Monday, July 30, 2012

இருந்திருந்தும்




யாதொரு பார்வைக்கும்
அது  
ரோஜா இதழாக இல்லாமல் போவதை
அறிந்திருந்தும்

தேவதையின் சாத்தான் நிரம்ப விளம்பும்
ஆசிர்வாதம் பெற்றவன் நானென்பதில்
மிகுகர்வம் கொண்டு உக்கிரத்தாண்டம் பூண்டு
வியாபிக்கும் நமது காதலின்
நகக்கண் உபயோகித்து
ஒரு மெல்லிய ரோஜா இதழை
வரைந்து பார்க்கிறோம்

ஆலயத்து வௌவாலின் கூக்குரலோடு
நம்மை உண்ணக் காத்திருக்கிறது
பாசிப்படர்ந்ததொரு பெரும் பாறை

நன்றி உயிரோசை

வர்ணங்கள் பூசப்பட்டிருக்கும் பாவனை






கவிதைக்குள் அழைத்துப் போகிறாய்
அல்லது
அழைப்பதுபோல் பாவனை செய்கிறாய்

நீ பூசியிருக்கும் 
உன் மனைவிக்கும் மகனுக்குமான
வேதனைக்கும் அன்பிற்கும் நடுவில்
எட்டிப்பார்க்கும் என்னை

சொற்ப நொடிகளில் வெளியேற்றுகிறாய்

பின் 
மிகுசிரத்தையோடு ஒரு துரோகத்தை அழிக்க
மெனெக்கெடுகிறாய்

இன்னும் நான் முழுமையாக உள்ளிருந்து
புறப்படவில்லை என்பது
வாய்ப்பில்லைதான் நீ அறிந்திருக்க

நன்றி உயிரோசை


அன்பே







மேலும் சொல்வதற்கென்றால்
இத்தருணம் என்னோடு இல்லாத என்னை
கத்தி போன்ற உனதன்பு கொண்டு
மெல்லிய புன்னகை செய்து
விளையாட்டாக நகர்கிறாய்

நான் நின்ற இடத்திலிருந்தே
உன்னை வாழ்த்துகிறேன்
என்னைத் தீர்த்து

நன்றி உயிரோசை


Sunday, July 29, 2012

அள்ளிப் பருகவென







சிற்றெறும்புகள் சில 
சர்க்கரையில் புணர்ந்து கொண்டிருந்தன,  
பின்னிரவில்
நமது படுக்கையறைக்குள் நுழைந்திருந்த
குண்டு ஒல்லி ஜோடி எறும்பை
உனக்கு அறிமுகப்படுத்தினேன்

தேநீருக்குப் பதில்
இளம் மழைக் காலையொன்றில்
அள்ளிப் பருகு என
நீ வெட்கத்தைத் தருகிறாய்

நன்றி உயிரோசை


துயரத்தைக் கொண்டாடுதல்



யாருமற்ற தனித்த தீவில்
நிறைந்த இருப்பாய்
நீந்தப் பழகுதலின்
உனது ரகசியக் குறிப்பொன்றை
இறுதியில் களவாடுகிறேன்

சற்றே துயரத்துடன்
மனமீன்கள் கொத்தி உண்ணும்
என் அந்தரங்கப் பரிபாசையை 

கடல் மேல் துள்ளும்
இம்மழைத் துளிகள் தான்
எவ்வளவு அழகு

நன்றி உயிரோசை

Saturday, July 21, 2012

***



உன் அன்பின் இசை
மௌனத்தின் எல்லாப் பக்கங்களிலிருந்தும்
வேட்கையின் நிறம் கொய்யும் மழை
பெரும் நிலம் பெறும் தானே

Friday, July 20, 2012

ம்



மரணத்திற்குப் பின்னால்
மரணம் பேசும் நாம்
எதற்கு
இப்போதைக்கு
வாழ்வோம் வா
நிறைந்த இருப்போடு  


***







பெய்யும் மழை
நின்ற மழை
தீரா ரணம்

***






எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வை நகர்த்திப் போகும்
உந்தன் மனதை இவ்வளுவு வன்மத்தோடு உண்கிறேன்
நீயோ ஒரு துளி கண்ணீரும்
சேர்ந்தவாறே ஒரு சிறு புன்னகையும் பிரசவித்துவிட்டு
என்னைக் கொல்லாமல் கொல்கிறாய்

***



உடைந்து ததும்பும் கண்ணீர் உதடுகள் ஏந்தி அணைப்பாயா
மன்னிப்பாயா உனது ரோமக்கால்கள் கொண்டு
வாழ்ந்து விட்டுப் போகிறேன்
வாழ்வோடு