Tuesday, March 13, 2012

அன்பெனும் தீரா நோய்








ஒரு தற்கொலை முயற்சியில்
ஆழப் பதிந்த பெருவலி
சமணக்காலிட்டு தரையிலமர்ந்து
மிக எதார்த்தமாய் விழுங்கிய முதல்துளி மதுவினை
அநாயாசமாய் ஞாபகத்தில் அரைகிறது

குடித்தப்பொழுது கிடைக்கும் குடிகாரப் பட்டம்
குடி நிறுத்திய பின்பும் பின்தொடர்வது
ஒருவித மனக்கலக்கத்தையும்
அதிலிருந்து பிறழ்வையும்
எளிதில் உருவாக்கிவிடக்கூடிய
அபாயம் உண்டென்பதால்..

பட்டத்தையும் பட்டம் சூட்டுபவர்களையும்
மிக கவனமாகக் கையாள வேண்டும்
இல்லையெனில்
குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு
முந்தையதைக் காட்டிலும்
பேராபத்தான குற்றங்கள் புரியும்
ஆயுதத்தை உங்களுக்குத் தருவிப்பார்கள்
ஓர் எளிய புன்னகையோடு

அப்பொழுதும் அவர்களை அமைதியாகவே
எதிர்கொள்ள வேண்டும்
தவறினால்
காய்ந்த முந்திரி,சாக்லேட் போன்றவைகளாலான
ஒரு அருமையான சுவையுடைய ஐஸ்கிரீமென
அவமானத்தின் தலைகுனிவை
ருசித்து உண்ணப் பணிப்பார்கள்..

அத்தருணம்
ஒரு கொலையாலோ
ஒரு தற்கொலையாலோ
புனையப்பட்டிருக்கும் அவ்-இடம்

மேலும்
அன்பெனும் தீரா நோய்
அங்கும் இங்கும் வேகமாகப் பரவும்
அவ்வளவுதான் வேறொன்றுமில்லை.


நன்றி உயிரோசை..  

No comments: