Friday, March 2, 2012

ஒற்றைப் புறந்தள்ளலில் உலகை ஒடித்தல்

தெய்வத்தின்  சன்னமான குரலில்
சீழ் வடிந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில்
நீ எதை நிரூபிக்க இத்தனைப் 
பிரயாசையோடு எத்தனிக்கிறாய் 

மனம் ஒரு பெருங்கிடங்கி 
உனது அனுமானங்களையெல்லாம்
அதனில் இட்டு வை 

மதுவைக் குடித்து 
பெண்ணைத் தின்று 
அடுத்த கணத்திற்கு குரூரமாய் முன்னேறு 

பனிக்குடம் உடைந்து அலறும் மகப்பேறு
 பெண்ணின் அவ்வொலியை
 இசைக் குறிப்பெனக் குறிப்பெடு

அவர்கள் இப்படித் தான் 
 யாரையும் எதற்கெனினும் எப்பொழுதும்
 குற்றம் கூறிக் கொண்டுதானிருப்பார்கள்   

நீ உன் குற்றத்தை 
முலைக்கழும் கைப்பிள்ளையின்
தசை திருகி வெடிச்சிரிப்போடு கடந்து செல்

நீ எத்தனை முறை எப்படிக் கூவினாலும் 
மனம் பிறழ்ந்தவனென உன்னை 
யாரும் அடையாளப்படுத்தமாட்டார்கள்

ஒவ்வொருவரும் தங்கள் முக மூடியை 
தெய்வத்தின் சீழ் வடியும் குரலிலிருந்து 
அவ்வளவு தத்ரூபமாய் செய்து வைத்திருக்கிறார்கள் 

ஒரு நிசப்தமான இரவில் 
 முட்டக் குடித்துவிட்டுநீயே
தற்கொலை செய்துகொள் உன்னை.


நன்றி உயிரோசை 




No comments: