Monday, August 31, 2009

தேடல்..


முன்பொருநாள்
புகையிலையில் தொடங்கிய
நமக்கிடையேயான முரண்பாடு
பிற்பாடு நீ
பிரிவிற்கு என்னவெல்லாம்
காரணங்களறிய முயற்சிப்பாயோவென
பயந்தே தவிர்க்கிறேன்
நமக்கான சந்திப்புகளை..

சிறுபிள்ளை காலத்தில்
முற்றத்தில் மலம் கழித்தேனென
பாட்டி அடித்தது ..
அம்மா மார்களில் சாய்ந்து
அப்பாவிடம் கதை கேட்டது ..
எதிர்வீட்டு அக்கா கைபிடித்து
பள்ளிக்கு போனது ..
பக்கத்து வகுப்பு தேவியிடம்
இனகவர்ச்சியை காதலென புரிந்து
கணக்கு ஆசிரியரிடம் கொட்டுவாங்கியது ..
.............................................
இங்ஞனம் நீண்டுகொண்டே
நீயின்றி போன
என் எல்லா நிமிடங்களும்
என்னிடம் பொக்கிஷமாக ...

நினைவுகள் பொறுமையின்றி
நான் நீயென முண்டியடிக்கிறது
முன்னேறி வர...

எனையும்
எனைசேர்ந்த எல்லாமும்
என்னை தேட
நானோ...
விடுபட்டுபோன காதலையும்
விடைபெற்றுபோன உன்னையும்
கவிதைகளில் தேடிகொண்டிருக்கிறேன் !!

Saturday, August 22, 2009

கற்பனை காதலிக்கு 1

















கனவுகள் தின்றதுபோக
எஞ்சிய மிச்சஉயிர்
காய்ந்து படிந்திருக்கும்
கவிதைகளில் ...

சாகுமுன் வாய்ப்பு கிடைத்தால்
என் இதயம் பிடுங்கி
காதல்பரிசு தருகிறேன் ...

எனை தின்ற கனவும்
கனவை தின்ற கவிதையும்
என்னையும்
என் காதலையும்
முழுமையாய் உன்னிடம் சரணடைக்கும் ...

அநேரம் நீ
மலைத்து பேந்த விழிக்காமல்
புன்னகை செய்
இறுக்க கட்டிபிடி
முத்தங்கள் விட்டுகோடு
மெதுவாய் தலைகோது
விரல்களில் சொடெக்கெடு
உயிரோசை கேள் ...

காதல் களைப்பில்
உன் மடிசாய்ந்து
கண்சொக்கும் நேரம்
காதோரம் செல்லகடி கடி ...

பின் இருவரும்
கைகோர்த்துகொண்டு
தொலைதூரம்
நடக்க துவங்கலாம் .................

Wednesday, August 19, 2009

எச்சில் சமுதாயம் ..


காலி மதுகோப்பை
காலியாகவே நிரப்பபட
புரையேறிய பொழுதினில்
எழுதி தீர்த்துவிடுவதென ..

காதல்
வரம்..? சாபம்..?
நோண்டி நொண்டியடித்து
சாலையோரம் திரிந்தவனிடம்
குப்பைகளை
கண் , காது.. கபாலம்வரை
காயப்படுத்தி திணித்தனர்
பொதுவிட காதல்வாதிகள் ..

மாலை ஒழிய
தலையணையில் தலைசாய்க்க
எதிர்வீட்டு முதிர்கன்னி
ஞாபகத்தில் எழுந்தழ
காதலாவது , கத்திரிக்கையாவது ..

கண்களை இறுக்கி
மூட முயற்சிக்கையில்
வரதட்சணையும் விவாகமும்
புழுக்களாய் நெளிய
சரி, மூத்திரம் களைந்து
மீண்டும் முயற்சிப்போமென
கழிவறையை தாழிட்டால்
வெள்ளை பிசுபிசுப்பிற்கே
எத்தனிக்கிறேன் என்னை ..

எழுதவே கூடாதென்றிருந்த கவிதை
கடைசியில் கழிவுகள் துப்பி
எச்சிலில் நனைய ;
நானும் சாதாரணன்
என்னையும் சேர்த்தே
இச்சமுதாயம் .

Monday, August 17, 2009

கடற்கரையோர முத்தங்கள்..

மலம் கழித்து
மூத்திரம் தெளித்து
அதில் விரல்களிட்டு
வண்ணமென்று கத்தி
படம் வரைகிறார்கள் !!

வாய்பிளந்துகொண்டு
வேடிக்கை காண
என்பின்னால் நீயும்
உன்பின்னால் நானும் !!

சாக்கடை கொசுவில்
மலம் மொய்க்கும் ஈயில்
நாறும் அட்டைபூச்சியில்
உயிர்திசுக்கள் பொறுக்கி
இவர்களை செய்திருப்பானோ சாத்தான்
சர்சைபடுத்துவதாயானால்
மானம் கெடும் காதல் !!

சந்தேகங்கள் நிறைவுற
புள்ளியிட்டு தீர்க்க
ஒருமுழம் கயிறும்
ஆறடி குழியும்
அவசியப்படலாம் !!

யோசனைகளிலேயே
மூச்சுமுட்ட
கழுத்தறுந்து விழ
காதல் சாக
சீய்ய்.... போங்கப்பா .

Sunday, August 16, 2009

கற்பனை காதலிக்கு ...




காதலே..
காதலிக்க ஆசையா உனக்கு
கொஞ்சம் கண்ணை திற
என் காதலி வீதிவருகிறாள்...

அன்பின் ஆதாரங்கள்
நம்மிலிருந்து தொடங்கட்டும்
நானும் நீயும் காதல்செய்வோம் வா...

நான் நீ காதல்
மூவரும் இணைந்து விடுவோம்
திருவிழா இனி தினமும் தொடங்கட்டும்...

அட என்ன இது
ஊரிலுள்ள பெண்களெல்லாம்
உன் வீட்டு வாசலில்
ஓ..வெட்கம் வாங்க வந்தார்களாம்...

ஊரே வேடிக்கை பார்க்கபோகிறது
சாமி கண் திறக்கிறாராம்
நேற்று நீ கோவில் போனாய் என்பதை
உடனே எல்லோருக்கும் சொல்லியாகவேண்டும்...

பூக்களுக்குள் சண்டை மூட்டாதே
இனி நானே கொண்டுவருகிறேன்
உனக்கான பூக்களை ...

அட... உணர்ச்சிவசப்பட்டு
ஆணிகளை உதைத்துவிட்டு
உன் முகம் காண
கண்ணாடி கீழிறங்கி வருவதை பார்!!

சிறுபிள்ளைகள் போல்
அடம்பிடிக்கும் மருதாணிஇலைகளை பார்
தினமும் மாலைவேளையானால்
உன் உள்ளங்கை வேண்டுமாம்!!

இந்த நடனத்தை பார்
தேம்பி தேம்பி அழுவதை
உன் கால்கள் வேண்டுமாம்
வாழ்நாள் கடனாக!!

காற்றும் ஆசைப்படுகிறதோ
உன்னை காதலிக்க
எவ்வளவு அழகாய்
சண்டைபோடுகிறது துப்பட்டாவோடு!!

தீரதீர நான் தருகிறேன்
அடிக்கடி முத்தம் கொடுத்துகொள்
சின்ன குழந்தைகளுக்கு ...

தேவதைகள் மஞ்சள், சிவப்பு ..
வண்ண ஆடைகளும் உடுத்துமென்பது
உன்னை பார்த்தபின் தெரிந்து கொண்டேன் ..

ஒருமுறை நீ நனைந்தாய்
இப்பவும் மூடப்படாத ஜன்னல்கதவுகள்
மறுபடி மழை எப்போவரும் !!

தேவதை சிறகுகள் விற்பனைக்கு
என்ன வேடிக்கை பார்கிறாய்
அது நீ கிழித்துபோட்ட மிட்டாய்தாள்கள்தான் ..

இன்னும் ஒரேயொரு வாய்ப்புகொடு
நானும் பழகிகொள்கிறேன்
நகம் கடிக்க ..

உன் புருவங்களை காட்டிவிட்டுபோ
இங்கே பிறைநிலா காண
பயங்கர கூட்டம் ..

உனக்கெழுதிய கடிதங்களெல்லாம்
முதிர்கன்னிகளாக எனது பெட்டியில்
என்று மௌனம் கலைக்கபோகிறாய் !!

நான் ஆண்
நீ பெண்
வேறென்ன வேண்டும் காதலிக்க ??

வெட்கத்தின் வெப்பம்
மௌனம் உடைத்து
முத்தமாய் விழும்
காதலின் அடியாளமென ..

காமத்தின் பெருமை
பெருகுமோ ?
நம் காதலின்
உதவியால்!!

நான் பாதை
நீ பாதம்
உணர்வதில்லை காதல்
விதி வலி...

நான் எழுதுகிறேன்
நீ படிக்கிறாய்
காதல் ரசிக்கிறது ..

வார்த்தைகள் நீ
எழுதியது நான்
பரிசு கவிதைக்கு ..

காதல்
உனது அசிர்வதிக்கப்பட்டது
எனது சபிக்கப்பட்டது
மறைமுக தூதுவனாய் நான்!

Saturday, August 15, 2009

...................

காதல் தருணங்களில்
களைப்பாற அமர்ந்துபேசிய
மர தரைகளில்
இன்னும் பூக்கள்
உதிர்ந்து கொண்டுதானிருக்கின்றன
உன்னையும், உன்
புது- காதலையும்
ஆசிர்வதிக்க !!

கள்ள நோட்டு


இரைச்சலுடன் இருட்டறை
கூச்சப்படாமல் கருப்புமனிதர்கள்
இயங்கி கொண்டிருக்கிறார்கள்
சிவப்புபெண்களைவிட கேவலமாக
அதுதெரியாமல் அங்கே
வெள்ளை புன்னகையுடன் "மகாத்மா"

Thursday, August 13, 2009

மௌனம்...


பொல்லாத காதல்
மெல்லிய மௌனம்
வன்மையாக கண்டிக்கிறான்
காதல் கடவுள் !!


காதலின் வேதனை
மதம் பிடித்த
மௌன உரையாடல்கள்
உணராதோ நாம் வாழும்வரை !!

"கவிதை"


நீயோ
அவளோ
அணுகாத
அனுபவிக்காத
"காதல்"
என்னிடத்தில் ஏராளமாய்
இப்படிக்கு
காதல் கவிதைகள் !!

Tuesday, August 11, 2009

அரேபிய ராசாக்கள் V


ஒரு ரியால் கூல்டிரிங்
இரண்டு ரியால் சாக்லேட்
கொஞ்சம் வாழ்த்துக்கள்
அப்பாவான சந்தோஷம்
அடங்கிபோய்டுமா நண்பனுக்கு ..

இப்போ லீவ் இல்லையாம்
இன்னும் மூணுமாசத்ல வராராம்
போட்டோ எப்படியாவது அனுப்பசொன்னார்
மனைவி எடுத்து சொல்கிறாள்
மற்ற சொந்தங்களிடம் ..

ஒற்றையாய் ஆராரோ பாடும்
அவள் அழுகையின் சப்தம்
இங்கே இவன் தூக்கத்தில்
வெடிக்கும் வார்த்தைகள்
வழியும் கண்ணீரை வந்தடைய
எதைசொல்லி ஆறுதல்படுத்த
ஆளாளுக்கு ஒருயோசனையுடன் ..

தங்கச்சி திருமணம்
நண்பனது மரணம்
தாராளமாய் ரணங்கள்.......................
கிடப்பில் கிடக்கின்றன
இங்குள்ள எல்லோர்க்கும் ..

"அரேபிய ராசாக்கள்
அருவருக்கதக்க தியாகிகள்" .