக்குமான இதயத்தில்.

கனங்களும்..
கணங்களும்..
ஒருசேர நிர்ப்பந்தித்து வைத்திருக்கும்
மௌனபீடம் என்பது ..
அத்தனை சுலபத்தில்
உடைபடுவதானதாக அல்ல.

புரிதலும்..
புரிபடுதலும்,
எளிதேயெனும்
கோர்வையாயிருந்தால்..
அவள் உள்ளங்கையில்
சிவப்புபட்டிருக்கும்
அம்மருதாணி சிவப்பைப் போல
எவ்வளவு அழகானதாக
துளிர்ப்புறும்
இந்த வாழ்வென்பது.


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2893

நன்றி யிர்மை.

Monday, May 10, 2010

...................



நிகழ்ந்து முடிந்தது மரணம்.. 
நட்சத்திரங்களில்லா வானம்
அழுக்கு!

எவருக்கும் புரிவதில்லை
அவளுக்கு மட்டும் புரிவதேயில்லை.. 

Tuesday, May 4, 2010

பனிக்காடு.



நிலவறையில்
கடலுறங்குவதாக
எழுதிச்செல்லும்போது
கவிதையொன்றின்
சுவாசம் முட்டுகிறது !

இரண்டாம் பத்தி
இப்படிப்பிரிபடுகிறது
குளக்கரையில்
நிலவு துயிலுறுமாம் !

ஜீவநடமாட்டமேதுமில்லா
விழிகளிரண்டின்
மேற்பாகமுள்ள நெற்றிப்பொட்டில்
மாறி மாறி மீள்கிறது
மேகக்கூட்டம் !

மெல்லப் பனிவிலக்கி
அதிகாலைச்சூரியன்
ஆளெழுப்பும் பணியினை
நித்தமும் செவ்வனே செய்வதாகி
நிர்ப்பந்திக்கிறான் கடவுள் !

சாத்தானைச் சந்திக்கப்
புறப்படுகிறேன்!
யாரங்கே..?
திறவ கோலுங்கள்.. 
அவசரமாக வழி தேவைப்படுகிறதெனக்கு...

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2864

நன்றி யிர்மை.

Monday, May 3, 2010

எழுத்தின் வன்மம் .




வாசித்திருந்த
புத்தகத்தை
சாத்திவிட்டு
சலனமின்றி தொடர்ந்தது
அதன் ஞாபகங்களில்
மனப் பக்கங்கள்.
 
ஒரு கட்டத்தில்
நான் தொலைந்த
அதே நிமிடத்தை தொட்டுவிட
நடப்பு நிமிடத்தில்
தொலைபட்டேன்.

ஒரு முறைக்கு
ஒவ்வொரு முறையும்
தாக்கிவிடுகிறான்
எழுத்துக்காரன்.


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005022&format=html

நன்றி திண்ணை..

Sunday, May 2, 2010

...................



குறிப்பிட்ட..
இடமொன்றில்,
தீர்மானப்படுகிறது!
அவள் தீட்டாத ஓவியம்
மௌனமென்ற வரைபடத்துடன்.!

ரசிக்கும் காற்று
சிந்திச் செல்கிறது
இசையெனும் புள்ளியினை.!

தூர நின்று
கிளியின் வண்ணமொத்த
இலையின் பனித்துளி
வெட்கத்தை எழுதிச் செல்லும் பொருட்டு..

இக்கவிதை முடித்து வைக்கின்றது
முதல் முத்த ஞாபகத்தினை.!

Friday, April 30, 2010

இம்முறை கண்டிப்பாய் சொல்லப்பட்டிருக்கும் காதல்!



சொல்லியே ஆக வேண்டும்!
எப்படி என்பதுதான்
இன்னும் பழகிவிட முடிவதில்லை..

இப்படித்தான்
என்றால்..
அப்படியில்லையே
அப்படி வேண்டாமே
அடிக்கடிச் சொல்லிக்கொள்கிறேன்
எனக்கு நானே!

எத்தனை முறை
ப்ராக்டீஸ் எடுத்துச் சென்றாலும்
ஒரு முறையும் சொல்லிவிடுவதாயில்லை!

அதே மாதிரியானதொரு
சொல்லாதச் சொல்லோடுதான்
நடை கொண்டிருக்கிறேன்
இம்முறையும்!


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=7420:2010-04-30-03-56-19&catid=2:poems&Itemid=265

நன்றி கீற்று.. 

Tuesday, April 27, 2010

நேசங்களின் கூவல்..



பயணங்களில்,
பின்னிருக்கைகளின்..
தடம்பதிந்த வெற்றிலைச்சிவப்பில்
அடையாளப்படுத்தப்படும்
அவர்கள் முதியவர்களென..

வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகள் வளர்க்கும்
மழலைகளின் வயது கண்டு
தேடல்கள் தற்காலிகப்படநேரும்.

ஓரர்த்த ராத்திரியில்,
யர யரப் பறக்கும்..
எல்லோரையும் போல
எனக்கும் கனவுகள்..

நட்சத்திரங்களை வாசிப்பவர்கள்
இப்-போதைக்குக் குறைவென்றே
இருத்தல் கூடும்.

அவள் வராத வருகையை
சில பொழுதுகளில்
மழையுரைத்து நகர தீரும்!

நேசங்கள்..
நெய்திருந்த கவிதைகள்
நிரம்பி இசையும் காற்று வீசியதும்
முடிவுற்றிருக்கும் ஒரு மரணம்.!


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2833


நன்றி யிர்மை.

Sunday, April 25, 2010

குறிப்பின் தொடர்ச்சி..


கடைசி உரையாடலென கரைக்கப்பட்டிருந்தது ,
தேநீர் தீர்ந்தபின்னான கைக்குட்டையின் நுனியில்
ஒரு காதலும்
ஒரு நட்பும்
இரு மௌனமும்..!
அம்மேஜையின் விளிம்பில் இன்னும்
கேவிக்கொண்டிருக்கிறது கண்ணீர்துளியொன்று
கைகோர்க்க ஆளின்றி..


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=6895:2010-04-25-05-32-16&catid=2:poems&Itemid=265

நன்றி கீற்று..

Thursday, April 22, 2010

...................



அன்பின் ஆதாரங்களைத் திரட்டுதலில்,
கவனக் குறைவின் முரட்டுத்தனத்தில்..
பிய்ந்த எறும்பொன்றின் தலை, 
மிகத்தெளிவாய்..

...................



ஜன்னல்கள் திறக்கப்படுகிறது..
முன்னமே மழை தூறுகிறது..
அவள் வருவாளா !!

ஜன்னல்கள் அடைத்துக்கொள்ளப்படுகிறது..
மழை நின்றுவிட்டது..
வந்தவள் அவள் இல்லை !!